தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் BICT (வெளிவாரி) மாணவர்களுக்கான அறிமுகம் மற்றும் திசைகாட்டல் நிகழ்வு!



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட BICT (வெளிவாரி) (Bachelor of Information and Communication Technology) என்ற பாடநெறிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள மாணவர்களுக்கான அறிமுகம் மற்றும் திசைகாட்டல் நிகழ்வு 2026.01.04 ஆம் திகதி CEDPL (Centre for External Degrees and Professional Learning) ஏற்பாட்டில் தொழில்நுட்பவியல்பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு, புதிதாக இணைந்துள்ள மாணவர்களை பல்கலைக்கழகக் கல்வி சூழலுடன் இணைத்து, கல்வி, நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப நடைமுறைகள் தொடர்பான தெளிவான புரிதலை வழங்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் CEDPL பணிப்பாளர் கலாநிதி எஸ். சபீனா எம்.ஜி. ஹசன் வரவேற்புரை நிகழ்த்தி, BICT பட்டப்படிப்பின் முக்கியத்துவம், தொழில்நுட்பத் துறையில் உருவாகும் புதிய வாய்ப்புகள் மற்றும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கல்விசார் ஒழுங்குகள் குறித்து விளக்கினார்.

BICT பாடநெறியின் பாடத்திட்டக் குழு தலைவர் மற்றும் DICT துறைத் தலைவர் ஆர்.கே.ஏ. றிபாய். காரியப்பர், BICT பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வழங்கும் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

துறையிந புதிய தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஜெ. அகமட் சபானி, BICT மாணவர்களாகிய நீங்கள், நாளைய புதுமையாளர்கள், சிக்கல் தீர்ப்பவர்கள், மற்றும் டிஜிட்டல் உலகின் தலைவர்கள். நீங்கள் பெறும் அறிவும் திறன்களும் உங்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்கும் உலகின் முன்னேற்றத்திற்கும் பயன்படப்போகின்றன.

ஆகையால், ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளுங்கள், புதியதை முயற்சிக்க அஞ்சாதீர்கள், ஒழுக்கத்தையும் பொறுப்பையும் கடைபிடியுங்கள். உங்கள் முயற்சிகள் தான் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், மாணவர்கள் பல்கலைக்கழக வாழ்க்கையில் ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் புதுமையான சிந்தனையுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

நிகழ்வின் சிறப்பம்சமாக, பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் பிரதான உரையாற்றினார். தனது உரையில், இந்த BICT வெளிவாரி பட்டப்படிப்பு தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு முக்கிய கல்வி மைல்கல்லாக அமைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த BICT வெளிவாரி பட்டப்படிப்பு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் தொழில்நுட்ப பீடம் வழங்கும் முதல் வெளிப்புற பட்டப்படிப்பு என்பதையும் உபவேந்தர் குறிப்பிட்டார்.

இது, பாரம்பரிய உள்ளகக் கல்வி முறைக்கு வெளியே உள்ள மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கும் உள்ளடக்கிய கல்வி அணுகுமுறையின் வெளிப்பாடாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் உலகளாவிய போட்டித்திறனில் முக்கிய பங்கு வகிக்கின்றது எனக் குறிப்பிட்ட உபவேந்தர், இந்த பட்டப்படிப்பு மூலம் உருவாகும் மாணவர்கள், தொழில்நுட்ப அறிவு கொண்டவர்கள் மட்டுமல்ல ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் சமூக அர்ப்பணிப்புடன் செயல்படும் தொழில்நுட்ப நிபுணர்களாக உருவாக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

BICT வெளிவாரி பட்டப்படிப்பு என்பது எளிதான கல்விப் பாதை அல்ல எனத் தெளிவுபடுத்திய உபவேந்தர், இந்த பட்டப்படிப்பில் இணைந்துள்ள மாணவர்கள் ஒழுக்கம், நேர முகாமைத்துவம், சுய உந்துதல், தொடர்ச்சியான முயற்சி ஆகியவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், இந்தப் பட்டப்படிப்பில் மாணவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் முன்தேர்வுகள் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை, கல்வித் தரத்தையும் பட்டப்படிப்பின் நம்பகத்தன்மையையும் பாதுகாக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

CEDPL இன்று பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்புகள், தொழில்முறைப் பயிற்சி நிகழ்ச்சிகள், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம், ஒரு செயல்திறன் மிக்க கல்வி மையமாக வளர்ச்சியடைந்துள்ளதாக உபவேந்தர் பாராட்டுத் தெரிவித்தார்.

BICT பட்டப்படிப்பின் முதல் தொகுதி மாணவர்கள் என்பதால்,

இந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றமும் ஒழுக்கமும்,

இந்தப் பட்டப்படிப்பின் எதிர்காலப் புகழை தீர்மானிக்கும் என அவர் நினைவூட்டினார்.

மாணவர்கள், கல்விசார் நேர்மையை கடைப்பிடிக்க கற்றல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்த பல்கலைக்கழக விதிமுறைகளை மதிக்க

வேண்டும் என உபவேந்தர் வலியுறுத்தினார்.

இந்த BICT வெளிப்புற பட்டப்படிப்பு தொழில்நுட்ப பீடத்திற்கு ஒரு புதிய கல்வி அத்தியாயமாகவும் CEDPL-க்கு ஒரு வலுவான அங்கீகாரமாகவும் நாட்டின் தொழில்நுட்ப மனித வள வளர்ச்சிக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகவும் அமைந்துள்ளதாக உபவேந்தர் தெரிவித்தார்.

இந்த பட்டப்படிப்பு மூலம் திறமைமிக்க, ஒழுக்கமுள்ள மற்றும் முன்னோக்கிய சிந்தனையுடன் கூடிய ICT நிபுணர்கள் உருவாகி, நாட்டின் அபிவிருத்திக்கு சேவை செய்வார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

நிகழ்த்தினார். அவர் தனது உரையில், தொழில்நுட்பக் கல்வியின் எதிர்காலம், தகவல் தொடர்பாடல் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்கள் நாட்டின் அபிவிருத்தியில் வகிக்க வேண்டிய பங்கு குறித்து விரிவாக விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து, 2023/2024 கல்வியாண்டுக்கான BICT பட்டப்படிப்பு மாணவர்களுக்கான Undergraduate Handbook அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கையேடு, கல்வி விதிமுறைகள், பாடத்திட்ட அமைப்பு மற்றும் மாணவர் ஒழுங்குகள் தொடர்பான முக்கிய தகவல்களை உள்ளடக்கியதாகும்.

நிகழ்வின் இறுதியில், BICT பட்டப்படிப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ஐ.எம். காலித் நன்றியுரையை நிகழ்த்தி, நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திசைகாட்டல் அமர்வுகளில், BICT பாடநெறி அமைப்பு, பரீட்சை நடைமுறைகள், கற்றல் வளங்கள், செயலமர்வுகள் நடத்தும் முறை, Learning Management System (LMS) பயன்பாடு மற்றும் நிர்வாகச் செயல்முறைகள் குறித்து சம்பந்தப்பட்ட பொறுப்பதிகாரிகள் விரிவான விளக்கங்களை வழங்கினர். இவ்வமர்வுகள் மாணவர்களுக்கு கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்த தெளிவான வழிகாட்டுதலை வழங்கியதாக அமைந்தது.

நிகழ்வின்போது முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, பிரதிப்பணிப்பாளர் பதிவு மற்றும் பரீட்சைகள் (பரீட்சை நடைமுறைகள்) கலாநிதி எம். ஐ. எப். கரீமா, பிரதிப்பணிப்பாளர் – கற்றல் மற்றும் வளங்கள் (கற்றல் வளங்கள்) கலாநிதி சரீனா யு. எம். ஏ. ஜி., பிரதிப்பணிப்பாளர் – பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (கருத்தரங்குகள் நடத்தல்) கலாநிதி எம். ஐ. எம். றியாத், LMS ஒருங்கிணைப்பாளர் – CEDPL (LMS அறிமுகம்) ஏ. ஜே. எம். ஹாஸ்மி, சிரேஷ்ட உதவி பதிவாளர் (SAR) – CEDPL (நிர்வாக நடைமுறைகள்) எம். எச். நபார்

ஆகியோர்களுடன் புதிய மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் பங்கு கொண்டிருந்தனர்.



























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :