அரசாங்கத்தின் திடீர் கொள்கை மாற்றத்திற்கான காரணம் என்ன என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. யுத்தக் குற்றச் செயல் விசாரணை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
காணால் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூவர் அடங்கிய சர்வதேச நிபுணர் குழு ஒன்றிணை நியமித்துள்ளார்.
பிரித்தானியாவின் சட்ட வல்லுனர் சேர் டெஸ்மன் டி சில்வா தலைமையிலான மூவர் அட்ஙகிய நிபுணர் குழு இந்த நோக்கதிற்காக நியமிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழு தற்போது யுத்த கால இழப்புக்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணை அவசியமற்றது என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்து வந்த நிலையில், தற்போது திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் மற்றும் ஏனைய முக்கிய நிகழ்வுகளின் போது இலங்கை அரச படையினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரகடனங்களுக்கு அமைவான வகையில் யுத்தத்தில் ஈடுபட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதிபடக் கூறியிருந்தார் என தெரிவித்துள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் திடீரென யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அரசாங்கத்தின் திடீர் மாற்றத்திற்கான பிரதான ஏது எதுவென்பதனை பகிரங்கப்படுத்த வேண்டுமென அவர் ஐக்கியதேசினக் கட்சி வலியுறுத்தி உள்ளது.
படையினரைக் காட்டிக் கொடுக்கப் போவதில்லை எனவும் தேவை ஏற்பட்டால் தாமே மின்சார நாற்காலி தண்டனையை அனுபவிக்கப் போவதாகவும் நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தல்களின் போது ஜனாதிபதி அறைகூவல் விடுத்திருந்தார் என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, சர்வதேச நாடுகளின் போர்க்குற்ற விசாரணை கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ளப் படாமலேயே நிபுணர் குழுவினை ஜனாதிபதி நியமித்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் இரகசிய இராஜதந்திர இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

0 comments :
Post a Comment