ஜே.எம். வஸீர்-
உள்ளுரட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் புறநெகும செயற்திட்டத்தின் கீழ் வருமானம் குறைந்த 108 உள்ளுராட்சி சபைகளை இணங்கண்டு அச்சபைகளின் நிருவாக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக 50 மில்லியன் ரூபா பெறுமதியான கணனி மற்றும் ஏனைய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் கலந்து கொண்டு கணனி மற்றும் ஏனைய உபகரணங்களை வழங்கி வைத்தார். இதற்கமைய ஒரு உள்ளுராட்சி சபைக்கு ஒரு கணனி இயந்திரத் தொகுதி, ஸ்கேனர், பிரிண்டர் என்பன வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா. நமது நாட்டை 30 வருடங்கள் கொடூரப்பயங்கரவாதம் பீடித்திருந்தது. பயங்கரவாதிகள் எண்ணிலடங்காத நாசகார வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். சிங்கள, தமிழ், முஸ்லிம்களை இனப்பாகுபாடின்றி கொன்று குவித்தனர்.
மதத் தலங்களையும் அழித்தனர். மனிதாபிமானமற்ற முறையில் அவர்கள் செயற்பட்டதனால் அப் பயங்கரவாதம் நம் கண்முன்னே நாசமானதை நாம் அனைவரும் கண்டோம். அதுதான் இறை நியதி.
இறைவனின் தண்டனையும் அதுதான். அநியாயம் செய்பவர்கள் ஒருபோதும் நிலைத்ததில்லை இது யதார்த்தம். அப்பயங்கரவாதத்தை பூண்டோடு அழித்தவர் நமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே. இதனால் எமது நாட்டில் மூவினங்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகியது. இதனை சகிக்க முடியாத விஷமிகள் இன்று இனவாதத்தை விதைத்து நாட்டைச் சின்னாபின்னப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். அண்மையில் அளுத்கம, பேருவள தர்காநகர் போன்ற பிரதேசங்களில் அவர்களின் வெறியாட்டம் முடுக்கிவிடப்பட்டிருந்தது.
அன்று விடுதலைப்புலிகளுக்கு வெளிநாட்டு சக்திகள் உதவி செய்தன. நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் எதிராக செயற்படுத்துவதற்கு பின்னணியில் செயற்பட்டனர். இன்று அதே பாணியில் நாட்டை சீர்குலைக்கவும் அரசை வீழ்த்துவதற்குமாக அன்று விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்த அதே வெளிநாட்டு சக்திகள் இன்று இன்னுமொரு இனவாதக் குழுவை கையில் எடுத்துக் கொண்டு நாட்டில் கலவரங்களை ஏற்படுத்துகின்றனர்.
சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையில் இனவாதத்தைத் தூண்டிவிட்டு அதன் மூலம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த பொதுபலசேனா என்ற அமைப்பு செயற்படுகின்றது. இந்த செயற்பாட்டை நாட்டில் வாழும் 99 வீதமான பௌத்த மக்களும் அதன் அரசியல் தலைமைகளும் நிகாகரிக்கின்றனர். மேலும், இச்செயற்பாடு பௌத்த தர்மத்திற்கு வெட்கம் என்று கூட சொல்கின்றனர். அதுமாத்திரமன்றி அதிமேதகு ஜனாதிபதி அவர்களோ, அரசியல் தலைமைகளோ நாட்டில் வாழும் பொதுமக்களுமோ இன்று சந்தோசமான நிலையில் இல்லை.
அன்று தமிழ் மக்கள் தனிநாடு கோரியது போன்று முஸ்லிம் மக்களும் தனிநாடு கோருவதற்கு அடித்தளம் போடுவதாக இவ்வினவாதக் குழுக்களின் செயற்பாடு அமைந்திருக்கின்றது. இங்கு 108 உள்ளுராட்சி சபைகளின் தலைவர் வருகை தந்திருக்கின்றீர்கள். உங்களிடத்தில் ஒரு விடயத்தை நான் வினயமாக கேட்டுக் கொள்கின்றேன். உங்கள் பிரதேசங்களில் நீங்கள்தான் முதல் மனிதன். நாட்டை சீரழிக்கும் நோக்கில் சிங்களம் முஸ்லிம் இனக்கலவரங்கள் உங்களது பிரதேசத்தில் ஏற்படாத வண்ணம் இன நல்லுறவை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்.
சில இனவாதக் குழுக்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயற்படுகின்றனர். இவ் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. முஸ்லிம் சிங்கள சமூகங்கள் இந்நாட்டில் அன்னியோன்யமாக வாழ்ந்தோம் என்பதை எண்ணிப்பாருங்கள்.
வரலாறுகளும் இருக்கின்றன. அன்று சிங்கள அரசர்கள் முஸ்லிம்களை அருகில் வைத்திருந்தார்கள். அரசர்களின் பிரத்தியேக மருத்துவர்களாகவும், பாதுகாவளர்களாகவும் முஸ்லிம்கள் விசுவாசமாக இருந்திருக்கின்றார்கள். ஏன் விடுதலைப்புலிகளின் தமிழீழப் போராட்டத்திற்கும் கூட முஸ்லிம் மக்கள் ஆதரவளிக்காமல் நாட்டுக்கும் அரசாங்கங்களுக்கு விசுவாசமாக இருந்தனர்.
இதனால் தமிழ்ப் பயங்கரவாதிகள் முஸ்லிம்களை கொன்று குவித்தது மாத்திரமன்றி அவர்களின் பொருளாதாரத்தையும் திட்டமிட்டு அழித்த வரலாறுகளை நீங்கள் அறிவீர்கள். முஸ்லிம்கள் ஒருபோதும் நாட்டையோ, நாட்டுத் தலைவர்களையோ காட்டிக் கொடுத்த வரலாறுகள் இல்லை எனவும்; அமைச்சர் தனதுரையில் தெரிவித்தார்.
.jpg)



0 comments :
Post a Comment