முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அங்கம் வகித்த சில உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களை மகிந்த விமர்சித்து வருகிறார்.
அவ்வாறு விமர்சனங்களை முன்வைக்கும் முன்னாள் ஜனாதிபதி, தனது ஆட்சிக்காலத்தில் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களை தற்போதைய அரசாங்கம் நிறுத்தியுள்ளதாகவும் ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளால், வறிய மற்றும் குறைந்த பொருளாதார நிலைமையில் வாழும் மக்களின் குடும்பங்கள் எதிர்வரும் புதுவருடத்தை கொண்டாட முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தித் திட்டங்களில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் கபீர் ஹசீம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், தனக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்துவது தற்போதைய அரசாங்கத்தின் பழக்கமாக இருந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
தரமான நடைமுறைகளில் கூட நிதி முறைகேடுகள், துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக தற்போதைய அரசாங்கம் முத்திரை குத்தபார்ப்பதாகவும் மகிந்த ராஜபக்சவின் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கம் கடந்த கால கதைகளை பேசி நேரத்தை வீணாக்காது மக்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும்.
தனது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தவறான தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே தற்போதைய அரசாங்கம் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
