ஊடகப்பிரிவு-
கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்-ஹாபிழ் நஸீர் அகமட் அவர்களின் புனித திருக்குர்ஆன் மீதான பற்றும் அதன்மீது அவர் கொண்டிருந்த தீராத ஆசையும் நெருக்கமும்தான் தனது சிறுபராயத்திலேயே அதனை மனனம் செய்து கிழக்கு மாகாணத்தின் முதலாவது ஹாபிழ் ஆக அவர் திகழ்வதற்கு காரணமாக அமைந்தது.
தனது தந்தையின் இறுக்கமான ஒழுக்கநெறிக் கோவையில் வளர்ந்து வாழ்க்கையின் அடித்தளமாக திருக்குர்ஆனை அவர் கைக்கொண்டதே அவரின் உயர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. திருக்குர்ஆனின் கண்ணியமும் மகிமையும்தான் இந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற மகுடத்தினை அவருக்கு சூட்டியிருக்கின்றது.
எல்லாம்வல்ல இறைவனின் திருக்குர்ஆனை கண்ணியப்படுத்தியமைக்காக வழங்கிய சன்மானமே இந்த கிழக்கு முதல்வர் எனும் கொடையாகும். திருக்குர்ஆனை கண்ணியப்படுத்துபவர்களை இறைவன் கண்ணியப்படுத்துவான் என்பதற்கு இதுவோர் சிறந்த எடுத்துக் காட்டாகும்'
இவ்வாறு முன்னாள் ஜாமிஆ நழீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளரும், சி.ல.மு.காங்கிரசின் உச்சபீட உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஜனாப்.எஸ்.எல்.எம்.பழீல் அவர்கள் பாலமுனையில் நடைபெற்ற விளையாட்டு மைதான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
01 அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சிலின் தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசல் காசிம் பிரதம விருந்தினராக இதில் கலந்து சிறப்பித்தார்.
ஜனாப். பழீல் அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில்;
கடந்த வருடம் டிசம்பர் ஜனவரி 8ம் திகதியிலிருந்து இன்று வரை இலங்கை அரசியலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அத்தனை மாற்றங்களும் இந்நாட்டு முஸ்லிம்களின் துஆப்பிரார்த்தனைகளுக்கு இறைவனின் நேரடி பதிலாகவே நாம் கணிக்க வேண்டியுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் ஜனவரி 8ம் திகதியிலிருந்து இன்று வரை இலங்கை அரசியலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அத்தனை மாற்றங்களும் இந்நாட்டு முஸ்லிம்களின் துஆப்பிரார்த்தனைகளுக்கு இறைவனின் நேரடி பதிலாகவே நாம் கணிக்க வேண்டியுள்ளது.
இந்த அற்புத அரசியல் மாற்றங்களின் மற்றுமொரு விளைவுதான் கிழக்கு மாகாண ஆட்சியமைப்பிலேற்பட்ட அதிரடி மாற்றமாகும். தேசிய நல்லாட்சி மாற்றத்தின்மூலம் ஏற்பட்ட ஜனநாயக சாதக சூழ்நிலைகளை சி.ல.மு.காங்கிரஸும் அதன் சமகாலத் தேசியத் தலைவரும், கௌரவ நகர அபிவிருத்தி நீர்வழங்கல் அமைச்சருமான மாண்புமிகு ரஊப் ஹக்கீம் அவர்கள் பக்குவமாக தமிழ் கூட்டணியுடன் கையாண்டதன் நேரடி விளைவுதான் இன்று கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய கூட்டு அமைச்சரவையும் நல்லிணக்க ஆட்சியுமாகும்.
எமது பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் வடகிழக்குத் தீர்விலே முஸ்லிம்களுக்கான தென்கிழக்கு அலகு, அதற்கான முதலமைச்சர் என்று தனது எதிர்கால இலட்சியக்கனவுகளை வென்றெடுப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அதன் தலைவர்களுடன் தொடர்ந்தேர்ச்சியான பேச்சுக்களை மேற்கொண்டு வந்தார். ஆனால் அவை கைகூடுமுன்பே இறைவனின் ஆணை அவரை அரவணைத்துக்கொண்டது.
ஆனால் இந்த சமுதாய அமானிதத்தை பாரமேற்றுக்கொண்ட சமகாலத்தலைவரின் பக்குவமான, சாணக்கியமான அரசியல் காய்நகர்த்தல்கள்தான் இன்று கிழக்கிலே சி.ல.மு.காங்கிரசினூடாக ஒரு முதலமைச்சரை பெற்றுத் தந்திருக்கின்றது. இந்த முதலமைச்சர் இந்நாட்டு தமிழ், முஸ்லிம்களின் அடையாளமும் பூர்வீகச் சின்னமுமாகும்.
குறிப்பாக கிழக்கிலே இது தமிழ்பேசும் இனத்தின் ஒற்றுமைக்கான வெற்றியுமாகும். இந்த இரண்டு இனங்களும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடு செயற்படுவதன் மூலம் எமது சமுதாயத் துயர்களுக்கான விடிவுகளைத் தேடிக்கொள்ள முடியும் என்ற உண்மையினைப் புலப்படுத்தி நிற்கின்றது. எமது முதலமைச்சரின் அடிப்படை நகர்வுகள் இந்த உயரிய இலக்கை நோக்கி நிற்பது உற்சாகமூட்டும் ஆரம்பமாக அமைந்திருக்கின்றது.