வரலாற்றை எழுதும் போது அது வரலாறாகிறது. ஆனால் அதை திருத்தும் போதும், அதில் உள்ளவைகளை நீக்கும் போதும் அதுவும் வரலாறாகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும், சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி நேற்று முன்தினம் (04) நிந்தவூரில் இடம்பெற்ற 'நிந்தவூர் வரலாறும்,வாழ்வியலும், நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில்;
பொதுவாக முஸ்லிம் கிராமங்களில் இடம்பெறும் அதன் வரலாற்று மற்றும் பாரம்பரியங்கள் பற்றிய நிகழ்வுகள் அந்தந்த கிராமங்களில் காணப்படும் ஜும்மா பள்ளிவாசல்களை மையப்படுத்தியே நடாத்த வேண்டும். வரலாற்றை எங்கேயும் நிறைவு செய்து கொள்ள முடியாது. இந்த நாட்டைப் பொறுத்தவரையில் 2300 வருடங்களுக்கும் மேலாக மஹாவம்சம் தொடர்ச்சியான வரலாற்றை பேணி வருகின்றது. ஆனால் அதிலும் சில தவறுகள் காணப்படுவதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
எனவே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றை வரலாற்று ஆசிரியர்களால் கேள்விக்குள்ளாகும் போது அதுவே வரலாறாகிறது. அண்மைக்கால சம்பவத்தில் கடந்த 2009ம் ஆண்டு கொடிய பயங்கரவாத யுத்தம் முடிவடைந்ததன் பிறகு உத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வந்த பீல்ட் மார்ஷல் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களின் வரலாறு அடங்கிய இரண்டு பக்கங்கள் அந்த மஹாவம்சத்தில் சேர்க்கப் பட்டிருந்தது. பின்னர் அவர் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத்தழுவியதன் பிறகு அந்த வரலாற்றுப் பதிவுப்புத்தகத்தில் இருந்த அவரின் இரண்டு பக்கங்களும் நீக்கப்பட்டிருந்தது. எனவே வரலாறுகள் அந்தந்த காலத்தில் உள்ள மன்னர்களின் விருப்பத்திற்கேற்பவே பதிவு செய்யப்பட்டிருந்தன என்பதற்கு சரத் பொன்சேகாவின் சம்பவம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
மேலும் இங்கு வெளியிடப் பட்டுள்ள 'நிந்தவூர் வரலாறும், வாழ்வியலும்' நூல் பற்றிய விமர்சனங்களை தவிர்த்துக்கொண்டு இதில் காணப்படும் குறைகளை எல்லோரும் சேர்ந்து திருத்திக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு வருடமும், அல்லது இருவருடங்களுக்கு ஒருமுறை இந்த புத்தகம் முதலாம் பதிப்பு, இரண்டாம் பதிப்பு எனும் பெயரில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டு விரிவடைந்து செல்ல வேண்டும்.
எனவே நிந்தவூரின் வரலாற்று விடயத்தில் அவைகளைக் கையாளுவதற்கு நிந்தவூர் ஜும்மாப் பள்ளிவாசலில் குழுவொன்று அமைக்கப் பட்டு அந்த குழுவே தொடர் வரலாற்றுப் பதிவுகளை நடைமுறைப் படுத்தவேண்டும். மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியினால் நிர்மாணிக்கப் பட்டுக்கொண்டுவரும் எம்.எச்.எம்.அஷ்ரப் ஞாபகார்த்த மண்டப நிர்மாணப்பணிகள் நிறைவு பெற்ற போது அதன் மூன்றாவது மாடியில் நிந்தவூர் பற்றிய ஆவணக் காப்பகம் (Muesioum) நிறுவப்படும் என்று குறிப்பிட்டார்.

