பிரிவினைவாதத்திற்கு துணைபோகும் கட்சி நாமல்ல. அன்று நாம் தனிநாட்டுக் கோரிக்கையினை எதிர்த்திருக்காவிடின் இன்று தனி ஈழம் உருவாகியிருக்கும் என தெரிவிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான புதிய கூட்டணி தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்கான அடித்தளம் எனவும் சுட்டிக் காட்டியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் புதிய கூட்டணி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதியெனவும் பிரிவினையினை தூண்டும் செயற்பாடெனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் கருத்தினை வினவிய போதே கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இனவாதத்திற்கும் பிரிவினைவாத கோட்பாட்டிற்கும் துணைபோகவில்லை. ஆதரவு வழங்கப் போவதுமில்லை. 1990 ஆம் ஆண்டு வரதராஜப் பெருமாள் தனி நாட்டு பிரகடனத்தின் மூலம் வடக்கு கிழக்கினை பிரிக்க முயற்சித்த போது அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரிவினையினை எதிர்த்து செயற்பட்டது. அன்று நாம் ஆதரவளித்திருந்தால் இன்று வடக்கு, கிழக்கில் தனித்தாயகம் உருவாக்கப்பட்டிருக்கும். அதேபோல் அன்று தனி நாட்டினை கோரிய போது எந்தவொரு சிங்களத் தலைவர்களும் வாய் திறக்கவில்லை. ஆனால், இன்று வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் இரு சமூகங்களும் அமைதியாக வாழ விரும்பும் போது சிங்கள இனவாத கட்சிகள் அதனை குழப்பும் நோக்கில் செயற்படுகின்றன. உண்மையிலேயே இன்று பிரிவினைவாதம் முழுமையாக சிங்கள இனவாத கட்சிகளிடமே உள்ளது. தமிழ், முஸ்லிம் மக்கள் எதைச் செய்தாலும் இவர்கள் சந்தேகக் கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர்.
விடுதலைப்புலிகளுடன் இணைந்து முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்தும் நிலைமை ஏற்படவிருந்த சூழ்நிலையில் எமது தலைவர் அஷ்ரப்பினால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. அவ்வாறான நாட்டின் அமைதிக்காக செயற்பட்ட எம்மை பிரிவினைவாதிகள் என சுட்டிக்காட்டும் பேரினவாதிகளின் கருத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம்.
மேலும், நாம் வெறுமனே தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நாம் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகாண முயற்சிக்கின்றோம். வடக்கு கிழக்கு என்பது தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகம் எனவே, தமிழ் மக்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையேயான ஒற்றுமையான பயணத்திற்கான அடித்தளத்தினையே இவ்விரு கட்சிகளும் ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இது அரசாங்க கூட்டு கட்சிகளுக்கு உறுத்துமாக இருப்பின் அவர்களின் எண்ணங்களுக்காக எமது கொள்கைகளை மாற்றிக்கொள்ள முடியாது.
மேலும், வடக்கையும் கிழக்கையும் பிரித்து தனி நாடாக்கும் எண்ணம் கூட்டமைப்பினருக்கும் எமக்கும் இல்லை என்பது கடந்த காலங்களில் தெளிவாக கூறப்பட்டுவிட்டது. நாம் எமது மக்களின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் மட்டுமே போராடுகின்றோம் என்பதை அரசாங்கம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment