இதுவரை ஜெயலலிதா சம்மந்தமாக வெளியான செய்திகள் -ஒரே பார்வையில்...


புதிதாக செய்தி இந்தியா ஊடகம் வெளியிட்டால் இந்த பக்கத்தில் பிரசுரிக்கப்படும் 

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேர்வு!! நாளை பதவியேற்பு!! 

தமிழகத்தின் புதிய முதல்வராக 2வது முறையாக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோய்விட்டது. தற்போதைய சூழலில் 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாவால் மீண்டும் எம்.எல்.ஏவாகவோ அல்லது முதல்வராகவோ முடியாது. ஜெயலலிதா வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே தவறு என்றும் ஜெயலலிதா நிரபராதிதான் என்றும் ஒரு தீர்ப்பு வந்தால் மட்டுமே அவரால் எம்.எல்.ஏ.வாகி முதல்வராக முடியும்.
ஜெயலலிதாவுடன் ஷீலா சந்திப்பு
ஜெயலலிதாவுடன் முன்னாள் தலைமை செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நீதிமன்றத் தீர்ப்புக்கும் கர்நாடக அரசுக்கும் தொடர்பு இல்லை

பெங்களூரு : நீதிமன்றத் தீர்ப்புக்கும் கர்நாடக அரசுக்கும் தொடர்பு இல்லை என சித்தராமையா விளக்கம் தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்புக்கு கர்நாடக அரசை குறைகூறுவது சரியல்ல எனவும் அவர் கூறினார். நீதிமன்ற உத்தரவைத்தான் கர்நாடக அரசு செயல்படுத்தி வருகிறது. இரு மாநில எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசுக்கு அறிவுறுத்தி உள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
இ.சி.ஆர் சாலையில் அதிமுக-வினர் போராட்டம்
சென்னை : கிழக்கு கடற்கரை நீலாங்கரை சாலையில் அதிமுக-வினர் இருபுறமும் கறுப்புக்கொடிகளை பறக்க விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு சிறையில் உள்ள சுதாகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு

காஞ்சீபுரத்தில் பஸ் எரிப்பு: அதிமுக கவுன்சிலர் போலீசில் சரண்
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மதியம் காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையம் அருகே அரசுப் பேருந்து எரிக்கப்பட்டது. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க. வினர் மறியில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பஸ்சுக்கு தீவைத்தவர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட பேரவை இணை செயலாளரும் காஞ்சிபுரம் நகராட்சி கவுன்சிலருமான காஞ்சி பரிமளம் தானாக முன் வந்து பஸ்சை எரித்ததாக சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

அவரிடம் பஸ் எரிப்பு சம்பவத்தில் வேறு எவரேக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சரணடைந்துள்ள காஞ்சி பரிமளம், கடந்த நாடாளு மன்ற தேர்தல் முடிவு அறிவிக்கும் முன்பாகவே காஞ்சீபுரம் தொகுதி அ.தி.மு,க. வேட்பாளர் மரகதம் குமரவேல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எனவும். பெங்களூர் வழக்கில் தமிழக முதல்வர் விடுதலை எனவும் காஞ்சிபுரம் நகரின் முக்கியப் பகுதிகளில் டிஜிட்டல் பேனர் வைத்து பரபரப்பு ஏற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது,

இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறுகையில், ‘‘தற்போது காஞ்சீபுரத்தில் அரசுப் பேருந்து எரிக்கப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி காஞ்சி பரிமளம் சரணடைந்துள்ளார். இச்சம்பவத்தில் மேலும் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது’’ என்றார்.
ஜெயலலிதா மீதான தண்டனைக்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் நாளை மனுதாக்கல்சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.

இதனைத்தொடர்ந்து ஜெயலலிதா உடனடியாக ஜெயிலில் அடைக்கப்பட்டார். 4 வருட தண்டனை என்பதால் உயர்நீதிமன்றத்தில்தான் ஜாமின் பெற முடியும். தற்போது கர்நாடகாவில் தசரா திருவிழா நடைபெற்று வருவதால் ஜாமின் பெறுவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சிறப்பு நீதிமன்ற தண்டனையை தடைகோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நாளை மனுதாக்கல் செய்யப்படும். அதோடு, ஜாமின் கோரியும் மனுதாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு தண்டனை: அதிமுகவினர் தீக்குளிப்பு– மாரடைப்பில் 14 பேர் சாவு
அம்மா... இது அ.தி.மு.க. தொண்டர்களின் ரத்த நாளங்களில் உறைந்து போன வார்த்தை. பெற்ற தாயை விட பல மடங்கு பாசத்தால் தொண்டர்கள் உருகி அழைத்திடும் வார்த்தைதான் அம்மா.

திரண்டு நிற்கும் கூட்டத்தை பார்த்து இரண்டு விரல்களை காட்டி புரட்சித் தலைவரின் ரத்ததின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று ஜெயலலிதா கூறுவதை கேட்டால் போதும் ‘அம்மா... அம்மா...! என்று கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய உற்சாகத்தில் துள்ளுவார்கள்.

நேற்றைய தீர்ப்பு லட்சக் கணக்கான தொண்டர்களை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தி இருக்கிறது.

18 ஆண்டுகளாக உருண்ட வழக்கின் தீர்ப்பு பெங்களூர் நீதிமன்றத்தில் நேற்று வெளியாக இருந்ததை அறிந்ததுமே கடைகோடி தொண்டர் வரை ஒவ்வொருவரும் ‘அம்மா’ விடுதலையாக வேண்டும் என்று உள்ளப்பூர்வமாக உருகி வேண்டினார்கள்.

வழிபாட்டு தலங்களில் எல்லாம் வாய்விட்டு கதறி மன்றாடினார்கள். ‘தெய்வமே. எங்கள் அம்மாவுக்கு எந்த தண்டனையும் கொடுத்து விடாதே’ என்று.

நேற்று அதிகாலை 4 மணிக்கே பெங்களூர் வீதிகளில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கட்சி நிர்வாகிகள் கூடி நின்றார்கள்.

போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டது முதல் ஒட்டு மொத்த தமிழகத்தின் பார்வையும் பெங்களூரை நோக்கியே இருந்தது.

என்ன ஆகும்... என்ன ஆகும்... என்று நிமிடங்கள் யுகங்களாய் நகர தீர்ப்பு நேரமும் நெருங்கியது. ஜெயலலிதா ‘குற்றவாளி’ என்று நீதிபதி குன்ஹா அறிவித்ததும் இடி விழுந்தது போல் தொண்டர்கள் துடித்து போனார்கள்.

முதல் – அமைச்சராக கம்பீரமாய் வலம் வந்த ஜெயலலிதா கோர்ட்டில் இருந்து ஜெயிலுக்கு நடந்து சென்றதை பார்த்ததும் அங்கு நின்ற அமைச்சர்கள் மனம் உடைந்து கதறி அழுதார்கள்.

ஜெயலலிதா ஜெயிலுக்குள்.... நிராதரவாய் தவிக்கிறோமே... என்று திகைத்து, தவித்து பெங்களூர் வீதிகளில் அமைச்சர்கள் அமர்ந்து இருந்தார்கள்.

எப்படியும் விடுதலையாகி விடுவார் என்ற நம்பிக்கையுடன் இனிப்புகளும், பட்டாசுகளும் வாங்கி வைத்தபடி காத்திருந்த தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பிற்பகலில் ஜெயலலிதா குற்றவாளி. 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை. ரூ. 100 கோடி அபராதம் என்று தொலைக்காட்சிகளில் செய்தி வந்ததும் தொண்டர்களின் மகிழ்ச்சி தொலைந்தது.

தலைமை கழகத்தில் திரண்டு நின்ற பெண்கள் தலையிலும், மார்பிலும் அடித்து கதறி அழுதார்கள். துக்கம் தாங்காமல் தொண்டர்களும் அழுதனர். வேட்டி தலைப்பாலும், கைக்குட்டையாலும் வடிந்த கண்ணீரை துடைத்த படி அழுது ஏங்கி தவித்த தொண்டர்களை சமாதானப்படுத்த முடியவில்லை. தலைமைக் கழக வளாகம் முழுவதும் சோக பிரளயமாய் காட்சியளித்தது.

தீர்ப்பு வெளியானதும் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். வேதனையில் செய்வதறியாது தவித்தார்கள். ‘யார் யோக்கியம்? அம்மாவை இப்படி பண்ணிட்டாங்களே... பாவிகள்!’ என்று பலர் வாய் விட்டு ஆவேசத்தில் கதறினார்கள். கிட்டத்தட்ட மொத்த தமிழகமும் சோகத்தின் பிடியில் சிக்கி தவித்தது.

சென்னை வளசரவாக்கம் அடுத்த ஏ.பி.என்.பிரதாப் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (58) ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே பெட்ரோல் கேனை எடுத்துக் கொண்டு நடுரோட்டுக்கு வந்த அவர் அம்மா வாழ்க என்று கூறி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகள் ஜோனஷா (19). லால்குடியில் உள்ள பாரதிதாசன் உறுப்பு கல்லூரியில் பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கியதை அறிந்த ஜோனஷா, ‘எங்களுக்கெல்லாம் இலவச லேப்– டாப் கொடுத்தவரை சிறையில் அடைத்து விட்டார்களே’ என கூறி துக்கம் தாளாமல் அழுதார். பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நெய்வாசல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (47) மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

நாகை மாவட்டம், வேதாரண்யம்–நாகை மெயின்ரோட்டில் கோர்ட்டு அருகே வசித்து வருபவர் கோவிந்தராஜ் (56). தீர்ப்பை கேட்டதும் மாரடைப்பில் மயங்கி விழுந்து இறந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சேவுகம்பட்டி பேரூராட்சி முத்துலாபுரத்தை சேர்ந்தவர் பாலம்மாள் (52). தீர்ப்பை அறிந்ததும் நெஞ்சுவலி ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த மாரியப்பனும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாலாயிரம் (48). தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பஸ் முன்பு பாய்ந்தார். இதில் அவரது 2 கால்களும் பஸ் சக்கரத்தில் சிக்கி நசுங்கின. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச் சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாலாயிரம் பரிதாபமாக இறந்தார்.

திருவோணம் அருகே உள்ள காட்டாத்திசித்தன் தெருவை சேர்ந்தவர் பழனியப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

கரூர் மாவட்டம் நெடுங்கூர் கிழக்கு கஸ்பா காலனியை சேர்ந்த ராமசாமி (60) மூலக்காட்டனூரை சேர்ந்த அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி வார்டு செயலாளர் வேலுச்சாமி (50) ஆகியோரும் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.

தளவாபாளையத்தை சேர்ந்த ஜீவா என்ற பாக்கியராஜ் (40) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை முதல் தொலைக்காட்சியில் ஜெயலலிதா தீர்ப்பு குறித்து பார்த்துக்கொண்டிருந்தார். ஜெயலலிதா குற்றவாளி என்றும், அவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை என்ற அறிவிக்கப்பட்டதும் ஜீவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.

சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (70). அ.தி.மு.க. தொண்டர். தீர்ப்பு வெளியானதும் விஷம் குடித்தார். சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு அடுத்த மொடக்குறிச்சி அருகே லக்காபுரம் நெல்லுகுத்து காடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (40). தறிபட்டறை தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு பெங்களூர் கோர்ட்டில் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட தகவல் லட்சுமணனுக்கு கிடைத்தது.

இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்து விரக்தியில் இருந்து வந்தார். அனைவரிடமும் இதை சொல்லி புலம்பி கதறி அழுது கொண்டே இருந்தார்.

பின்னர் வீட்டுக்கு சென்ற அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் ஓமலூர் அருகில் உள்ள மோரூர் கே.எம்.புதூரை சேர்ந்தவர் ஜேக்கப் என்கிற பழனிச்சாமி (42). டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை பார்த்து பழனிச்சாமி கதறி அழுதார்.

இரவு 8 மணி அளவில் பழனிச்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை பொம்மிடியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். இங்கு அவர் இரவு 11 மணி அளவில் இறந்து விட்டார்.

இதுவரை 14 பேர் தாங்கள் உயிருக்கும் மேலான நேசிக்கும் அம்மாவுக்கு ஏற்பட்ட சோதனையை தாங்க முடியாமல் இன்னுயிரை மாய்த்து இருக்கிறார்கள்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு புரட்சித்தலைவி என்று தொண்டர்களிடம் தனக் கென தனி இடத்தை பிடித்தவர் ஜெயலலிதா.

எத்தனையோ சோதனையான காலகட்டங்களை எல்லாம் துச்சமென தூக்கி எறிந்து தனக்கு நிகர் தான்தான் என்று நிரூபித்து நிமிர்ந்து நின்றவர்.

பாராளுமன்ற தேர்தலில் அத்தனை கட்சிகளையும் வாரி சுருட்டி களத்துக்கு வெளியே வீசி விட்டு கிட்டத்தட்ட மொத்த தொகுதியையும் (37 தொகுதிகள்) தன் வசமாக்கியவர்.

நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலிலும் மக்கள் மன்றம் அமோக வெற்றியை வழங்கி கொண்டாடியது.

ஆனால் நீதிமன்றம் தவறுகளுக்காக தண்டித்துள்ளது. இது அ.தி.மு.க.வுக்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

அ.தி.மு.க.வின் அரசியல் வாழ்வு நீதி தேவனின் கைகளில் உள்ளது. அவர் எடுக்கப் போகும் அடுத்த முடிவுக்காக காத்திருப்பது தொண்டர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகமும்தான்.

ஜெயலலிதாவுக்கு தண்டனை: தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்- பொன்.ராதாகிருஷ்ணன்

சொத்து குவிப்பு வழக்கில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–

18 ஆண்டுகள் நடந்த வழக்கில் இப்போது தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தை பாரதீய ஜனதா மதிக்கிறது. நீதிக்கு உட்பட்டே அனைவரும் நடக்க வேண்டும்.

இது போன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு வருங்காலத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

நீதி மன்றத்தால் தமிழக முதல்வருக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.இது அ.தி.மு.க.வினருக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கும். தற்போது இங்கு அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. எனவே அவர்கள் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

தவறு யார் செய்திருந்தாலும் அதற்குரிய தண்டனை அளிக்கபட்டு நீதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதா விடுதலை பெற மலைக்கோட்டையில் முழங்கால்களால் படி ஏறிய அதிமுக பிரமுகர்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நேற்று பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அவருடன் சசிகலா, இளவரசி, சுதா கரன் ஆகியோருக்கும் சிறை தண்டனை அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் ஒத்தக்கடை செந்தில் என்பவர் இன்று ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலை பெற வேண்டி மலைக்கோட்டை படிகளில் முழங்கால் போட்டபடி ஏறினார். 400–க்கும் அதிகமான படிகளை அவர் முழங்கால் போட்டபடி ஏறியதை பார்த்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

ஒத்தகடை செந்தில் சேவா சங்கம் பள்ளி அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.பிறந்த நாளில் மண் சோறு சாப்பிடுதல், ஆட்டோக்களில் கர்பிணிகளுக்கு இலவச பயணம், பெண் பயணிகளுக்கு மங்கள பொருட்கள் என நூதனமாக செய்து வந்த ஒத்தகடை செந்தில் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா விடுதலையானால் கோவில் முடி காணிக்கை செலுத்துவதாக கூறி தாடி வளர்த்தார். ஆனால் தீர்ப்பு வேறு மாதிரியாக வெளியானதால் இன்று அவர் மீண்டும் விடுதலைக்காக கொளுத்தும் வெயிலில் படிகளில் ஏறினார்.
அதிகாலை 3.30 மணிக்கே கண் விழித்த ஜெயலலிதா
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ஜெயில் ஏற்கனவே மிக பலத்த பாதுகாப்பு செய்யப்பட்ட ஜெயிலாகும். தற்போது ஜெயலலிதா அங்கு அடைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அறை எண் 23–ல் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, நேற்றிரவு நீண்ட நேரம் தூங்கவில்லை. 

தனிமையில் சிந்தனை செய்தபடி இருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் கழித்து தூங்கச் சென்றாலும் இன்று அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் அவர் கண் விழித்தார். சிறை அறைக்குள்ளேயே அவர் சற்று நேரம் நடந்ததாக ஜெயில் அதிகாரி ஒருவர் கூறினார். காலை 6 மணிக்கு பிறகு அவர் சுறுசுறுப்புடன் காணப்பட்டார். அவருக்கு படிக்க 2 தமிழ்நாளிதழ்களும் 3 ஆங்கில நாளிதழ்களும் வழங்கப்பட்டன.

அந்த நாளிதழ்களை அவர் நீண்ட நேரம் படித்துக் கொண்டே இருந்தார். அதன்பிறகு அவரை 4 மந்திரிகளும், அரசு அதிகாரிகளும் வந்து சந்தித்தனர். சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்தித்துப் பேச அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது. அவர்கள் ஜெயலலிதாவை சந்தித்து பேச அனுமதிக்கக் கோரி பரப்பன அக்ரஹார மத்திய சிறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

ஆனால் இந்த விஷயத்தில் எல்லாரது மனுவும் ஏற்கப்படவில்லை. ஜெயலலிதா சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அவரை சந்திக்க அனுமதிப்போம் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
பேரையூர் அருகே ஜெயலலிதா தீர்ப்பால் அதிர்ச்சி: பிளஸ்–2 மாணவி தீக்குளிப்புமதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் எழுமலை அருகே உள்ள வங்கி நாராயணபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் நாகலட்சுமி (வயது17).

இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். நேற்று வீட்டில் தனியாக இருந்த நாகலட்சுமி, தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவ–மாணவிகளுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கி வரும் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்து தான் தீக்குளித்ததாக மாணவி நாகலட்சுமி போலீசில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதாவுக்கு சிறை உடை இல்லை! 

பெங்களூர்: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா வி.வி.ஐ.பி. கைதி என்பதால் அவருக்கு சீருடை இல்லை. மேலும் அவர் தினமும் வெளியில் இருந்து வாங்கி வரப்படும் உணவை சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர் அறை எண் 23ல் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட சனிக்கிழமை இரவு அவர் சிறை உணவை சாப்பிடாமல் ஓ. பன்னீர் செல்வம் வாங்கி வந்த அடையாறு ஆனந்த பவன் உணவை சாப்பிட்டார். காலையிலும் வெளியில் இருந்து வாங்கி வரப்பட்ட இட்லி, சாம்பார், சட்னியை சாப்பிட்டார். ஜெயலலிதா வி.வி.ஐ.பி. கைதி என்பதால் அவருக்கு பிற கைதிகளை போன்று சீருடை கிடையாது. மேலும் அவர் தினமும் வெளி உணவை சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறை உணவை சாப்பிட்டு வருகிறார்கள்.

ஜெ. வழக்கு- இறுதித் தீர்ப்பு அல்ல: பாஜக கருத்து

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இப்போது வெளியானது ஒன்றும் இறுதித் தீர்ப்பு அல்ல என்று பாஜக கருத்துத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: “இது ஒன்றும் இறுதித்தீர்ப்பு அல்ல. நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான் இது. தனக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு உள்ளது.

இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள், இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது துரதிர்ஷடவசமானது” என்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்துப் பார்க்கவில்லை. இந்நிலையில், நான் கருத்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லை” என்றார்.

சிறையில் காலை 5.30 மணிக்கு எழுந்து 'வாக்கிங்' போன ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா இன்று காலை 5.30 மணிக்கு எழுந்து நடைபயிற்சி செய்துள்ளார். 

4 பேரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இரவு பொழுதை கழித்த ஜெயலலிதா இன்று காலை 5.30 மணிக்கு எழுந்தார். அவர் காலையில் சிறை வளாகத்தில் நடைபயிற்சி செய்தார். பின்னர் 7.30 மணிக்கு 3 இட்லிஇ சாம்பார்இ சட்னி சாப்பிட்டார். இந்த உணவு வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டது. அதே நேரத்தில் சசிகலாஇ இளவரசி ஆகியோர் சிறையில் தரப்பட்ட புலாவ் சாப்பிட்டனர். சசியும்இ இளவரசியும் சாப்ட்வேர் என்ஜினியரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சுபா என்பவர் உள்ள அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததில் இருந்து சிறை வளாகத்திற்கு வெளியே அதிமுகவினர் நின்று கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :