த.நவோஜ்-
கிழக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சர் சந்திரகாந்தனும், முன்னாள் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் முரளிதரனும் ஊழலில் இருந்து தப்ப முடியாது. அவர்களின் அறிக்கையினை நான் கொடுப்பேன். பல வேலைத்திட்டங்களில் ஒப்பந்தங்கள் அவரின் உறவரினர்களே செய்தார்கள். பத்து இலட்சம் ரூபாய் வேலைத்திட்டத்தில் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் ஆதரவாளர் இலஞ்சம் பெற்றுள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பால்சேனை மற்றும் நாகபுரம் கிராமத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மக்கள் சந்திப்பின் பொருட்டு சனிக்கிழமை விஜயம் செய்து மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்!
நாங்கள் எமது மக்கள் சார்பாக பல நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றவர்கள். கடந்த காலங்களில் அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய எங்களுக்கு மக்களுக்கு சேவை செய்யும் அளவிற்கு ஆதரவு தரவில்லை. இருப்பினும் எமது மக்களுக்காக இயன்றளவு சேவையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாம் மேற்கொண்டுள்ளோம்.
கடந்த காலத்தில் எமது மாவட்டத்திலேயே மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் இருந்தவர். ஆனால் அவரினால் மீள்குடியேற்ற அமைச்சு மூலம் எமது மக்களுக்கு ஒரு வீடு கூட கட்டிக் கொடுக்கப்படவில்லை. எமது பகுதியில் கட்டப்பட்டவை இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டவையாகவும், தொண்டர் நிறுவனங்களினால் கொடுக்கப்பட்டவையாகவுமே இருக்கின்றன.
தற்போது அரசாங்கத்தின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை முன்னிலையாகக் கொண்டு வடக்கு கிழக்கில் செயற்பாடுகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி அவர்கள் வெற்றி பெற்றது வடக்கு கிழக்கில் வாழும் எம் மக்களால் தான் என்பதை யாவரும் அறிவர். ஏனெனில் சிங்கள மக்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு பெருந்தொகையான வாக்குகளை வழங்கியுள்ளனர். எமது மக்கள் கடந்த காலத்தில் எமது இனத்துக்கு செய்த அநீதிக்கு முன்னாள் ஜனாதிபதிக்கு வாக்கு மூலம் தண்டணை கொடுத்திருக்கின்றார்கள்.
முன்பிருந்த அரசாங்கம் எல்லா இடத்திலும் ஊழல், இதில் எமது முன்னாள் முதலைமைச்சர் சந்திரகாந்தனும், மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் முரளிதரனும் தப்ப முடியாது அவர்களின் அறிக்கையினை நான் கொடுப்பேன். பல வேலைத் திட்டங்களை அவர்களின் உறவுகளே மேற்கொண்டிருக்கினறனர். சில நிதி மோசடிகளும் உண்டு. கிழக்கின் உதயம் என்ற ரீதியில் பாதிக்கப்பட்ட எமது பகுதிக்கு 250 மில்லியன் பணம் ஒதுக்கப்பட்டது. இதனை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்த பொருளாதார பிரதியமைச்சர் அவர்கள் 200க்கு மேற்பட்ட மில்லியன்களை முஸ்லிம்கள் நலன் கருதி முஸ்லீம் பிரதேசங்களுக்கு ஒதுக்கியுள்ளார். இதற்கு அதிகாரிகள் சிலரும் துணைபோயுள்ளனர்.
இதனை நான் பாராளுமன்றத்தில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளேன். அது மட்டுமல்லாது இவ்வாறானவர்களுக்கு எம் தமிழ் மக்களும் வாக்களிக்கும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இச்செயற்பாடு எமது தமிழர்களின் பிரதி நிதித்துவத்தை பாதிக்கின்றது.
இன்று எமது தமிழ் பகுதியில் திட்டமிட்ட வகையில் முஸ்லிம் அரசியல் வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்கள் எம்மால் முறியடிக்கப்பட்டன. முன்பு வாகரையின் 17 தமிழ் கிராமங்களைச் சேர்த்து ஓட்டமாவடியை ஒரு நகர சபையாக ஆரம்பிப்பதற்கு முயற்சி செய்தார்கள். இதற்கு நாங்கள் எதிர்த்து நின்றோம் ஆனால் முன்னால் முதலமைச்சர் தான் பதவியில் இருக்கும் போது இதற்கு அனுமதித்து கையொப்பம் இட்டிருந்தார். ஆனால் தற்போது மீண்டும் முயற்சிகள் நடைபெறுதாக அறிகின்றோம். இதற்கு ஒரு போதும் அனுமதியோம். முஸ்லிம் மக்களை மாத்திரம் கொண்டு ஓட்டமாவடி நகர சபையாவதை நாம் எதிர்க்க மாட்டோம்.
தேர்தல்களின் பின் அரசாங்கம் எங்களுக்கு அமைச்சுப் பதவியைத் தந்தார்கள் ஆனால் அதனை நாம் எற்கவில்லை எமக்கு அமைச்சுப் பதவி தேவையில்லை 100 நாட்களுக்கு அமைச்சுப் பதவியை எடுத்து நாம் எமது மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது நாம் எமது மக்களை ஏமாற்ற முடியாது நிலையான அரசாங்கம் வந்த பின்னர் அது பற்றி சிந்திப்போம் நாம் எமது மக்களின் அரசியல் தீர்வு பிரச்சினை தீர்ப்பதற்கே போராடிக் கொண்டிருக்கின்றோம்.
முன்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிராகவே முஸ்லீம் காங்கிரஸ் வாக்கு கேட்டது. இதனாலேயே அவர்கள் 7 ஆசனத்தை பெற முடிந்தது. எமது தமிழ் மக்களும் இவ்வேளை முஸ்லீம்களுக்கு வாக்களித்திருக்கின்றார்கள். ஆனால் ஒரு முஸ்லீம் பிரஜையும் தமிழர் ஒருவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். எமது தமிழர்கள் தான் இவ்வாறான மோசமான செயல்களை மேற்கொள்கின்றனர். வாக்கு என்பது எமது உரிமை இதனை சரியான முறையில் எமது தமிழினத்திற்கு கொடுக்க வேண்டும். இதை எம் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு எமது மக்கள் எமது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சரியான முறையில் வாக்களிக்காமையினாலேயே கிழக்கு மாகாண சபை தேர்தலில் நாங்கள் மட்டக்களப்பில் 09 ஆசனங்களைப் பெறக் கூடிய நிலையில் இருந்தும் 06 ஆசனங்களைப் பெற்றோம். திருகோணமலையில் 05 ஆசனங்களைப் பெறக் கூடிய நிலையில் இருந்தும் 03 ஆசனங்களைப் பெற்றோம், அம்பாறையில் 03 ஆசனங்களைப் பெறக் கூடிய நிலையில் 02 ஆசனைங்களை மாத்திரம் பெற்றுள்ளோம். இவ்வாறு நாம் பெற வேண்டிய ஆசனங்களை முறையே பெற்றிருந்தால் இன்று எவரின் ஆதரவும் இல்லாமல் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைத்திருப்போம்.
ஆனால் நாங்கள் 11 ஆசனங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு எவ்வாறு பிறரின் உதவி இன்றி மாகாண சபையை கைப்பற்றுவது. இதனால்; நாம் பலரிடம் உதவி கேட்டோம் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடனும் பேசினோம். மூன்று தடவை மூஸ்லிம் காங்கிரஸ் உடனுன் பேசினோம். ஆனால் அவை சாத்தியப்படவில்லை. இவ்வேளை சுசில் பிறேமஜயந்த அவர்கள் மூலம் முன்னாள் ஜனாதிபதியுடன் பிள்ளையான், இனிய பாரதி போன்றோர் சேர்ந்து கொண்டனர். அவர்கள் முஸ்லீம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு கையொப்பம் இட்டுவிட்டு தான் சம்மந்தன் ஐயாவைச் சந்திக்க வந்தார்கள்.
எனவே பிள்ளையானின் தற்போதைய செயற்பாட்டால் தான் ஒரு முஸ்லீம் நபர் முதலமைச்சராக்கப்பட்டார். நாங்கள் அதன் பின் பல முயற்சி செய்தோம். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்டத்தின் சிங்கள மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தான் ஏப்பிரல் மாதம் வரை முதலமைச்சராக இருப்பதாகவும் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தருவவதாகவும் கூறி எங்களிடம் பேச வந்தார். நாங்கள் யாரும் விருப்பா விட்டாலும் தற்போதைய சூழல் கருதி பேச வேண்டி ஏற்பட்டது.
இந்நிலையில் திடீரென தற்போது முஸ்லீம் காங்கிரஸ் மீண்டும் எங்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். நாங்களும் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றோம். இந்தப் பிள்ளையான் இனிய பாரதி ஆகியோர் அவர்களுடன் சேராமல் இருந்திருந்தால் முஸ்லிம் காங்கிராஸ் ஆட்சியமைக்க முன்வந்திருக்க முடியாது. இவர்களுக்கு 19 ஆசனம் கிடைத்திருக்க மாட்டாது.
நாங்கள் மற்ற பிரதிநிதிகள் போல்; அல்ல நாம் எந்த ஊழலுக்கும் இடமளிப்பதில்லை சேவையாகவே செய்வோம். இதனாலேயே மக்களிடம் வாக்குப்பிச்சை கேட்டு வெற்றி பெற்று விட்டு மக்களையே சுரண்டும் அரசியல்வாதிகளை எதிர்க்கின்றோம். அதுமட்டுமின்றி இந்த வாகரை பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தால் பல பெரிய படகுகள் வழங்கி வைக்கப்பட்டது. ஆனால் அவை எங்கு சென்றது என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்களும், அவர்களது உறவுகளுமே பெரும்பாலான படகுகளை வைத்து உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்டதாகும். இதை தனி நபர் வைத்து உழைக்கவோ, விற்கவோ முடியாது. இவ்விடயமாக விசாரணை நடாத்துவேன் என தெரிவித்தார்.
இவ் மக்கள் சந்திப்பில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை பாராளுமன்ற உறுப்பினர் கவனத்துக்கு கொண்டு வந்தனர். சிலருக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)