கிழக்கு மாகாண சபை ஆட்சி தொடர்பில் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் எத்தகைய ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட வில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆட்சி அமைப்பது தொடர்பில் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதா?என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;
எவ்வித ஒப்பந்தமும் என்னுடன் செய்யப்படவில்லை. நான் அவ்வாறானதொரு ஒப்பந்த செயல்முறையில் பங்குபற்றவுமில்லை. இவ்வொப்பந்தம் செய்யப்பட்டதா? இல்லையா? என்பது பற்றி யான் பேசத்தயாராயில்லை. யாராவது அப்படியொரு ஒப்பந்தம் செய்திருந்தால் அது விரைவில் வெளிவரும். இது தொடர்பில் விளக்கமளிக்க எதிர்வரும் சனிக்கிழமை காலை எமது கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் சகிதம் ஒன்று கூடவுள்ளோம்.
கிழக்கு மாகாண சபையில் ஜனாதிபதித் தேர்தலின் போது இருந்த ஆட்சி ஒழுங்கு பெரும்பான்மைப் பலத்தை இழந்து மாற்றம் அடைந்து காணப்பட்டது. இதன் நிமித்தம் கிழக்கு மாகாண சபையில் ஒரு புதிய ஆட்சி அமைப்பது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.
ஆனால் அந்த பேச்சுவார்த்தை கட்சியின் தலைவர்கள் கொண்ட உயர் மட்ட பேச்சு வார்த்தையாக இருந்தும் கூட ஒரு இணக்கப்பாடு ஏற்படவில்லை. காரணம் என்னவென்றால் 2012 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது தேர்தலுக்கு முன்னும் தேர்தலுக்குப் பின்னும் ஒரு கூட்டாட்சி அமைப்பதற்காக அதாவது த.தே. கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக்கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் அன்றைய அரசாங்கத்தை எதிர்த்துப் போட்டியிட்ட மூன்று கட்சிகளும் கூட்டாக சேர்ந்தே ஆட்சியமைக்க நாங்கள் தயாராக இருந்துங்கூட முதல் அமைச்சர் பதவியை அடைவதற்காக மஹிந்த ராஜபக்ஷ அரசு கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைத்து விடக்கூடாது என்பதற்காக நாம் முதல் அமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸூக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தோம்.
ஆனால் எமது கோரிக்கையை நிராகரித்து விட்டு முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் போட்டியிட்டு எந்த அடிப்படையில் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றார்களோ அதற்கு மாறாக மஹிந்த ராஜபக்ஷ வின் கூட்டுடன் போய் இணைந்து கிழக்கின் அதிகாரத்தை கைப்பற்றினார்கள்.
இது மிகவும் ஓர் தவறான செயலாகும். கிழக்கு மாகாண மக்களுக்கு மாறாக விஷேஷமாக முஸ்லிம் மக்களுக்கு மாறாக இழைக்கப்பட்ட மாபெரும் தவறு என்று தான் நான் கருதினேன். இது நடைபெற்றது முஸ்லிம் மக்களுக்காக அல்ல தமிழ் பேசும் மக்களுக்காக அல்ல தங்கள் சுயநலத்துக்காக.
2015 தற்பொழுது ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டு புதிய ஆட்சி முறைமையை கிழக்கில் அமைக்க நாங்கள் முயற்சித்த போது நாங்கள் முன் வைத்த கோரிக்கை என்னவென்றால் மக்களின் ஜனநாயக தீர்வின்படி நாங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி எங்களை விட 6150 வாக்குகள்தான் கூடுதலாகப் பெற்றிருந்தார்கள். குழறுபடி காரணமாகத்தான் அந்த வாக்கையும் அவர்கள் பெற்றிருந்தார்கள். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் 2012ஆம் ஆண்டு தேர்தலில் 61 ஆயிரம் வாக்குகளையே பெற்றிருந்தது.
மாகாண ரீதியாக இருக்கின்ற மூன்று மாவட்டங்களில் திருமலையிலும் மட்டக்களப்பிலும் த.தே. கூட்டமைப்பு முதலிடத்தையும். முஸ்லிம் காங்கிரஸ் திருமலை மட்டக்களப்பு மாவட்டங்களில் மூன்றாம் இடத்திலும் அம்பாறையிலும் வந்திருந்தது. முஸ்லிம் காங்கிரஸ் எந்தவொரு இடத்திலும் முதலிடத்தைப் பெறவில்லை.
இந்தக் காரணத்தின் நிமித்தம் மக்களின் ஜனநாயக தீர்வின் பிரகாரம் முதல் அமைச்சர் பதவி எமக்கு தர வேண்டுமென அண்மையில் கோரியிருந்தோம். தூரதிஷ்டவசமாக மக்களின் ஜனநாயக முடிவை ஏற்று நல்லதொரு முடிவுக்கு வரக் கூடிய பக்குவம் முஸ்லிம் காங்கிரஸிடம் இருக்கவில்லை. அவர்கள் யாரை எதிர்த்து ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார்களோ அவர்களுடன் சேர்ந்து ஒரு பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடிய வகையில் ஒன்று கூடி கிழக்கின் முதல் அமைச்சரை சத்தியப் பிரமாணம் செய்ய வைத்திருக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் நஸீர் அகமட் சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.
இச்சூழ்நிலையில் எமது மாகாண சபை அங்கத்தவர்களை முஸ்லிம் காங்கிரஸ் அழைத்திருந்தார்கள் தங்களுடன் பேசும்படி மாகாண சபை உறுப்பினர்கள் தலைமைப் பீட அனுமதி பெற்று பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கும் அனுமதி வழங்கினோம்.
அவ்வகை பேச்சுவார்த்தைகள் பல நடைபெற்றன. அந்த பேச்சுவார்த்தையின் முடிவுகள் இன்னும் பகிரங்கமாக வெளிவரவில்லை. ஆனால் எமது உறுப்பினர்களின் எண்ணங்கள் என்னவென்றால் மாகாண ஆட்சி நல்ல முறையில் நடைபெற வேண்டும்.
இன வித்தியாசங்களுக்கு அப்பால் முறையான ஆட்சி சிறப்பான ஆட்சி நடைபெற வேண்டும். அதற்கு தாங்கள் ஒத்துழைக்க வேண்டுமென த.தே. கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் கருதுகிறார்கள் என நான் அறிகிறேன்.
அவர்களின் மேற்படி கருத்தை நாம் உதாசீனம் செய்யமாட்டோம். ஆனால் அதே சமயம் கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் விசேஷமாக கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் ஜனநாயக ரீதியில் வழங்கப்பட்ட தீர்வின் அடிப்படையில் எமது கோரிக்கை எமது வேண்டுகோள் நியாயமானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதற்காக இந்த உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டிய தேவையுள்ளது. இது 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு மீண்டும் நடைபெற்றிருக்கிறது. தொடர்ந்து நடைபெறுவதற்கு நாம் இடமளிக்க முடியாது. ஆகவே கிழக்கு மாகாணப் பிரச்சினைக்கு எவ்விதமான தீர்வைக் காணலாம் என்பது பற்றி நாங்கள் சிந்திப்போம். ஆராய்வோம்.
