சட்டத்துறை சார்ந்தவர்களே இந்த நாட்டின் தலைவர்களாகவும் அரசியல் துறையில் முன்னணியிலும் திகழ்கின்றார்கள். அவ்வாறான நிலையில் தமிழ் மொழியைப் பாதுகாத்து தமிழன் தமிழனாக வாழ்வதற்கு சட்டத்தரணிகளின் பங்கு மிகவும் அவசியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
இலங்கை சட்டக்கல்லூரியின் சட்டமாணவர் தமிழ் மன்றத்தின் கலைவிழாவும் நீதி முரசு மலர் வெளியீடும் நேற்று முன்தினம் பம்பலப்பிட்டி சரஸ்வதி அரங்கில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான டி.எம்.சுவாமிநாதன் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக இலங்கை சட்டக்கல்லூரியின் அதிபரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி ஜயதிஸ்ஸ டி கொஸ்தா, பொருளாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜி.ராஜகுலேந்திரா, பிரதி மன்றாடியார் அதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ், சிரேஷ்ட சட்டத்தரணி ஆர்.செல்வஸ்கந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் தலைவர் அப்துல் ஜவார் எல்மி, செயலாளர் கிரிஷாந் ராஜசூரியர், உட்பட நிர்வாக அங்கத்தவர்களும் மாணவர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமைவாய்ந்த தமிழ் மொழியானது பல்வேறு சிறப்புக்களைக் கொண்டதாகும். வரலாற்றிலே மூன்று சங்கங்கள் இருந்தன. இதன்போதான தமிழ்மொழியின் சிறப்பு மிக்க பதிவுகள் மதுரை வெள்ளப்பெருக்கால் அழிவடைந்து விட்டன. தற்போது தமிழ் மொழியின் தொன்மையை கூறுவதற்கு தொல்காப்பியம் மட்டுமே எஞ்சியிருக்கின்றது.
1966ஆம் ஆண்டு இலங்கைச் சட்டக்கல்லூரியில் சட்ட மாணவர் தமிழ் மன்றம் உருவாக்கப்பட்டது. இதன் முதற் தலைவராக மறைந்த அமிர்ந்தலிங்கம் அவர்களே தலைவராக விளங்கினார். இன்றும் சட்ட மாணவர் தமிழ் மன்றம் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமையானது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதோடு தமிழ்மொழியை பாதுகாப்பதற்கு இவ்வாறான மன்றங்களின் பணி முக்கிய இடத்தை வகிக்கின்றது.
தற்போது இளம் சமூகத்தினர் சட்டத்துறையில் ஆர்வமாக இருக்கின்றனர். சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் தான் இந்த நாட்டின் தலைவர்களாகவும் அரசியல் பிரதிநிதிகளாவும் செயற்பட்டார்கள். செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக இந்த நாட்டின் ஜனாதிபதி கூட ஒரு சட்டத்தரணிதான்.
தமிழ் மொழியைப் பாதுகாத்து தமிழன் தமிழ னாக வாழ்வதற்கு சட்டத்தரணிகளின் பணி இன்றி யமையாதது. எனவே தமிழைப் பாதுகாப்பதற்காகவும் சுய கௌரவத்துடன் வாழ்வதற் காகவும் சாதி, மத, குல, இன பேதங்களை மறந்து எப்போதுமே ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பது எனது கோரிக்கையாகவுள்ளது என்றார்.

0 comments :
Post a Comment