இதுவரை காலமும் பதிவு செய்யப்படாத அனைத்து பள்ளிவாசல்களையும் உடன் பதிவு செய்யும் திட்டம் ஒன்றை அமுல் படுத்த உள்ளதாக தபால் துறை, மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
அக்குறணை கசாவத்தை என்ற இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட வரவேற்பு வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
கடந்த ஆட்சி காலத்தில் இந்நாட்டு முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்தனர். பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. இவை எதற்கும் அன்றைய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாது பாரா முகமாக இருந்தது.
நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் அதிகமானவை இன்னும் முறையாக பதிவு செய்யப்பட வில்லை என்பது புள்ளி விபரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. ஆகவே இது வரை பதிவு செய்யப்படாத அனைத்து பள்ளிவாசல்களையும் துரிதமாக பதிவு செய்யும் திட்டம் ஒன்று அமுல் படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த ஆட்சி காலத்தில் வேண்டுமென்றே பள்ளிவாசல்கள் பலவற்றைப் பதிவு செய்வதை தாமதமாக்கி உள்ளமையும் தெரிய வந்துள்ளது.
எமது புதிய திட்டத்தின் படி பள்ளிகளைப் பதிவு செய்வதற்கான ஒழுங்கு விதிகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன. முன்னைய தேவையற்ற பல்வேறு கெடுபிடிகள் தளர்தப்பட்டுள்ளன.
இதனை ஒரு அரிய சந்தர்ப்பமாகக் கொண்டு ஜனாதிபதி வழங்கியுள்ள சலுகையைப் பயன் படுத்திக் கொள்ளும் படி அவர் வேண்டிக் கொண்டார். மேலதிக விபரம் தேவைப்படுவோர் அமைச்சுடனோ அல்லது அமைச்சு அதிகாரிகளுடனோ தொடர்பு கொண்டு இப்பணியை பூரணப் படுத்த உதவுமாறு அவர் வேண்டிக் கொண்டார்.
