மறக்க முடியுமா இந்தியாவின் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள் - விளக்கம் இணைப்பு


இந்தியா இலுப்பூர் ரியாஸ் அஹமது-

இன்று பாபரி தினம்.22 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அயோத்தியாவில் பாபரி மஸ்ஜித் ஷஹீதாக்கப்பட்டது.ஒரு வரலாற்று சின்னம், தேசிய அடையாளம் இரத்த சாட்சியானது.சரயு நதி இந்த மாபாதக பயங்கரவாத செயலுக்கு மெளன சாட்சியானது.தேசத்தந்தை மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு தேசம் சந்தித்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல்.பாபரியை இடித்தவர்கள், காந்தியை படுகொலைச் செய்த கோட்சேயின் வாரிசுகள் என்பது எதேச்சையானது அல்ல.மத துவேசமும், இன வெறியும் அடித்தளமாக்கிய இந்திய பாசிசம் அங்கே வெற்றிக்கொடியை நாட்டியது.மத்திய அரசும், நீதிமன்றமும், ராணுவமும் எல்லாம் அங்கே பார்வையாளர்களாக மாறினர்.பாபரி மஸ்ஜிதின் மூன்று குவிமாடங்களுடன் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசியலிசம் ஆகிய தேசத்தின் விழுமியங்கள் எல்லாம் குழித்தோண்டி புதைக்கப்பட்டன.

ஒட்டுமொத்த தேசமும் பின்னர் முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கோரிய காட்சியை கண்டோம்.சங்க்பரிவார தலைவர்களை தவிர அனைவரும் முஸ்லிம்களோடு ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தினர்.இடிக்கப்பட்ட மஸ்ஜிதை அதே இடத்தில் கட்டுவதே முஸ்லிம்களுக்கு அளிக்கும் பிராயச்சித்தம் என்று அனைவரும் ஒரே சுரத்தில் கூறினர்.அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினர்.அறிவுஜீவிகள் அறிக்கைகளை வெளியிட்டனர்.பத்திரிகைகள் தலையங்கம் எழுதின.பூஜை அறையில் நுழைந்து பாபரி மஸ்ஜித் இடிக்கும் வரை மெளனம் விரதம் இருந்த நரசிம்மராவும், மஸ்ஜித் மீண்டும் அதே இடத்தில் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.தொடர்ந்து வந்த 22 ஆண்டுகளில் சரயு நதியின் ஊடே தண்னீர் ஒழுக தவறியதோ இல்லையோ ஆனால், அரசியல் கட்சிகளின் வாக்குறுதியெல்லாம் தண்ணீராய் ஒழுகிப்போனது.

மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் நீதிமன்ற உத்தரவின் பின்புலத்தில் தற்போது தற்காலிக கோயில் ஒரு கொடும் பாதகத்தின் அவமானம் தாங்காமல் தலை தாழ்த்தி நிற்கிறது.உரிமையியல் தொடர்பாக 1961-ஆம் ஆண்டு முதல் நடந்து வந்த வழக்கு இறுதி தீர்ப்பை காத்து தற்போதும் நீதிமன்றத்தில் உள்ளது.இதனிடையே 2010 செப்டம்பர் 30-ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை, பாபரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை மூன்றாக பாகப்பிரிவினைச் செய்து விசித்திரமான தீர்ப்பை வெளியிட்டது.அந்த தீர்ப்பில் கொடிய வகுப்புவாதத்தின் காணமுடியும்.மஸ்ஜித் நிலைபெற்றிருந்த இடத்தில் 3இல் 2 பாகம் இந்துக்களுக்கும், ஒரு பாகம் முஸ்லிம்களுக்கும் என்ற அறிவீனமான தீர்ப்பு வழங்கப்பட்டது.பாபரி மஸ்ஜிதை இடித்த மாபாதக குற்றத்திற்கு தலைமை வகித்த மூத்த சங்க்பரிவார தலைவர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் 1992-ஆம் ஆண்டு முதல் நீதிமன்ற கோப்புகளில் தூங்கிக்கொண்டிருக்கிறது.குற்றம் சாட்டப்பட்டவர்கள் பின்னர் இந்தியாவின் ஆட்சியாளர்களானார்கள்.வகுப்பு துவேசத்தை பரப்புரைச் செய்து இப்போது அவர்கள் நாட்டுக்கு சேவை செய்கின்றார்கள்.தடா, பொடா, யு.ஏ.பி.ஏ போன்ற சட்டங்களெல்லாம் அவர்களின் அருகில் கூட நெருங்கவில்லை.தீவிரவாத முத்திரைக் குத்தப்பட்டு ஏராளமான அப்பாவிகளை அடைத்துவைத்துள்ள இந்திய சிறைகளில் பாபரி மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.பாபரி மஸ்ஜித் இடிப்பைக் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசால் நியமிக்கப்பட்ட லிபர்ஹான் கமிஷன், குற்றவாளிகள் என்று கண்டுபிடித்த பா.ஜ.க தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த யு.பி.ஏ அரசுக்கு திராணி இல்லை.இன்றோ குற்றம் சாட்டப்பட்டவர்களே அரசை நிர்வகிக்கின்றனர்.

பாபரி மஸ்ஜிதை நினைவுக்கூறாமல் இருக்க முடியுமா?

22 ஆண்டுகள் கழிந்தபோது பாபரி மஸ்ஜித் இடிப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமான பிரச்சனையாக மாறியுள்ளது.அது ஒரு குற்றமே.ஆனால், அது யாருடைய குற்றம்?இதில் விசித்திரம் என்னவெனில், பாபரி மஸ்ஜிதை நினைவுக்கூர்வதே இந்தியாவின் பல இடங்களில் தடைச் செய்யப்பட்டுள்ளது.சில இடங்களில் அது ஒரு குற்றமாகவும் கருதப்படுகிறது.ஒரு தேசியப் பிரச்சனையை, ஒரு சமுதாயத்தின் பிரச்சனையாக சுருங்கியதற்கான பொறுப்பை மதச்சார்ப்பற்ற கொள்கையை பேசி நடக்கும் அரசியல் கட்சிகள்தான் சுமக்கவேண்டும்.

இன்று நம்பிக்கை மோசடியின் 22 ஆண்டுகள் பூர்த்தியாகிறது.மக்களும், அரசியல் சாசனமும், ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்த நம்பிக்கையும், சிறுபான்மையினரான முஸ்லிம்கள் ஆட்சியாளர்களிடமும், அரசியல் கட்சிகளிடம் வைத்திருந்த நம்பிக்கையும் மோசடிச் செய்யப்பட்டுள்ளது.ஒரே நேரத்தில் அரசியல் மோசடி மற்றும் சமுதாய மோசடியின் நினைவை நாம் இந்நாளில் புதுப்பிக்கிறோம்.அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் மதச்சார்பற்ற கபட வேடங்கள் விசாரணைச்செய்யப்படவேண்டும்.பாபரி மஸ்ஜித் மீண்டும் அதே இடத்தில் கட்டப்படவேண்டும் என்ற தேசிய பொறுப்பை தங்களது செயல்திட்டங்களில் இருந்து நீக்கிய அரசியல் கட்சிகள், முஸ்லிம்கள் பாபரியை மறந்துவிடவேண்டும் என்று விரும்புகின்றனர் போலும்.இதனைவிட மோசடி வேறு என்ன உள்ளது?இந்துத்துவா கட்சிகள் வகுப்புவாதத்தோடு கொண்டிருக்கும் உறுதிப்பாடு, இதர கட்சிகள் தாங்கள் தம்பட்டம் அடிக்கும் மதச்சார்பற்ற கொள்கைகளோடு காட்டவில்லை என்பது என்னவாயினும் முஸ்லிம்களின் குற்றமல்ல.

பாபரி மஸ்ஜிதை அதே இடத்தில் கட்டுவது ஒரு நீண்ட நெடிய வாய்ப்பாக மாறலாம்.ஆனால், வரலாற்றில் திருத்தப்படாத ஒரேயொரு தவறு அல்ல பாபரி மஸ்ஜித் இடிப்பு.அதன் பொருள் தவறுகளோடு சமரசம் செய்யவேண்டும் என்பதல்ல.

தொலைவான தூரமும், தடங்கல்களும் நீதிக்கான போராட்டங்களிலிருந்து பின்வாங்குவதற்கான போதிய காரணங்களும் அல்ல.மனித குலத்தின் வாழ்வே நீதியின் அடித்தளங்களில்தான் அமைந்துள்ளது.எதிர்கால தலைமுறையினருக்கு மறதிக்கு எதிரான போராட்டத்தின் இந்த செய்தி பகிர்ந்து அளிக்கப்படவேண்டும்.ஆகையால் நாம் மறக்காதிருப்போம்.பாபரி மஸ்ஜித் 1992 டிசம்பர் 6.

1528 ஆம் ஆண்டு முதல் 1949-ஆம் ஆண்டு வரை ஃபைஸாபாத்தில் முஸ்லிம்கள் ஏகனான அல்லாஹ்விற்கு வணக்கங்களை புரிந்து வந்த மஸ்ஜித் தகர்க்கப்பட்டபோது, அதற்கான சதித்திட்டத்தை தீட்டியவர்களுக்கு சில கனவுகள் இருந்தன.காலம் சாட்சி, அவை வெறும் கற்பனைகளாக இருந்துவருவதை கடந்து செல்லும் ஒவ்வொரு டிசம்பர் 6களும் அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன.

தேசம் உயர்வாக கருதும் ஜனநாயக-மதச்சார்பற்ற கொள்கைகளின் உயிர் நாடியை பிடித்து உலுக்கியதே சங்க்பரிவார பாசிஸ்டுகளால் பாபரி மஸ்ஜிதுக்கு இழைத்த கொடுமை என்பதை சமூகத்தின் மனசாட்சி இன்றும் உரக்க கூறிக்கொண்டிருக்கிறது.பாபரி மஸ்ஜித் உயிர்தியாகத்தின 22 ஆண்டுகள் தேசத்தின் ஆட்சியாளர்கள், நீதிபீடத்தின் முன்னால் எழுப்பும் கேள்விகளை யாராலும் நிராகரித்துவிட முடியாது.காலங்கள் உருண்டோடும்போது அது உருவாக்கும் அதிர்வுகள் கூடுதல் பலம் பெற்றுக்கொண்டேயிருக்கும்.டிசம்பர் 6 ஒரு அடையாளமாக மாறிக்கொண்டிருக்கிறது.22 ஆண்டுகள் அல்ல; 65 ஆண்டுகால நீதிமறுப்பின் அடையாளமாக! 1949 டிசம்பர் 22-ஆம் தேதி நள்ளிரவில் பாபரி மஸ்ஜிதின் சுவர் ஏறிக்குதித்து உள்ளே நுழைந்து அநியாயமாக மிஃராபில் ராமனின் சிலையை வைத்தவர்கள் மீது நீதிபீடம் என்ன நடவடிக்கை எடுத்தது?(மிஃராபில் ராமனின் சிலை சுயம்புவாக(தானாக) உருவானது என்ற வாதத்தை ராம ஜென்மபூமிக்கு ஆதாரமாக இந்துத்துவாவினர் எழுதியும், பேசியும் வருகின்றனர்.ஆனால், இந்த சுயம்பு வாதம் வடிக்கட்டிய பொய் என்பதும், மஸ்ஜிதில் அத்துமீறி நுழைந்த கும்பல் சிலையை வைத்ததாகவும், போலீஸ்-நீதிமன்ற ஆவணங்கள் தெளிவுப்படுத்துகின்றன.லிபர்ஹான் கமிஷன் இதனை உறுதிச் செய்துள்ளது.அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையின் தீர்ப்பும் இதனை தெளிவாக எடுத்துரைத்துள்ளது)இதுதானா சட்டத்திற்கு மதிப்பு அளிக்கும் மதச்சார்பற்ற ஜனநாயக சமூகத்தின் நீதி?

பாபரி மஸ்ஜிதை இடித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூட்டுப்படுகொலை நடத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?பாபரி மஸ்ஜிதின் நினைவலைகள் எதிர்கால தலைமுறையினரிடம் இக்கேள்விகளை எழுப்பிக்கொண்டேயிருக்கும். நீண்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடின முயற்சியின் விளைவாக நீதிபதி லிபர்ஹான் தயாரித்த அறீக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நடவடிக்கைகள் எடுக்கவும் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயற்சிக்கவில்லை!தற்போது பாபரி மஸ்ஜிதை இடித்தவர்களின் கட்சி ஆட்சி புரியும் வேளையில் இருந்த கொஞ்ச நம்பிக்கையும் தகர்ந்துகொண்டிருக்கிறது.

1949 டிசம்பர் 23 முதல் பூட்டப்பட்ட பாபரி மஸ்ஜிதின் பூட்டை திறந்து பூஜை நடத்த அனுமதிக்குமாறு வழக்கறிஞரான உமேஷ் சந்திர பாண்டே 1986-ஆம் ஆண்டு ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.(இவ்வழக்கில் உமேஷ் சந்திர பாண்டே கட்சிதாரர் அல்ல) ’பாபரி மஸ்ஜிதின் பூட்டை திறந்து பூஜைக்கு அனுமதி அளித்தால் வானம் இடிந்து விழுந்துவிடாது’ என்று கே.எம்.பாண்டே என்ற மாவட்ட நீதிபதி தீர்ப்பில் எழுதினார்.உணர்ச்சிப்பூர்வமான, சிக்கலான பிரச்சனைகள் நிறைந்த இவ்வழக்கில் தீர்ப்பை எழுத தனக்கு உந்துதலாக அமைந்தது ஒரு குரங்கு என்று நீதிபதி கே.எம்.பாண்டேயின் சுய சரிதையிலிருந்து லிபர்ஹான் தனது அறிக்கையில் எடுத்தெழுதினார்.

“பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்திரவை பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40 க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலீசு கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு அச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்து கொண்டு அதனை வணங்கினேன்.”(நீதிபதி லிபர்ஹான் கமிஷன் அறிக்கை, பக்கம் 87, பிரிவு 25.3)

பாபரி மஸ்ஜித் நில உரிமை மூல வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு உந்து சக்தியாக அமைந்தது எந்த விலங்கு? என்பதை அறிய அவர்களுடைய சுயசரிதை வெளியே வரும் வரை நாம் காத்திருக்கவேண்டும். 22 ஆண்டுகள் கழிந்த பிறகும் இனியும் பாபரி மஸ்ஜிதை குறித்து கூறவேண்டுமா?மதச்சார்பற்ற கொள்கையை பற்றி பேசிக்கொண்டு அடங்கியிருக்கவேண்டியதுதானே?என்ற மில்லியன் டாலர் கேள்வி பல இடங்களிலிருந்து எழலாம்.ஐந்து வேளை ஏகனான அல்லாஹ்வை வணங்கி வந்த மஸ்ஜிதையும், அதனை சுற்றி வக்ஃப் செய்யப்பட்ட நிலத்தையும் அநியாயமாக அபகரிக்கப்பட்டதை நாட்டின் சட்டங்களையும், கட்டமைப்பையும் பயன்படுத்தி நீதி தேடுவதற்கான முயற்சியில் என்ன தவறு உள்ளது? என்பதற்கு அதனை எதிர்ப்பவர்கள்தாம் விளக்கம் அளிக்கவேண்டும்.ஆயிரக்கணக்கான மஸ்ஜிதுகளை அபகரிப்போம் என்று சூளுரைத்து தயாராக இருப்பவர்களை எதிர்கொள்ள இந்த நாட்டின் சட்டங்களும், நீதிமன்றங்களும் வலுவானதா? என்பதை உறுதிச் செய்யவேண்டியுள்ளது.

மறதிதான் பாசிசத்தின் வேர்.வரலாற்றை மூடிமறைத்துக்கொண்டே பாசிசம் தனது இருப்பை உறுதிச் செய்கிறது.பொய்களையும், கற்பனைகளையும் பரப்புவதே அதன் பாணி.ஆகையால்தான், பாபரி மஸ்ஜிதைக் குறித்து உண்மையான வரலாற்றை வளரும் தலைமுறையினருக்கு பகிர்ந்து அளிக்கவேண்டிய புனித பணியை நாம் நிறைவேற்றுவது அவசியமாகும்.ஒரு புறம், நாட்டின் மவுனமாக இருக்கும் பெரும்பான்மையான மதச்சார்பற்ற சமூகத்திற்கு பாபரி மஸ்ஜிதைக் குறித்த உண்மைகளை கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் நடக்கவேண்டும்.அத்துடன், இந்திய திருநாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பாபரி மஸ்ஜிதைக் குறித்து தெரிவித்துக்கொண்டேயிருக்கவேண்டும்.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள் தொட்ட சம்பவங்கள் நம் உள்ளங்களில் பசுமரத்து ஆணியாக பதிந்திருக்கவேண்டும்.மஸ்ஜிதை இடித்தவர்கள் எதிர்பார்க்கும் மறதிக்கு, பாபரி மஸ்ஜிதை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்பதை ஒவ்வொரு டிசம்பர் 6 உம் உரக்க கூறிக்கொண்டேயிருக்கவேண்டும்.


இதேவேளை இந்தியாவில் பல்வேறு பட்ட இஸ்லாமிய அமைப்புகளும் பொதுமக்களும் இணைந்து பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டி தர வேண்டியும் பாபரி மஸ்ஜித் இடித்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி தமிழ் நாட்டில் பல்வேறுப்பட இடங்களில் போராட்டங்கள் நடந்தது இதில் முஸ்லிம் மக்கள் மட்டும் இல்லாமல் மாற்று மத சகோதர்களும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :