"மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களாக மாத்திரம் இருந்து விடாமல்: அதற்காக உழைக்கவும் வேண்டும்-NFGG

"மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களாக மாத்திரம் இருந்து விடாமல் அதற்காக உழைப்பவர்களாகவும் ஒவ்வொருவரும் மாற வேண்டும்" கட்டாரில் NFGG பிரதிநிதிகள்

'நம் நாட்டில் நல்லதொரு ஆட்சி மாற்றம் வேண்டுமென அனைவருமே எதிர்பார்க்கின்றனர். ஆனால் இதனை எதிர்பார்ப்பவர்களாக மாத்திரம் இருப்பதனால் எதனையும் சாதிக்கமுடியாது. இந்த மாற்றத்திற்காக உழைப்பவர்களாக எல்லோரும் மாற வேண்டும். அப்பொழுதுதான் இதனை ஒரு மக்கள் வெற்றியாக அடைய முடியும்' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் கட்டாரில் தெரிவித்தனர்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர்ரஹ்மான் மற்றும் அதன் பொதுச் செயலாளர் MR.நஜா முஹம்மட் ஆகியோர் கடந்த 12ம் திகதி விஷேட இரண்டு நாள் விஜயமொன்றினை கட்டாருக்கு மேற்கொண்டிருந்தனர். கட்டாரில் தொழில் புரியும் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்களுடன் பல்வேறு சந்திப்புகளை அவர்கள் மேற்கொண்டனர். இந்த சந்திப்புகளின்போது உரை நிகழ்த்திய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்ததாவது...

"யுத்தம் முடிந்த கடந்த 5 ஆண்டு காலப்பகுதியானது, நம் நாட்டிற்கு மிக முக்கியமான ஒரு காலகட்டமாகும். இன, மத, மொழி பேதங்களால் உருவான பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு, அனைத்து சமூகங்களும் சக உரிமையோடும், கௌரவத்தோடும், பாதுகாப்போடும், நாம் எல்லோரும் இலங்கையர்கள் என்ற பெருமையோடும் வாழ்வதற்கான புதிய தேசமாக நம் நாடு கட்டியெழுப்பப்பட வேண்டுமென நாட்டு மக்கள் அத்தனை பேருமே ஏக்கத்துடன் எதிர்பார்த்தனர். அதனை செய்வதற்குப் போதுமான ஒரு முக்கியமான காலப்பகுதியாகவே கடந்த 5 வருடமும் இருந்தது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கம் அந்த எதிர்பார்ப்புகளில் ஒரு சிறிதளவையும் நிறைவேற்றவில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான திசையிலேயே நாடு கொண்டு செல்லப்பட்டது. இன்று ஒரு மோசமான, நெருக்கடியான நிலைமை தோன்றுவதற்கு அதுவே காரணமாகும். பயங்கரவாத காலத்தில் இல்லாத அளவு இன, மத முரண்பாடகளும் இன்று வளர்க்கப்பட்டுள்ளன.

சிறுபான்மை மக்களுக்கெதிரான மதத்தீவிரவாதத்தினை இந்த அரசாங்கம் கட்டுப்படுத்த தவறியதன் காரணமாக அளுத்கமை வன்முறை என்ற பயங்கரவாதத்தினையும் படுகொலைகளையும் இந்த நாடு சந்திக்க வேண்டியேற்பட்டது. மீண்டும் மீண்டும் நமது நாட்டு மக்கள் மதங்களின் அடிப்படையிலும் இனங்களின் அடிப்படையிலும் கூறுபடுத்தப்படுகின்றார்கள். சட்டமும் ஒழுங்கும் படுமோசமான நிலைக்குச் சென்றுள்ளது. ஆட்சியாளர்களினதும் அவர்களின் நெருக்கமானவர்களினதும் விடயங்களில் சட்டம் செல்லுபடியாகாது என்ற நிலை தோன்றியிருக்கின்றது.

யுத்தத்திற்கான செலவு இல்லாத சூழ்நிலையிலும் கூட, நாட்டின் பொருளாதாரம் படுமோசமடைந்திருக்கின்றது. அரசாங்கத்தின் கட்டுக்கடங்காத வீண்விரயங்களும் ஊழல் மோசடிகளுமே இதற்குக் காரணமாகும். ஒட்டு மொத்தத்தில் ஜனநாயகம் என்ற பெயரில் அராஜகமான ஆட்சி முறையே உருவாகியிருக்கின்றது. இந்த ஆட்சி முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாவிட்டால், நாட்டின் ஒட்டு மொத்த எதிர்காலமுமே பாழாகி விடக்கூடிய அபாயம் தோன்றியுள்ளது. எனவேதான் இந்த நிலமை மாற்றப்பட வேண்டும், நல்லாட்சியை நோக்கிய ஆட்சி மாற்றம் உருவாக வேண்டும் என அனைவருமே எதிர்பார்ப்பவர்களாகவும், ஏங்குபவர்களாகவும் மாறியிருக்கிறார்கள். ஆனால் அந்த மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு வெறும் எதிர்பார்ப்பும் ஏக்கமும் போதாது. அதற்காக உழைப்பவர்களாக நாம் ஒவ்வொருவரும் மாற வேண்டும்.

அந்த வகையில் கடல் கடந்து இங்கு வாழுகின்ற உங்கள் அனைவரக்கும் இந்த விடயத்தில் பாரிய பொறுப்பு இருக்கின்றது. பல வழிகளில் இந்த மாற்றத்திற்கான உழைப்பை நீங்கள் செய்யமுடியும். அதில் ஒன்றுதான் உங்களில் முடியுமானவர்கள் அத்தனை பேரும் நாட்டிற்கு வருகை தந்து உங்கள் வாக்குகளை நீங்களே அளிப்பதன் மூலம் எதிர்பார்க்கப்படும் மாற்றத்திற்கான பங்களிப்பை செய்வதாகும். அவ்வாறு செய்வது சாத்தியம் இல்லை எனும் பட்சத்தில், உங்கள் வாக்குகள் அடுத்தவர்களால் துஷ்பிரயோகமாக அளிக்கப்படாமலிருப்பதை நீங்கள் உத்தரவாதப் படுத்திக்கொள்வேண்டும்.

அடுத்ததாக இங்கு பணியாற்றிக்கொண்டிருக்கும் உங்களின் பராமரிப்பின் கீழ் பலரும் நமது நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போது அவர்கள் எவ்வாறு தேர்தலில் முடிவெடுக்க வேண்டுமென நீங்கள் அவர்களுக்கு வழிகாட்டியிருக்கமாட்டீர்கள். ஆனால் இம்முறை இந்த மாற்றத்திற்காக உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் வாக்களிப்பதை நீங்கள் உறுதி செய்யவேண்டும்.

மூன்றாவதாக இந்த மாற்றத்திற்கான உழைப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது, தீவிரமாக ஈடுபட்டள்ளது உங்களுக்குத் தெரியும். அதற்காக மக்களை அறிவூட்டி தெளிவூட்டுகின்ற பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளையும் நாம் நாடு பூராகவும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். கடந்த காலங்களில் முஸ்லிம்களின் வாக்குகளை கணிசமாக பெற்றுக்கொண்ட அரசியல் வாதிகளெல்லாம் இம்முறை தங்கள் சொந்த இலாபங்களுக்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காகவும் முஸ்லிம் சமூகத்தை தெளிவாக வழிகாட்ட முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழல் நிலையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பங்களிப்பானது, இன்னும் அதிகமாக வேண்டப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் ஆபத்துகளுக்கும் மத்தியில் கடின உழைப்புடன் நாம் உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.

இதற்காக பெருந்தொகைப்பணமும் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதில் கணிசமான பங்களிப்பினை எமது முன்னணியின் சூராசபை உறுப்பினர்களும் அதன் செயற்குழு உறுப்பினர்களும் வழங்க முன்வந்துள்ளனர். அந்த வகையில் உங்களின் பங்களிப்பினையும் நாம் கணிசமாக எதிர்பார்க்கின்றோம்.

இறுதியாக இந்த மாற்றத்திற்கான பிரச்சாரத்தையும் உங்களது மட்டங்களில் நீங்களும் முன்னெடுக்கவேண்டும். சமூக வலைத்தளங்களை இதற்கு நீங்கள் பயன்படுத்த முடியும். எனவே வெறுமனே மாற்றத்தை மாத்திரம் எதிர்பார்ப்பவர்களாக அல்லாமல் நாம் அதற்காக உழைப்பவர்களாக ஒவ்வொருவரும் மாற வேண்டும்."
பகிர:- Facebook Twitter Addthis
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -