ஆயர்கள் தொடர்பில் பொதுபலசேனாவின் கருத்துக்கு கூட்டமைப்பு கண்டனம்

மன்னார், யாழ் மறை மாவட்ட ஆயர்கள் தொடர்பாக பொது பல சேனா அமைப்பு தொடர்ந்தும் வெளியிட்டு வரும் கருத்துக்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் மற்றும் யாழ் மறை மாவட்ட ஆயர்கள் தமிழ் மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக மக்களின் மீள் குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகள், இந்திய வீட்டுத்திட்டம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணமால் போனவர்களை கண்டு பிடித்தல் போன்ற மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலேயே அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்காத நிலையிலே அவர்கள் இப்பிரச்சினைகளை சர்வதேசம் வரை கொண்டு சென்றுள்ளனர்.

காரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதேயாகும்.

இறுதியாக மன்னார், யாழ் மறை மாவட்ட ஆயர்கள் இருவரும் தேசத் துரோக குற்றங்களை புரிந்திருப்பதாகவும், அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என பொது பல சேனா அமைப்பு காவல் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவர்களுடைய இந்த செயற்பாடுகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுல சேனா அமைப்பின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகின்றது.

எமது ஆயர்கள் அரசியல் செய்யவில்லை. அவர்கள் எமது அரசியலுக்கு பொதுவான கருத்துக்களை முன்வைப்பதோடு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க மேற்கொள்ள வேண்டிய சகல தீர்வுகளையுமே முன் வைக்கின்றனர்.

இந்த நிலையில் அவர்களை அரசியல் ரீதியாக தொடர்புபடுத்தி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே பொதுபலசேனா என்ற இந்த இனவாத அமைப்பு பௌத்த மத கோட்பாடுகளை மீறி செயற்படுகின்றது. புத்த தர்மத்திற்கு எதிராக செயற்டுகின்றது.

அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காடையர் குழுவாகவே இந்த மக்கள் பொதுபல சேனா அமைப்பை பார்க்கின்றனர்.

தமிழ் மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் எமது ஆயர்கள் தொடர்பாக பொது பல சேனா அமைப்பு வெளியிட்டு வரும் கருத்துக்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு எதிர் வரும் காலங்களில் அவர்கள் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் போது சற்று சிந்தித்து செயற்பட வேண்டும். என அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :