பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டை, ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றதால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இம்ரான் கானின் தலைமையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் இவர்களின் முற்றுகையை தடுக்க பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை குண்டுவீச்சு மற்றும் ரப்பர் குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் செய்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மற்றும் முஸ்லிம் மத தலைவர் தாஹிருல் காத்ரி ஆகியோர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
உடனடியாக நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் எனக் கோரி இவர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய நகரங்களில் வன்முறை வெடிப்பு
தலைநகர் இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் மற்றும் தாஹிருல் காத்ரி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய செய்தி பரவத் தொடங்கியதும், கராச்சி, லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை சேர்ந்த இரு கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், பிரதமரின் அதிகாரப்பூர்வ இஸ்லாமாபாத் இல்லத்தை விட்டு நவாஸ் ஷெரிப் லாகூருக்கு சென்று விட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் பாகிஸ்தான் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பெர்வெய்ஸ் ரஷீத் தெரிவித்துள்ளார்.


0 comments :
Post a Comment