லஞ்சம் கொடுப்பது போலீஸ் நிலையத்தில் இருந்து தான் முதலில் ஆரம்பிக்கிறது. எனவே லஞ்சம் வாங்கும் போலீஸ் நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம் என்று ராயபுரம், ஆர்.கே.நகர், மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்பட பல போலீஸ் நிலையங்களுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 15–ந்தேதி வந்திருந்த இந்த கடிதத்தால் சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார் நிலையில் உள்ளன. இதில் ராயபுரம் காவல் நிலையத்தில் உச்சகட்ட உஷார் நடவடிக்கையாக புதிதாக புகார் கொடுக்க வருபவர்களை பற்றி தீவிர விசாரணையும் நடத்தப்பட்டது.
புகார் கொடுக்க வந்தவர்களின் பெயர், முகவரி ஆகியவற்றை வரவேற்பு அறையிலேயே விரிவாக எழுதி வாங்கினர்.
வெடிகுண்டு மிரட்டல் கடிதம் ராயப்பேட்டையில் இருந்து அனுப்பப்பட்டது என்பதால் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீசார் உஷாராக செயல்பட்டனர்.
மிரட்டல் கடிதம் வந்தது பற்றி போலீசார் வெளிப்படையாக சொல்ல மறுத்து விட்டனர். ஆனால் உஷார் நடவடிக்கையில் மட்டும் தீவிரம் காட்டினர்.
இருப்பினும் அந்த மிரட்டல் கடிதத்தில் உள்ள தகவல்களை உளவு பிரிவு போலீசார் வெளியே கசிய விட்டனர்.
அந்த கடிதத்தில், பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டதுடன் சென்னையில் உள்ள சில போலீஸ் நிலையங்கள் பற்றியும் எழுதப்பட்டிருந்தது.
போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க சென்றால் பணம் கொடுத்தால்தான் உடனடி விசாரணை நடக்கிறது. இல்லாவிட்டால் புகாரை வாங்கி வைத்து கொண்டு விசாரிக்கிறேன் போ என அனுப்பி விடுகிறார்கள். எப்.ஐ.ஆர். உடனே எழுதுவது இல்லை. இதுமட்டுமல்ல புகார் கொடுப்பவர்கள் மீதே கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பெற்று வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து விடுகின்றனர். பணத்துக்காக மட்டுமே போலீசார் வேலை பார்க்கின்றனர்.
எனவே லஞ்சம் வாங்கும் போலீஸ் நிலையங்களை வெடிகுண்டு வைத்து தகர்த்தால்தான் விமோசனம் கிடைக்கும் என்று எழுதப்பட்டிருந்தது.
கடிதம் எழுதிய மர்ம நபர் தீவிரவாத இயக்கத்தை சார்ந்தவரா? அல்லது போலீஸ் நிலையத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 comments :
Post a Comment