சாய்ந்தமருது பைத்துஸ் ஸக்காத் நிதிய விவகாரம்: அவதூறுகளுக்கு ஆதாரங்களுடன் பதிலளித்த தலைவர் முபாறக்!



“ஊருக்காகவும் பள்ளிவாசலுக்காகவும் அர்ப்பணிப்புடன் உழைத்தவர்களின் சேவைகளை மறந்துவிட வேண்டாம்; கருத்து வேறுபாடுகளைத் தாண்டி சமூக ஒற்றுமையைப் பாதுகாப்போம்” – விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உருக்கமான வேண்டுகோள்

யூ. கே. காலித்தீன்-
சாய்ந்தமருது பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் நிர்வாகக் கைமாற்றம் தொடர்பாக அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிவரும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் தலைவர் அல் ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி பல்வேறு முக்கிய விளக்கங்களை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, தமது தலைமையிலான நிர்வாகத்தின் செயற்பாடுகள், நிதி முகாமைத்துவம், ஏழை எளிய மக்களுக்கான உதவிகள், பள்ளிவாசல் அபிவிருத்திப் பணிகள், நிர்வாகக் கைமாற்றத்தில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் தொடர்பாக அவர் விரிவாக விளக்கமளித்தார்.

தமது உரையில் வெறுமனே நிர்வாகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல், பள்ளிவாசலின் வளர்ச்சிக்காகவும் ஊரின் நலனுக்காகவும் பல்வேறு வழிகளில் பங்களிப்புச் செய்த வர்த்தகர்கள், மஹல்லா வாசிகள், உலமாக்கள் மற்றும் பொதுமக்களின் அர்ப்பணிப்புகளை நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்த அவர், சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலின் அபிவிருத்திப் பணிகள் குறித்துப் பேசிய தலைவர் முபாறக், இப்பணிகள் தனிநபர் ஒருவரின் முயற்சியால் மாத்திரம் சாத்தியமானவையல்ல என்றும், ஊர் மக்களின் கூட்டு உழைப்பு, வர்த்தகர்களின் நிதிப் பங்களிப்பு, நேரம் மற்றும் ஆலோசனைகளின் ஊடாகவே பல அபிவிருத்திப் பணிகள் நிறைவேற்றப்பட்டதாகவும் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார்.

பள்ளிவாசலின் நுழைவாயில், கேட்வே, கடை அமைப்புகள், கதவுகள், கண்ணாடிகள், ஹவ்ளு, குர்ஆன் வைப்பதற்கான அலுமாரிகள், கம்பள விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டதுடன், பள்ளிவாசல் வளாகத்திலுள்ள சமையலறையும் சுமார் 300 முதல் 400 மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், பைத்துஸ் ஸக்காத் அலுவலகத்தின் வசதிகள் மேம்படுத்தப்பட்டு, நன்கொடையாளர்கள் வருகை தரும்போது அமர்வதற்கான இருக்கைகள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்தப் பணிகளுக்காகப் பலர் தங்களது சொந்தப் பணத்தையும் நேரத்தையும் அர்ப்பணித்ததுடன், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியதாகக் கூறிய அவர், அவர்களின் பங்களிப்புகளுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

“நீங்கள் வழங்கிய உதவிகளுக்காக நான் நன்றி கூறுவதைத் தவிர வேறு எதனையும் செய்ய முடியாது. பள்ளிவாசல் எவ்வாறு பிரகாசமாக இருக்கின்றதோ, அதேபோன்று உங்களுடைய வாழ்க்கையிலும் மறுமையிலும் அல்லாஹ் ஒளியையும் நன்மையையும் வழங்குவானாக” என்ற அவரது பிரார்த்தனை, ஊர் மக்களின் பங்களிப்புகளை அவர் எவ்வளவு நன்றியுடன் நினைவுகூருகின்றார் என்பதை வெளிப்படுத்தியது.

பள்ளிவாசலின் நீண்டகால நிதி முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் சூரிய மின்சக்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதையும் தலைவர் முபாறக் சுட்டிக்காட்டினார்.

இதற்கான யோசனைகளையும் ஆலோசனைகளையும் வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், குறித்த திட்டத்தின் மூலம் மாதாந்தம் சுமார் 1,26,000 முதல் 1,28,000 ரூபாய் வரையிலான வருமானம் கிடைத்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள வளாகம், நடைபாதை மற்றும் ஏனைய பகுதிகளை அழகுபடுத்துவதற்காக சம்பந்தப்பட்ட பொறியியலாளர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், அதற்கமைய ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த அபிவிருத்திப் பணிகள் அனைத்தும் ஒருவருடைய தனிப்பட்ட சாதனைகளாகக் கருதப்படக் கூடாது; ஊர் மக்களின் கூட்டு முயற்சியின் அடையாளங்களாகவே பார்க்கப்பட வேண்டும் என்பதே அவரது உரையின் அடிநாதமாக அமைந்திருந்தது.

பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் நிர்வாகம் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள சில தகவல்கள் குறித்து அவர் கடுமையான கவலையை வெளியிட்டார்.

குறிப்பாக, பைத்துஸ் ஸக்காத் நிதியத்திற்கான யாப்பு தமது தலைமையிலான நிர்வாகத்தினால் உருவாக்கப்பட்டது எனச் சிலர் கூறுவது முற்றிலும் தவறான தகவல் என அவர் தெரிவித்தார்.

1997ஆம் ஆண்டிலேயே சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலின் கீழ் பைத்துஸ் ஸக்காத் நிதியம் ஸ்தாபிக்கப்பட்டு, அதற்கான யாப்பு நடைமுறையில் இருந்ததாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டே நிர்வாகச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் அவர் விளக்கினார்.

பல தலைவர்கள் காலங்காலமாக இந்நிதியத்தின் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று சமூகப் பணிகளை முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வரலாற்றுத் தகவல்களைத் திரித்துக் கூறி மக்களைக் குழப்பமடையச் செய்வது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.

குறித்த யாப்பு தொடர்பான விவகாரத்தில் உண்மையான வரலாற்றையும் ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டே கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் அடிப்படை நோக்கம் உண்மையான ஏழை மக்களை இனங்கண்டு அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குவதாகவே இருக்க வேண்டும் என்பதைத் தமது உரையில் வலியுறுத்திய தலைவர், கடந்த காலங்களில் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியானவர்களைத் தெரிவுசெய்த விதம் குறித்தும் விளக்கினார்.

65, 70, 75 மற்றும் 80 வயதுகளைக் கடந்த வறுமையில் வாழும் முதியவர்கள்கூட உதவிக்காகக் காத்திருக்கும் நிலையில், அவர்களைத் தேடிச் சென்று அவர்களது உண்மையான வாழ்வாதார நிலைமைகளை அறிந்து உதவிகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

உதவிகளைப் பெறுவதற்காக மக்கள் சிரமப்பட்டு வரிசையில் நிற்க வேண்டிய நிலையைத் தவிர்த்து, அவர்களது வீடுகளுக்கே சென்று தகுதியானவர்களை அடையாளம் காணும் நடைமுறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதற்காக அதிகாலை ஐந்து மணிக்கே வீடு வீடாகச் சென்று பயனாளிகளை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்ட நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பையும் அவர் நினைவுகூர்ந்தார்.

சிலர் தங்களது குடும்பப் பொறுப்புகள் மற்றும் பிள்ளைகளின் பாடசாலைத் தேவைகளுக்கு மத்தியிலும் இந்தச் சமூகப் பணிக்காக நேரத்தை ஒதுக்கியதை உணர்ச்சியுடன் நினைவுபடுத்திய அவர், இத்தகைய சேவைகளின் பின்னால் எத்தனையோ பேரின் தியாகங்கள் மறைந்திருப்பதாகக் கூறினார்.

பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பாகவும் அவர் விரிவான விளக்கமளித்தார்.

தாம் நிர்வாகப் பொறுப்பை ஏற்றபோது, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயனாளிகள் தெரிவு முறை, மதிப்பீட்டு முறை மற்றும் நிதி விநியோக நடைமுறைகள் தொடர்பாக ஆராய்ந்ததாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, பயனாளிகளுக்கான உதவித் தொகைகளை முன்கூட்டியே பணமாகப் பெற்று உறைகளில் இட்டு வைத்திருந்து பின்னர் வழங்கும் நடைமுறையை விட, முறையான வங்கிக் கணக்கின் ஊடாக நிதிப் பரிமாற்றங்களை மேற்கொண்டு கணக்குகளைப் பேணுவது அவசியம் எனத் தாம் கருதியதாகத் தெரிவித்தார்.

இதன் அடிப்படையிலேயே அமானா வங்கியில் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், நிதி விநியோகத்தில் கணக்காய்வு மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருந்ததாகவும் கூறினார்.

மேலும், நிதியத்தின் ஒவ்வொரு ரூபாவும் உரிய பயனாளிகளுக்குச் சென்றடைய வேண்டும் என்பதே தமது நிர்வாகத்தின் நோக்கமாக இருந்ததாகவும், நிதி முறைகேடுகள் இடம்பெறவில்லை என்பதற்கு வங்கிக் காசோலைகள் உள்ளிட்ட கணக்கு விபரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பைத்துஸ் ஸக்காத் நிதியத்தை தற்போதைய இடைக்கால நிர்வாகத்திடம் கையளிப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த தலைவர் முபாறக், ஆரம்பத்தில் நிதிய நிர்வாகத்தைக் கையளிப்பதில் தாமதம் ஏற்பட்டமைக்குப் பின்னால் சில நிர்வாக ரீதியான கரிசனைகள் இருந்ததாகத் தெரிவித்தார்.

தற்போதைய நிர்வாகம் மறைக்காயர் சபையொன்றை உருவாக்கும் முயற்சியிலும், வக்ஃப் சபையின் அங்கீகாரத்தைப் பெறும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்த நிலையில், ஒரே நேரத்தில் பல பொறுப்புகளை ஒப்படைப்பது சிரமங்களை ஏற்படுத்தக்கூடும் எனத் தாம் உள்ளிட்டோர் கருதியதாகக் குறிப்பிட்டார்.

மேலும், பைத்துஸ் ஸக்காத் நிதி தவறான முறையில் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படக்கூடாது என்பதிலும், புதிய நிர்வாகத்தினால் இப்பொறுப்பை முறையாக முன்னெடுக்க முடியுமா என்பதிலும் கவனம் செலுத்தியதாகத் தெரிவித்தார்.

இதன் காரணமாக, மரைக்காயர் சபை தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் நிதிய நிர்வாகத்தையும் கையளிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டதாகவும் விளக்கினார்.

எனினும், 11 பேர் கொண்ட இடைக்கால நிர்வாகத்திடமிருந்து கடிதங்கள் கிடைத்துள்ளதாகவும், நிதிய நிர்வாகத்தைக் கையளிப்பது தொடர்பாக மீண்டும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பள்ளிவாசல் நிர்வாகத்தை ஒப்படைத்தபோது பைத்துஸ் ஸக்காத் நிர்வாகத்தையும் ஒப்படைக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்ததாகவும், இந்த விடயத்தில் பொதுமக்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து வந்ததாகவும் கூறினார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் மிகவும் உணர்வுபூர்வமான பகுதியாக அமைந்தது, பைத்துஸ் ஸக்காத் அலுவலகத்தின் வளர்ச்சிக்காகத் தமது நிர்வாக உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட பங்களிப்புகள் தொடர்பான அவரது கருத்துக்களாகும்.

பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் அமானிதப் பொறுப்பில் உள்ள பொதுமக்களின் பணத்தைத் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தவில்லை என்றும், அலுவலகத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் தமது சொந்தப் பணத்தையே செலவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அலுவலகத்தை மேம்படுத்துதல், நன்கொடையாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளை ஏற்படுத்துதல், கழிப்பறை வசதிகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு தனிப்பட்ட பங்களிப்புகளை வழங்கியதாகக் குறிப்பிட்டார்.

இதற்கான காரணத்தை விளக்கும்போது, “இது எமது ஊர், எமது சகோதரர்கள், எமது உலமாக்கள். இதனைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளைப் போன்று ஒற்றுமையாகச் செயற்பட்டோம்” என்ற கருத்தை முன்வைத்தார்.

அந்த ஒற்றுமையும் அர்ப்பணிப்பும் தற்போது சில சமூக வலைத்தளப் பதிவுகளாலும் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளாலும் பாதிக்கப்படுவது தமக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் கடந்தகாலச் செயற்பாடுகளில் மூத்த உலமாக்களின் வழிகாட்டல்கள் முக்கிய பங்காற்றியதாகவும் தலைவர் முபாறக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, சமூகத்திற்குச் சேவையாற்றிய ஹள்ரத் மௌலவி எஸ்.எச். ஆதம் பாவா ஹள்ரத் அவர்களின் வழிகாட்டல்களை நினைவுகூர்ந்தார்.

தமது நிர்வாகக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சேவைகளைப் பாராட்டி ஆதம் பாவா ஹள்ரத் தம்மைத் தழுவி வாழ்த்திய சம்பவத்தையும் அவர் உருக்கத்துடன் பகிர்ந்துகொண்டார்.

அந்த வாழ்த்து தமக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், சமூகப் பணிகளை முன்னெடுப்பதில் மூத்தவர்களின் ஆசீர்வாதமும் வழிகாட்டலும் எவ்வளவு முக்கியமானவை என்பதையும் வலியுறுத்தினார்.

மேலும், பள்ளிவாசல் நிர்வாகத்திலும் சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளிலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் மஷூரா எனப்படும் கலந்தாலோசனை முறைக்கு முக்கியத்துவம் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

பல்வேறு குடும்பப் பிரச்சினைகள் மற்றும் சமூக முரண்பாடுகளுக்கு உலமாக்களின் ஆலோசனையுடன் தீர்வுகள் காணப்பட்டதாகவும், ஆணவம் மற்றும் தனிப்பட்ட ஈகோவைக் கடந்து சமூக நலனுக்காகச் செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.

தனக்கும் தமது நிர்வாகக் குழுவினருக்கும் எதிராகச் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கவலை வெளியிட்ட தலைவர், குறிப்பாகப் படித்தவர்களே ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவதில் ஈடுபடுவது வேதனையளிப்பதாகத் தெரிவித்தார்.

ஒரு சமூக நிறுவனத்தை நிர்வகிப்பது என்பது வெளியில் இருந்து விமர்சிப்பதைப் போன்று இலகுவானதல்ல என்றும், அதற்குப் பின்னால் நேரம், உழைப்பு, அர்ப்பணிப்பு, பொறுப்பு மற்றும் பல்வேறு சவால்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

வாட்ஸ்அப் குழுக்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அமர்ந்துகொண்டு கருத்துக்களை வெளியிடுவது இலகுவானது. ஆனால், ஒரு பொதுப் பணியைப் பொறுப்பேற்று அதனைச் சிறப்பாக முன்னெடுப்பதற்கு உண்மையான அர்ப்பணிப்பு அவசியம் என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தினார்.

தமது நிர்வாகத்தின் செயற்பாடுகளில் குறைகள் இருந்தால் அவற்றைச் சுட்டிக்காட்டுவதற்கு எவருக்கும் உரிமை உண்டு. ஆனால், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நற்பணிகளையும் தியாகங்களையும் முற்றாக மறைத்துவிட்டு குறைகளை மாத்திரம் பெரிதுபடுத்துவது நியாயமான அணுகுமுறையல்ல என்பதே அவரது உரையின் முக்கியமான செய்தியாக அமைந்தது.

தனது உரையின் இறுதியில், சாய்ந்தமருது மக்களிடம் மிகவும் உருக்கமான வேண்டுகோளொன்றை முன்வைத்த தலைவர் முபாறக், தனிப்பட்ட கருத்து முரண்பாடுகளையும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளையும் சமூகப் பிளவுகளாக மாற்றிவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

பள்ளிவாசல், பைத்துஸ் ஸக்காத் மற்றும் ஏனைய சமூக நிறுவனங்கள் எவருக்கும் தனிப்பட்ட சொத்துகள் அல்ல; அவை மக்களின் அமானிதங்கள் என்பதையும், அவற்றின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் இந்நிறுவனங்களின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களின் சேவைகளை மதிப்பதுடன், புதிய நிர்வாகங்களும் சிறப்பாகச் செயற்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

ஊரின் எதிர்காலம், அடுத்த தலைமுறையின் நலன் மற்றும் சமூகத்தின் கண்ணியம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு சமூக நிறுவனத்தின் நிர்வாகத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானது. ஆனால், அந்த வேறுபாடுகள் சமூக உறவுகளைச் சிதைக்கும் அளவுக்கு வளர்ந்துவிடக் கூடாது. ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஸக்காத் நிதியம், நிர்வாகப் போட்டிகளுக்கும் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளுக்கும் அப்பால் தனது அடிப்படை நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக வெளிப்பட்ட முக்கியமான சமூகச் செய்தியாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :