இலங்கை பல்லினங்கள் வாழும் நாடு என அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இலங்கை சிங்கள பெளத்த நாடு என ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற பொதுபலசேனாவின் கருத்தானது எமது அரசியலமைப்பை மீறும் கருத்தாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உதவிப் பொதுச்செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண்.குகவரதன் தெரிவித்துள்ளார்.இவ்வாறான கருத்துகள் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது மாறாக இனங்களிடையே குரோதத்திற்கே வித்திடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை பல்லினங்கள் வாழும் நாடு என்றும் சிங்கள, தமிழ் அரச கரும மொழியாகுமென்றும் இங்குள்ள மதங்கள் அனைத்தும் தத்தமது மத அனுஷ்டானங்களை சுதந்திரமாக கடைப்பிடிக்க முடியுமென்றும் அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பொதுபலசேனா அரசியலமைப்பையே தலைகீழாக மாற்றி இலங்கை சிங்கள பெளத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என தெரிவித்துள்ளது.
இக் கருத்தானது இலங்கையின் உயிர் நாடியான அரசியலமைப்பை மீறுவது மட்டுமன்றி தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தும் நிலையில் இனங்களிடையே குரோதத்தை விதைக்கும் விஷமாகும்.
இலங்கையில் வாழும் மக்கள் வழிவந்தோர் இந்தியாவிலிருந்தே வந்தவர்கள் என சரித்திரங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன.
ஏன் சிங்களவர்கள் பின்பற்றும் பெளத்த தர்மமும் போதிமாதவனும் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு கிடைக்கப்பெற்றது.
இதே பொதுபலசேனா தான் புத்தர் இலங்கையில் பிறந்தார் என புத்தகம் எழுதிய தேரர் ஒருவரை கடுமையாக விமர்சித்தது. அப்படியானால் ஏன் இலங்கையின் அரசியலமைப்பை இவர்கள் மூடி மறைக்க வேண்டும்.
யுத்தம் முடிந்து விட்டது. அதுவொரு ஜீரணிக்க முடியாத கசப்பான அனுபவம்.
எனவே அவ் அனுபவத்தை கடந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. எனவே இதற்கு மேலும் குரோதம் வேண்டாம். அன்புதான் உலக மகா சக்தி. அன்புதான் உலக மகா ஜோதி என்ற போதி மாதவனின் போதனைகளை பின்பற்றுவதாக கூறும் பொதுபலசேனா இனங்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இதன் போதே நாட்டுக்குள் உண்மையான சமாதானத்தின் காற்றை சுவாசிக்க முடியும்.
எங்கு வரலாறு திரிபுபடுத்தப்படுத்துகிறதோ அந்த நாட்டின் அனைத்து சபை கலாசார பண்பாடு விழுமியங்கள் அனைத்தும் தலைகீழாக மாறி விடுமென்றும் உறுப்பினர் சண்.குகவரதன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment