அரசு சவால்களுக்கு முகம் கொடுத்து, தீர்க்கமான முடிவுகளை மேற்கொண்டு வருகிறது- அமைச்சர் ஹக்கீம்

புதிதாக தலைதூக்கும் சவால்களுக்கு முகம் கொடுத்த வண்ணம், தீர்க்கமான முடிவுகளை மேற்கொண்டு நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்வதற்கும், கிராமங்களை நகரங்களாக பரிணமிக்கச் செய்வதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் புதிய அரசாங்கம் தற்பொழுது தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. என நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

பத்தரமுல்லை, வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் திங்கள் கிழமை (06) முற்பகல் ஆரம்பமான இலங்கை நகர அபிவிருத்தி துறை அதிகாரிகள் பங்குபற்றும் சிறப்புத் திறன் மேம்பாடு தொடர்பான மூன்று நாள் செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். 

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு சிங்கப்பூர் ஒத்துழைப்பு நிறுவனம், 'ரெமாசெக்' ஆதார மன்றம் , வாழத்தகு நகரங்களின் மையம் என்பன இணைந்து கூட்டாக ஏற்பாடு செய்திருந்த இச் செயலமர்வின் பயனாக நகர அபிவிருத்தி நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்ட 150 அதிகாரிகள் பயனடைகின்றனர். 

அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது;

சிங்கப்பூரை உலகின் அதிநவீன முன்னணி நகரங்களில் ஒன்றாகக் கட்டியெழுப்பிய லீ குவான் யூ சில தினங்களுக்கு முன்னர் உலகை விட்டுப் பிரிந்தார். அந்த சிங்கப்பூரின் சிற்பியின் மறைவையிட்டு உலக மக்கள் கவலையடைந்து அவரை நினைவு கூர்ந்தனர். 

அவர் இலங்கையைப் போன்று சிங்கப்பூரை அபிவிருத்தியடைச் செய்ய வேண்டுமென்று 1960 ஆம் ஆண்டு கூறியிருந்தார். ஆனால், நிலைமை மாறிவிட்டது. ஆனால், முற்றிலும் எதிர்பார்க்காதாவாறு லீ குவான் யூ வின் வழிகாட்டலில் சிங்கப்பூர் குறுகிய காலத்திற்குள் துரிதமாக அபிவிருத்தியடைந்து விட்டது. 

சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கான அனுபவ ரீதியான காரணிகளை எங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக அந் நாட்டு நிபுணர்கள் இங்கு வந்துள்ளனர். 

முப்பது ஆண்டு காலம் நீடித்த யுத்தத்தின் காரணமாக நமது நாடு மிகவும் பின்னடைய நேர்ந்தது. நாடு பின்தங்குவதற்கு அதிகளவிலான அரசியல் தலையீடுகளும் ஊழல்களும், கூட காரணங்களாக இருந்துள்ளன. 

புதிய அரசாங்கத்தில் நாடு அபிவிருத்திப் பாதையில் முன்னேறிச் செல்லும் சந்தர்ப்பத்தில் சிங்கப்பூரை சிறந்ததொரு முன் உதாரணமாக கொண்டு நகர நிர்மாணத்துறையோடு தொடர்புடைய இலங்கை அதிகாரிகள் தங்களை கூடுதல் செயல் திறன் மிக்கவர்களாக வடிவமைத்துக் கொள்வதற்கு இந்த செயலமர்வு நிச்சயம் உதவுமென நான் நம்புகின்றேன் என்றார். 

இச் செயலமர்வில் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி, பாரிய கொழும்பு அபிவிருத்தி செயல்திட்ட பணிப்பாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்ன மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஆகியோரும் உரையாற்றினர். 

கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், கல்முனை மேயர் நிஸாம் காரியப்பர், நகர அபிவிருத்தி சபையின் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ, பணிப்பாளர் நாயகம் நயன மாவில்மட, காணி மீட்பு அபிவிருத்தி கூட்டுத்தாபன பொது முகாமையாளர் சிரிமதி சேனாதீர ஆகியோர் உட்பட பலர் இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர். 

டாக்டர் ஏ.ஆர்.ஏ ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -