நேற்று ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தமது ஆலோசனையை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான கே.ஸ்ரீபவன், சந்திரா ஏக்கநாயக்க,
பிரியசான் டெப் , ஈவா வனசுந்தர, ரோஹினி மாரசிங்க, புவனேக அலுவிகாரை, சிசிர டி அப்று, சரத் டி அப்று, பிரியந்த ஜயவர்த்தன ஆகியோர் இந்த மனுவை விசாரித்து நேற்று ஆலோசனையை அலரிமாளிக்கைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த விவகாரத்தை முழு நீதியரசர் குழுமம் ஆராயும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் 10 நீதியசர்கள் மட்டுமே ஆராய்ந்து அபிப்பிராயத்தை அனுப்பிவைத்துள்ளனர். உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிநாட்டுக்கு சென்றிருப்பதால் நீதியரசரான சலீம் மஸ்ருப் இந்த குழுமத்தில் பங்கேற்கவில்லை என்று உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
தன்னால் மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் ஆலோசனை வழங்குமாறு கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கைவிடுத்திருந்தார். இது தொடர்பில் எழுத்து மூலமான சமர்ப்பணங்களை 7 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு சட்டத்தரணிகள் சங்கத்திடமும் சம்பந்தப்பட்ட தரப்புகளிடமும் உயர்நீதிமன்றப் பதிவாளர் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் 38 மனுக்கள் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டிருந்தன.
குறிப்பாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன மற்றும் கோமின் தயாசிறி, ஜெ.சி.வெலியமுன பேராசிரியர் சுதந்த லியனகே, பேராசிரியர் சம்பத் பண்டார அமரதுங்க, கலாநிதி பாக்கிய சோதி சரவணமுத்து, சுனில் வட்டகல ஊடகவியலாளர் கே.டப்ள்யூ ஜனரஞ்சன உள்ளிட்ட 38 பேர் மனுக்களை உயர் நிதிமன்றத்திற்கு சமர்ப்பித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இது தொடர்பில் ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு தமது தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ளதாக. சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உப்புல் ஜயசூரியவும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment