நான் நிகழ்த்திய உரையை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்- ஹிஸ்புல்லாஹ்


-றிஸ்கான் முகம்மட்-
காத்தான்குடி: ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நான் நிகழ்த்திய உரையை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பதை எண்ணி மனவேதனையடைகின்றேன். பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் – நல்லாட்சிக்கான மக்கள் இயக்க தலைவர், செயலாளருக்கு எழுதிய பகிரங்க கடிதம் வாசகர்களுக்காக…தலைவர், செயலாளர்,
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்,
C B காசிம் மாவத்தை, கடற்கரை வீதி,
காத்தான்குடி-06.
அன்புடன்,
அஸ்ஸாலாமு அலைக்கும் (வறஹ்)
தங்களுடனான நேரடி கலந்துரையாடல் எனும் தலைப்பிட்டு தாங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் 25.05.2013 அன்று கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ். கடந்த 22.05.2013ம் திகதி நடந்த தங்களுடைய சூறா சபை கூட்டத்தில் என்னுடன் பகிரங்க பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தீர்மானித்ததாகவும் அதற்காக காலம் தாழ்த்தாது விரைவில் திகதியொன்றை தருமாறும் கேட்டிருந்தீர்கள்.

நான் 17.05.2013ம் திகதி அன்று ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நிகழ்த்திய உரையை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பதை எண்ணி மனவேதனையடைகின்றேன். இலங்கை நாட்டில் முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு முதலில் முஸ்லிம் உம்மத்துக்கிடையில் சகோதர உணர்வும் ஒற்றுமையும் பலமாக இருப்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையாகவிருக்கின்றது.
எமது தாய் நாடான இலங்கை நாட்டின் சட்டப்படி தேர்தல் காலங்களில் நாம் வெவ்வேறு குழுக்களாக பிரிந்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கு பின்பு நாங்கள் காத்தான்குடி வாழ் ஒரு தாய் மக்கள் என்ற சகோதர உணர்வுடனும், போட்டி, பொறாமை, சுயலாபங்களுக்கு அப்பால் இந்த ஊரின் அபிவிருத்திக்காகவும், எமது எதிர்கால சந்ததியினரின் நலன் கருதியும் நாம் ஒன்றுபட்டு செயற்படவேண்டியது எமது கடமையாகும். இதையே அல்-குர்ஆனும் வலியுறுத்துகின்றது. 

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம்.எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். 49:10

இத்தகைய அரசியல் கலாசாரத்தை கருத்திற்கொண்டே நான் உங்களுடன் ஊரின் அபிவிருத்தி தொடர்பாக குறைந்தது மூன்று மாதத்திற்கொரு முறையாவது கலந்துரையாடுவதற்கு தயார் என்று மேற்படி கூட்டத்தில் பேசியிருந்தேன். ஆனால் நீங்கள் அழைத்திருப்பது போன்ற பகிரங்க பேச்சுவார்த்தை என்ற பெயரில் அமைந்த ‘விவாதத்திற்கு’ அல்ல. இவ்வாறான பகிரங்க மேடைகளில் நீங்கள் எங்களை விமர்சிக்க, அதன் பின்னர் நாங்கள் உங்களை விமர்சிக்க இறுதியில் எதற்கும் பிரயோசனமற்ற ஒரு கலந்துரையாடல் மேடையாகவே அது அமையும்.
நீங்கள் சொல்வதை போன்ற மேடைகளை அமைக்கும் போது அது எமக்கிடையில் இருக்கும் கருத்துவேறுபாடுகளை அதிகரிக்குமே தவிர ஆக்கபூர்வமான எந்தவொரு அபிவிருத்திக்கும், நல்ல திட்டங்களுக்கும் வித்திடாதென்பது உண்மையாகும்.

நான் அழைத்த கலந்துரையாடலின் நோக்கம் நமது கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் ஒன்றிணைந்து நம் மண்ணை கட்டியெழுப்புவதற்காககவும், நமது நாட்டு முஸ்லிம்களின் பிரட்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும், நமது பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் தங்களுடன் கலந்தாலோசித்து நல்ல திட்டங்களை உருவாக்குவதே ஆகும். இவ்வாறான ஒரு கலந்துரையாடலுக்கு நீங்கள் அழைக்கும் பட்சத்தில் இன்ஷா அழ்ழாஹ் என்னுடைய நேரத்தை ஒதுக்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்பதை மீண்டும் கூறிக்கொள்கின்றேன்.

எம்மனைவரின் நல்லெண்ணங்களையும், நல்ல செயல்களையும் அழ்ழாஹ் அங்கீகரித்து நாம் அனைவரும் ஓற்றுமையாக சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதற்கும், ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைப்பதற்கும், நாம் அனைவரும் நேரான பாதையில் செல்வதற்கும் அழ்ழாஹ் துணை புரிவானாக என்னும் துஆ பிரார்த்தனையுடன் விடைபெறுகின்றேன்.

வஸ்ஸலாம்,
இவ்வண்ணம்,
MLAM. ஹிஸ்புழ்ழாஹ் MP
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :