கொழும்பிலும், சுற்றுப் புறங்களிலுமிருந்து சேகரிக்கப்படும் குப்பை கூழங்களை மீதொட்டமுல்ல பிரதேசத்தில் பாரியளவில் கொண்டு சென்று குவிப்பதன் விளைவாக அசுத்தம் காரணமாக சூழல் மாசடைந்து வருவதனால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக உரிய தீர்வுகளைக் காணுமாறு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், தமது அமைச்சின் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், அங்கு குப்பைகளைக் கொட்டுமிடத்தில் வசிக்கின்ற மக்களுக்கு சுகாதாரப் பாதிப்பு ஏற்படுவதற்கான சூழ்நிலையைப் பொறுத்து அவர்களுக்கு மாற்று இடங்களில் வசிப்பதற்கான வசதிகளை செய்து கொடுப்பது பற்றி அதிக கவனம் செலுத்துமாறும் அமைச்சர் ஹக்கீம் தமது அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
திங்கள்கிழமை (06) முற்பகல் பத்தரமுல்ல, 'செத்சிறிபாயவில்' அமைந்துள்ள நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சில் நடைபெற்ற உயரதிகாரிகளுடனான முக்கிய கலந்துரையாடலொன்றின் போதே அமைச்சர் ஹக்கீம் இவற்றைத் தெரிவித்துள்ளார்.
மீதொட்டமுல்லப் பிரதேசத்தில் குப்பைகள் கொட்டப்படுமிடம் மலைக்குன்று போல உயர்ந்து காணப்படுவதால் அசுத்தங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் ஏறிச் செல்ல முடியாமல் பழுதடைந்து விடுவதால் தொடர்ந்தும் அங்கு குப்பைகளைக் கொண்டு சென்று கொட்டுவதும் பிரச்சினைக்குரியதாக மாறியிருப்பதாக அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறு குப்பைகள் நாளாந்தம் குவியும் விவகாரம் பாரிய பிரச்சினையாக உருவாகியிருப்பதால் இதற்கு நிரந்தரமான தீர்வைக் காண வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர் ஹக்கீம், சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்தலோசித்து உரிய நடவடிக்கைகளை இயன்றவரை துரிதமாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளைப் பணித்தார்.
மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குப்பை கூலங்களும், ஏனைய கழிவுப் பொருட்களும் குவிவதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும், அவர்களது உடல் நலனுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உடனடியாக இன்றைய தினமே அங்கு சென்று நிலைமையை அவதானித்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளை அவர் பணித்தார். குப்பை கொண்டு செல்லும் பழுதடைந்த வாகனங்களை செப்பனிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும், புதிதாக வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான வழிவகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரோடு கலந்துரையாடி மேற்கொள்ளுமாறும் அவர் கூறினார்.
இக்கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் பீ.சுரேஸ், உபாய நகர அபிவிருத்தி செயல்திட்டப் பணிப்பாளர் அனுர தசநாயக்க உட்பட நகர அபிவிருத்திகார சபை, காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், கொழும்பு மாநகர சபை ஆகியவற்றின் உயரதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றினர்.
