நெற்றிக்கண் (கவிதைத் தொகுதி) -நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்

நூல் : நெற்றிக்கண் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் : நாகபூஷணி கருப்பையா
வெளியீடு : சிந்தனை வட்டம்

நூலாய்வு : அட்டாளைச்சேனை மன்சூர்

இன்று எத்தனையோ கவிதை நூல்கள் வெளிவந்தாலும் ஒரு காலகட்டத்தில்; அவை மங்கி மறைந்துவிடுவதும் உண்டு. அதேவேளை காலங்கள் ஓடினாலும் அது மென்மேலும் பேசப்படுவதும் உண்டு. அந்தவகையில்; சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்திருந்த நெற்றிக்கண் எனும் கவிதைத் தொகுதி இன்றும் பேசப்படுமளவுக்கு அதன் வைரவரிகள் மிகவும் ஆழமாய் காணப்படுவது அதன் சிறப்பாகும். இந்தகைய ஆழமான கருத்துக்களை அள்ளி வழங்கியவர் வானொலி, தொலைக்காட்சி என்கிற ஊடகங்கள் ஊடாக தனது குரல் முத்திரையைப் பதித்து, துள்ளிப்பாயும் குரலோசையுடன் உள்ளம் கொள்கைகொள்ளும் நயவுரைகளையும் வழங்கிவரும் அறிவிப்பாளர் நாகபூஷணி கருப்பையா அவர்களின் நிஜக் கண்களுடாக பார்க்கப்படுகின்ற நெற்றிக்கண் கவிதைகளைப் பார்த்து இரசித்து உள்ளம் பூரிப்படைந்தவர்களின் நானும் ஒருவன்.

அரிச்சுவடி தொட்ட காலம் முதல் அறிவிப்பாளரான இற்றைவரை ஆற்றிய சாதனை ஏதுமில்லை. ஆயினும்..

ஆங்காங்கே சலசலக்கும் எதிர்ப்பொலிகள் ஆக்கிடலாம் என்னையோர் அக்கினிக்குஞ்சாய்...

இனிய தொடக்கமாய் இதழ் விரிக்கும் நெற்றிக்கண்... என்று தொடங்கும் நாகபூஷணியின் என்னுரை எத்தனையோ ஓளடதங்களை ஒன்றுசேர்த்து ஒத்தடம் போட வைக்கின்றது.

வீரகேசரி, தினகரன், தடாகம் போன்ற பத்திரிகை சஞ்சிகைகளில் வெளிவந்த சில கவிதைகளும் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப தன்னால் எழுதப்பட்ட கவிதைகளும் இத்தொகுதியில் காணப்படுகின்றன. இன்று புதுக்கவிதைகளைப் படைப்போர்கள் எம் மத்தியில் தாம் எதனைப் பற்றி எழுதுகின்றோம் என்பது தெரியாமல் எழுதுவோரும் உண்டு. புதுக்கவிதை பற்றி கவிஞர் மேத்தா இவ்வாறு விளக்கமளிக்கின்றார். அதாவது

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவையெதுவும் இல்லாத
கருத்துக்கள் தம்மைத்தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே

புதுக்கவிதை... என புதுக்கவிதையின் இலக்கணத்தையும் இயல்பையும் புலப்படுத்துகின்றார் மேத்தா. இந்தவகையில் எழுத்தார்வத்திறனும், அழகியலுடன் இணைந்த இசை, நடனம், பேச்சாற்றலுடன் இணைந்த அறிவிப்பிலும் தனக்கே உரித்தான அடக்கமும், அன்புமொழியுடன் தன்னையே அர்ப்பணித்திருக்கும் இளநங்கை நாகபூஷணியின் நெற்றிக்கண் அனைத்துக் கவிதை வகைகளையும் ஒருங்கே கொணர்ந்துள்ளார். வாசிக்க, போஷிக்க, இரசிக்க, வாழ்வின் யதார்த்தத்தை இவரது வரிகள் வாழ்வின் புரட்டல்களை புரியவைக்கிறது.


அந்தவகையில் 'முப்பத்தொன்பது' கவிதைகள் நெற்றிக்கண்ணில் அலங்கரிக்கின்றன. 'என் தந்தை' எனும் தலைப்பில் ஆரம்பித்து பேனாவும் எழுத்துக்களிலும் முடிக்கின்றார். தந்தைக்கு இவர் கொடுக்கும் விளக்கமிது.

சின்னத் தீங்கேனும் சிந்தையில் கொள்ளாத
செப்பமுறு உயர் பண்பில் தெய்வம்
கண்ணனவன் பாரதியின் கருத்தில் நிறைந்தாற்போல்
நண்பனாய் மந்திரியாய் நல்லாசானாய்
என் மனதில் குடியிருக்கும் இறவாத உறவு' என்பதாக இவர் தந்தைக்கு கொடுத்திருக்கும் உறவுரிமை மிகமிக அபாரமானவை.

அறியாமை எனும் தலைப்பில் இன்றைய மலையகமடிதனில் தன்வாழ்நாளை கொடுத்து உயிர்வாழும் அந்த உள்ளங்கள் பற்றி நூலாசிரியர் எழுதியுள்ள விதம் சற்று வித்தியாசமானவையாகும். தான் வாழ்ந்த பிரதேசம் தன்னுள்ளே அந்த தோட்டத் தொழிலாளிகள் படுகின்ற வேதனைகள் கலந்த சுமைதாங்கா மனச் சுமைகளுடன் நாகபூஷணியின் பார்வையைப் பாருங்கள் இதோ..

கூடை சுமந்த கரம் கூனல் விழுந்த உடல்
குளிர் தாக்கும் அனுதினமும்
தளிர் கொய்தே தீரவேணும்
அட்டை உறிஞ்சும் ரத்தம் அதிகாரம் உழைப்புறிஞ்சும்....
கணனி கண்ட யுகம் காலத்தின் விரிவாக்கம்
காணாத ஓர் உலகாய் விழித்தபடி ஒரு தூக்கம்
விடியலும் அமாவாசை கொழுந்து விட்டெரியும் வாழ்க்கை – அதில்
குளிர்காயும் குருட்டுத்தனம்..

ஆத்தமார்த்தமான கவித்துவத் தத்துவங்கள் சகாவரத்துடன் படம்பிடித்துக் காண்பிக்கிறார் அறிவிப்பாளர், தயாரிப்பாளர் நாகபூஷணி. மேலும் 'அற்பம்' எனும் தலைப்பில் 'மனது அழுக்கு மூட்டை, மனிதனது சுமக்கும் கழுதை, இனமதன் மேன்மை கெட்டு, ஈனமாய் ஆனதிப் பிறப்பு' என்கிற வரிகளில் மனிதனது அற்ப வாழ்வின் செப்பங்களைத் தொட்டுச் செல்கிறவிதம் வித்தியாசமானதாகும்.

சு(ட்)டும் விழிச்சுடர் எனும் தலைப்பில் 'அடுத்தவர் பெறும் புகழால் அவஸ்தை உளம் கொள்ள தொடுகின்ற பார்வையிலே தேளின் விஷமிருக்கும்' என்கிறார் நூலாசிரியர். உண்மைதான் இன்று மற்றவர் கடும் பிரயத்தனமிக்க முயற்சியினால் முன்னேற்றம் காண்கின்றபோது பொறாமைத்தீயின் கொடூரங்களை கொண்டு அவனைத் தாழ்த்தப் பார்ப்பது மனிதவாழ்வின் ஓரங்கமாகவே உள்ளது.

நெற்றிக்கண் எனும் தலைப்பில் பௌர்ணமி நிலாவில் சீதையுடன் பேசும் உரையாடல் கவிதையாகின்றது. 'துயர்சுமந்த பெண்ணுக்கு நான் உவமை, பொறுமைக்கு என்பேரே எடுத்துக்காட்டு, அன்றடைந்த துன்பச்சுமை அதனாலும் இறங்கவில்லை. என்கிற வரிகள் அபலைகளின் வாழ்வினை எடுத்துக்காட்டுகின்றது நெற்றிக்கண். அதனால்தான் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை கவிதை பற்றி இவ்வாறு கூறியிருக்கின்றார்.

'கவிதை என்பது கற்பனை உள்ளது.
கூட்டியும் பேசும்; குறைத்தும் கூறும்;
பொய்ம்மையும் வாய்மையே போலப் பொலிவுற

அறங்களைப் புகட்டலே அதனுடை நோக்கம்' எனக் கூறியிருக்கின்றார். அதனால்தான் என்னவோ நாகபூஷணியின் கற்பனைத்துவம், கவித்துமாய் வாழ்வின் அத்தனை மட்டங்களையும் தொட்டுச் செல்கிறது என்பது என்வாதம்.

நூலின் பதிப்புரையை சிந்தனை வட்டத்தின் பணிப்பாளர் புன்னியாமீன் வழங்கியுள்ளார். நூலுக்கான மதிப்புரையினை எழுத்தாளர், கவிஞர், வைத்திய நிபுணர் டாக்டர் எஸ். நஜிமுதீன் அவர்களும், பத்திரிகைள் பதித்தவை எனும் தலைப்பில் அறிவிப்பாளர் நாகபூஷணி கருப்பையா அவர்களைப் பற்றி எம். அகிலன், தாரிகா மர்சூக், கலாநிதி துரை மனோகரன், பாலைரோஜா ரஸ்மின், ரீஎல். ஜவ்பர்கான் மற்றும் நாகபூஷணியும் நறுந்தமிழ் பாக்களும் எனும் தலைப்பில் நூலாசிரியரைப் பற்றிய சிறப்பான குறிப்புரையினை தருகின்றார் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி.

மொத்தத்தில் நெற்றிக்கண் நிஜக்கண்ணாகி பார்வைகள் பலப்படுதல் வேண்டும். தன்னாலும் வாழ்வில் ஜெயிக்க முடியும் என்பதை படம்பிடித்துக் காட்டும் நெற்றிக்கண் நூலாசியரியரின் பணிகள் தொடர இன்னும்பல நிஜங்களுடன்கூடிய கவித்துவத் துளிகள், வாழ்வினை சீராக்கம் பெற, உதவ, வெளிவரவேண்டும்.
(நூலாய்வு : அட்டாளைச்சேனை மன்சூர்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -