கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யவும், உள்ளுரில் உற்பத்தியாளர்களின் விற்பனையை ஊக்குவிக்கவும், தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும் பாசிக்குடா பாரம்பரிய விளையாட்டு விழா நிகழ்வு வெள்ளிக்கிழமை பாசிக்குடா கடற்கரையில் முதன் முறையாக இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி நிறுவனம் ஏற்பாடு செய்த பாசிக்குடா பாரம்பரிய விளையாட்டு விழாவில் மரதன் ஓட்டப் போட்டி, நீச்சல், படகோட்டம், கரப்பந்து, உதைபந்து, தலையணைச் சமர், கபடி, முட்டி உடைத்தல் போன்ற கிராமிய விளையாட்டுக்களும் இடம்பெற்றன.
மதங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்து, இஸ்லாமிய, பௌத்த சமயங்களின் கலாச்சார ஊர்வலமும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எம்.எஸ்.சாள்ஸ், வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஸ், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் கே.கிருஷாந்தன், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி நிறுவனத்தின் குழு அதிகாரி சிஹாப் செய்தீன், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன், மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மரதன் ஓட்டப் போட்டி வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் இருந்து ஆரம்பமாகி பாசிக்குடா வரை ஏழு கிலோ மீற்றர் ஓடி முடிக்கப்பட்டது.
இதில் முதலாம் இடத்தினை கன்னங்குடாவைச் சேர்ந்த கே.கோகுலநாதனும், இரண்டாம் இடத்தினை மாவடிவேம்பைச் சேர்ந்த பி.தசரதனும், மூன்றாம் இடத்தினை கரடியனாறைச் சேர்ந்த வீ.விஜிகரனும் பெற்றுக் கொண்டனர்.
பாசிக்குடா பாரம்பரிய விளையாட்டு விழா நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 18ம் திகதி இடம்பெறும் என்று கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் கே.கிருஷாந்தன் தெரிவித்தார்.
.jpg)



0 comments :
Post a Comment