சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, வுமென்ஸ் கோர்ப்ஸ் – ஸ்ரீலங்கா அமைப்பினால் முன்னெடுக்கப்படும் “ஸ்மார்ட்போன் உலகில், ஸ்மார்ட்டான சேமிப்பு!” எனும் சிறுவர் சேமிப்பு ஊக்குவிப்புத் திட்டம் சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் இன்று (01) வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை மாணவர்களுக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டதுடன், சிறுவயது முதலே சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் மாணவர்களின் கைகளினால் பணம் உண்டியலில் இட்டு சேமிப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இதன்போது மாணவர்களுக்கு சிறுவர் தினத்தை முன்னிட்டு இனிப்புகளும் வழங்கப்பட்டன. மேலும், அதிதிகளினால் சிறுவர் தினக் கேக் வெட்டி மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
அத்துடன், எம்.எஸ். காரியப்பர் பாலர் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பினால் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப், ஆசிரியைகளான ஏ.எம். அஸ்மினா, எம்.எம். பர்வீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.ஐ.எப். நஹ்லா, வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் செயலாளர் எஸ்.எம். முபீதா உள்ளிட்டோர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்து வரும் மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவதுடன், சிறுவயதிலேயே சேமிப்பின் முக்கியத்துவம் மற்றும் நிதி ஒழுக்கம் தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இவ்விசேட விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“உங்கள் உண்டியலில் தொடங்கும் சேமிப்பே, நாளை உங்கள் உயரிய எதிர்காலத்தை நிர்ணயிக்கும்!” என்ற தொனிப்பொருளில், மாணவர்களிடையே நிதி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களின் எதிர்காலத்திற்கான சேமிப்புப் பழக்கத்தை சிறுவயதிலிருந்தே வளர்ப்பதற்கான அடித்தளத்தை அமைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.









0 comments :
Post a Comment