எம்.வை. அமீர்-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வுக் கருத்தரங்கு 2026, “Transforming Business for a Sustainable and Digital Future: Innovation, Intelligence and Impact” என்ற தொனிப்பொருளில் 2026.09.28 அன்று பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதான உரையாற்றிய சிரேஷ்ட பேராசிரியர் ஏ. ஜௌபர், “From Research to Impact” என்ற தலைப்பில் உரையாற்றியதுடன், ஆய்வு என்பது பட்டப்படிப்பின் ஒரு கல்வித் தேவையாக மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், சமூகத்துக்கும் பொருளாதாரத்துக்கும் கல்வியுலகிற்கும் பயனளிக்கும் அறிவாக மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மாணவர்கள் ஆய்வை பட்டம் பெறுவதற்கான கட்டாயப் பணியாக மாத்திரம் கருதாமல், தமது துறைகளில் காணப்படும் பொருத்தமான பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை முறையான ஆய்வின் ஊடாக ஆராய்ந்து, பெறுபேறுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
“ஆய்வு மேற்கொண்டு அதனைத் துறையிடம் சமர்ப்பிப்பதுடன் நிறுத்திவிட்டால் அதன் தாக்கம் மட்டுப்படுத்தப்படும். ஆய்வின் கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டு, ஏனைய ஆய்வாளர்கள், நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சமூகத்தினரால் பயன்படுத்தப்படும் போதே அதன் உண்மையான தாக்கம் வெளிப்படும்” என அவர் தெரிவித்தார்.
தரமான ஆய்விற்கு பொருத்தமான ஆய்வுப் பிரச்சினையைத் தெரிவு செய்தல், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் கோட்பாடுகளை ஆழமாக ஆராய்தல், சரியான ஆய்வு முறையியலைத் தெரிவு செய்தல், நம்பகமான தரவுகளைப் பயன்படுத்துதல் மற்றும் ஆய்வுக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் பரிந்துரைகளை முன்வைத்தல் ஆகியவை அவசியமானவை எனவும் சிரேஷ்ட பேராசிரியர் ஜௌபர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் மற்றும் மாதிரிகளை அவ்வாறே பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றை இலங்கையின் உள்ளூர் சமூக, பொருளாதார மற்றும் கலாசார சூழலுக்கு ஏற்ப பொருத்திப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
ஆய்வின் தரத்தை வெறுமனே புள்ளிவிபர ரீதியான முக்கியத்துவத்தைக் கொண்டு தீர்மானிக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், புதிய அறிவு உருவாக்கம், ஏற்கனவே உள்ள கோட்பாடுகளுக்கான பங்களிப்பு, புதிய முறைகள் மற்றும் நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல், கொள்கை உருவாக்கத்திற்கான பயன் போன்ற அம்சங்களும் ஆய்வின் பெறுமதியைத் தீர்மானிப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன், ஆய்வின் நம்பகத்தன்மைக்கும் கல்விசார் நேர்மைக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், ஆய்வாளர்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காதபோதும் தரவுகளை மாற்றியமைக்கவோ கையாளவோ கூடாது என்றும், கிடைத்த முடிவுகளை நேர்மையாக முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆய்வுக் கட்டுரைகளை உரிய ஆய்விதழ்களில் வெளியிடுவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். பொருத்தமான ஆய்விதழைத் தெரிவு செய்தல், அதன் ஆய்வுப் பரப்புடன் தமது ஆய்வு பொருந்துகிறதா என்பதை உறுதி செய்தல், ஆய்விதழின் மதிப்பாய்வு நடைமுறை மற்றும் கல்வியியல் நம்பகத்தன்மையை ஆராய்தல் ஆகியவை அவசியம் எனக் குறிப்பிட்டார்.
ஆய்வுக் கட்டுரை நிராகரிக்கப்படுவது ஆய்வின் முடிவாகக் கருதப்படக்கூடாது என்றும், மதிப்பாய்வாளர்களின் கருத்துக்களைப் பயன்படுத்தி ஆய்வை மேம்படுத்தி மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
“ஆய்வை பட்டம் பெறுவதற்காகவோ அல்லது தனிப்பட்ட கல்விசார் சாதனையாகவோ மாத்திரம் மேற்கொள்ளாமல், பிறருக்குப் பயனளிக்கும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அறிவை உருவாக்குவதே ஆய்வாளரின் நோக்கமாக இருக்க வேண்டும்” என சிரேஷ்ட பேராசிரியர் ஏ. ஜௌபர் வலியுறுத்தினார்.
நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பீடாதிபதிகள், திணைக்களத் தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

0 comments :
Post a Comment