இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் முஹமட் அன்சாரை விடிவெள்ளி தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
இருப்பினும் இது தொடர்பில் தமக்கு சவூதி அரசாங்கத்திடமிருந்து உத்தியோகப+ர்வ அறிவிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அந்நாட்டு ஒழுங்குகளின்படி 3 நாட்களின் பின்னரே இதுபற்றிய கடிதம் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு கிடைக்கப் பெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையைச் சேர்ந்த சமூக சேவகரான டாக்டர் கிபாயா இப்திகார், இன்று காலை வழமைபோன்று ரிஸானாவைச் சந்திக்கச் சென்றதாகவும் இருப்பினும் சிறை அதிகாரிகள் அவரைச் சந்திப்பதற்கு மறுத்துவிட்டதாகவும் அதன் பிற்பாடே மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இதுதொடர்பில் அவர் உடனடியாக ரிஸானாவின் விடுதலை தொடர்பில் அதிக அக்கறை காட்டியவந்த இலங்கையிலுள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உயரதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளார. அவர் மூலமாக ரிஸானாவின் குடும்பத்தின் சார்பில் ரிஸாhனவின் விவகாரங்களைக் கையாண்டுவரும் ஆசிரியர் ஒருவருக்கு முதன்முதலில் இத் தகவல் பரிமாறப்பட்டுள்ளது. அதன் பிற்பாடே அவர் மூலமாக ரிஸானாவின் பெற்றோருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி
இதேவேளை ரிஸானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியை தயாசிறி ஜெயசேகர எம்.பி. முதல் தடவையாக சபைக்கு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்ற எழுந்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, ரிஸானாவின் மறைவுக்காக ஒரு நிமிட நேரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என வேண்டுகோள்விடுத்தார்.
இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு நிமிட நேரம் அஞ்சலி செலுத்தினர்.
ரிஸானா மரணித்த பின்னரும் காப்பாற்றலாம் என நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர்
ரிஸானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இரண்டு மணி நேரம் கடந்த பின்னர் பாராளுமன்றில் உரையாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலனோம்பு அமைச்சர் டிலான் பெரேரா ரிஸானா நபீக்கை மரண தண்டனையிலிருந்து விடுவிக்கலாம் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். இருப்பினும் அச் சமயம் அவர் ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்திருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி கண்டனம்
சவூதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வன்மையாக கண்டித்துள்ளதுடன் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துள்ளார்.
குறித்த மரண தண்டனையானது பிழையான ஒரு நடவடிக்கை என வர்ணித்துள்ள ஜனாதிபதி ரிசானாவை தண்டனையிலிருந்து காப்பாற்ற அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தாம் மேற்கொண்டதாகவும் எனினும் துரதிஷ்ட வசமாக அவை அனைத்தும் பயனளிக்காது போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சு கண்டனம்
இளம் பாராயத்து பணிப்பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பற்றி உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் காணப்பட்ட எதிர்ப்புக்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அதியுயர் மட்ட முயற்சிகளுக்கு மத்தியிலேயே ரிசானா நபீக் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசானாவின் மரணத்தினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்களுடன் கவலையில் ஆழ்ந்திருக்கும் இலங்கை மக்களுடன் இணைந்து சோகத்தில் ஆழ்ந்திருக்கும் ரிசானாவின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராஜபக்ஷவும் அரசாங்கமும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றனர் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிசானாவின் எஜமானியை தண்டிக்க வேண்டும் :பெளசி
ரிசானாவின் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு காரணமான சவூதி அரேபிய நாட்டுத் தாயை அந் நாட்டு அரசு தண்டிக்க வேண்டும் என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் ரிசானாவுக்கு அனுதாபம் தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரிசானாவின் தண்டனை நிறைவேற்றமானது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்த அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
சிறுமியான ரிசானாவிடம் குழந்தையை பராமரிக்க ஒப்படைத்தமை அந்த தாயின் தவறாகும். தனது குழந்தையை அவர் எவ்வாறு ஒரு சிறுமியிடம் ஒப்படைக்க முடியும். இங்கு அந்த தாயும் குற்றமிழைத்துள்ளார்.எனவே குறித்த எஜமானியான தாய் மீதும் சவூதி அரசு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment