எம்.வை. அமீர்-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வுக் கருத்தரங்கு 2026, “Transforming Business for a Sustainable and Digital Future: Innovation, Intelligence and Impact” என்ற தொனிப்பொருளில் 2026.09.28ஆம் திகதி பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களின் ஆய்வுத் திறன்களை மேம்படுத்துவதுடன், அவர்கள் முன்னெடுத்து வரும் ஆய்வுகளை கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் முன்னிலையில் முன்வைத்து, ஆக்கபூர்வமான கருத்துக்கள் மற்றும் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ளும் கல்வியியல் தளமாக இக்கருத்தரங்கு அமைந்தது.
ஆரம்ப நிகழ்வில் ஆராய்ச்சிக் கருத்தரங்கு 2026இன் ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.எம். ஹுசைன் அலி வரவேற்புரையாற்றியதுடன், முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா உரையாற்றினார்.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், ஆய்வுக் கருத்தரங்கின் வெற்றியை ஒரு நாள் நிகழ்வாக மதிப்பிடாமல், அதன் தொடர்ச்சியான முன்னேற்றத்திலேயே மதிப்பிட வேண்டும் என வலியுறுத்தினார்.
“ஒரு புதிய முயற்சியை ஆரம்பிப்பது முக்கியம். ஆனால், அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதே அதைவிட முக்கியமானது. இந்தக் கருத்தரங்கின் உண்மையான வெற்றி அடுத்த ஆண்டுகளில் அது எவ்வாறு தொடர்கிறது, இன்று முன்வைக்கப்படும் ஆய்வுகள் எவ்வாறு மேம்படுகின்றன, அவற்றில் எத்தனை ஆய்வுகள் நிறைவடைகின்றன, எத்தனை ஆய்வுகள் மாநாடுகளிலும் ஆய்விதழ்களிலும் வெளியாகின்றன என்பதிலேயே வெளிப்படும்” என அவர் தெரிவித்தார்.
சிறிய அளவில் ஆரம்பித்து, அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு, கல்வியியல் தரத்தை படிப்படியாக உயர்த்தி, திட்டமிட்ட முறையில் கருத்தரங்கை வளர்ப்பது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு ஆய்வின் தரத்தை நிர்ணயிப்பதில் தெளிவான ஆய்வுக் கேள்வி, முறையான இலக்கிய மீளாய்வு, பொருத்தமான ஆய்வு முறையியல், ஆதாரங்களை பக்கச்சார்பின்றி அணுகுதல், ஆய்வுக் கண்டுபிடிப்புகளால் ஆதரிக்கப்படும் முடிவுகள் மற்றும் கல்விசார் நேர்மை ஆகியவை முக்கியமானவை என உபவேந்தர் சுட்டிக்காட்டினார்.
இளநிலை மாணவராக இருந்தாலும் முதுநிலை மாணவராக இருந்தாலும் ஆய்வின் அடிப்படை கல்வியியல் தரநிலைகள் பேணப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், ஆய்வுச் செயற்பாட்டின் போது ஆய்வுக் கேள்வி, கருத்தியல் கட்டமைப்பு அல்லது ஆய்வு முறையியல் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது என்றும் குறிப்பிட்டார்.
“ஆய்வில் மாற்றங்களை ஏற்படுத்துவது இயல்பானது. ஒரு சிறந்த ஆய்வாளர் கருத்துக்களைக் கேட்கவும், அவற்றை மறுபரிசீலனை செய்யவும், தனது ஆய்வை மேம்படுத்தவும் தயாராக இருக்க வேண்டும்” என அவர் கூறினார்.
மாணவர்கள் தமது ஆய்வுகள் தொடர்பில் கல்வியாளர்களிடமிருந்து பெறும் விமர்சனங்களை தனிப்பட்ட விமர்சனமாகக் கருதாமல், ஆய்வை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக அணுக வேண்டும் என்றும் உபவேந்தர் அறிவுறுத்தினார். ஆய்வு நிறைவடையும் வரை காத்திருக்காமல், அது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே கருத்தரங்குகளில் முன்வைத்து பின்னூட்டங்களைப் பெறுவது ஆய்வின் தரத்தை மேம்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கிற்கான தொனிப்பொருள் தொடர்பாகக் கருத்து தெரிவித்த உபவேந்தர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களின் ஆய்வுகளை உள்ளடக்கும் வகையில் பரந்த தொனிப்பொருள் அமைவது பயனுள்ளதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். தொழில்நுட்பம், வணிக மாதிரிகள், நிலைத்தன்மை மற்றும் தகவல் பயன்பாடு உள்ளிட்ட துறைகள் வேகமாக மாற்றமடைந்து வரும் நிலையில், மாணவர்களின் ஆய்வுகளும் இம்மாற்றங்களுடன் தொடர்புபட்டு, கல்வியியல் தரநிலைகளைப் பேணுவதாக அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், இக்கருத்தரங்கு ஒரு வருடத்திற்குப் பின்னர் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், தற்போது முன்வைக்கப்பட்ட ஆய்வுகளில் ஏற்பட்ட முன்னேற்றம், நிறைவடைந்த ஆய்வுகள், மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆய்விதழ் வெளியீடுகளாக வளர்ந்த ஆய்வுகள் உள்ளிட்ட விடயங்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றார்.
“மெதுவாக, முறையாகவும் தொடர்ச்சியாகவும், கல்வியியல் தரநிலைகளில் எந்தவித சமரசமும் செய்யாமல் நாம் முன்னேறினால், இந்தக் கருத்தரங்கு பீடத்தினதும் பல்கலைக்கழகத்தினதும் மதிப்புமிக்க கல்வியியல் பாரம்பரியமாக வளர முடியும்” என உபவேந்தர் நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன், பல்கலைக்கழகத்தில் கேள்வி எழுப்புதல், ஆதாரங்களை ஆராய்தல் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கலந்துரையாடுதல் ஆகியவை இயல்பான கல்வியியல் கலாசாரத்தின் ஒரு பகுதியாக உருவாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வின் பிரதான உரையை சிரேஷ்ட பேராசிரியர் ஏ.எல்.ஏ. றவூப் நிகழ்த்தியதுடன், ஆய்வு, புத்தாக்கம் மற்றும் அறிவுசார் செயற்பாடுகள் தொடர்பான முக்கிய விடயங்களை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து சிரேஷ்ட பேராசிரியர் ஏ. ஜௌபர் முக்கிய உரையாற்றியதுடன், ஆய்வுகளின் எதிர்காலப் போக்குகள், அறிவு உருவாக்கத்தில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கு மற்றும் ஆய்வுகளை சமூக, பொருளாதார முன்னேற்றத்துடன் இணைப்பதன் அவசியம் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
இந்நிகழ்வின் போது பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆய்வுப் பணிகளை ஆவணப்படுத்தும் நோக்கில் “Directory of Ongoing Research Studies” என்ற தொடர்ச்சியான ஆய்வுகளின் அடைவும் வெளியிடப்பட்டது. சிறப்பான பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு பாராட்டு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற தொழில்நுட்ப அமர்வுகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களின் பல்வேறு ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டு, கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களால் கலந்துரையாடப்பட்டன. இதன் மூலம் மாணவர்கள் தமது ஆய்வுகளுக்கான ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொண்டனர்.
முகாமைத்துவம், வர்த்தகம், டிஜிட்டல் மாற்றம், புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு மற்றும் நிலையான அபிவிருத்தி உள்ளிட்ட சமகால முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை உள்ளடக்கிய மாணவர் ஆய்வுகள் இக்கருத்தரங்கில் வெளிப்படுத்தப்பட்டன.
நிகழ்வில் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி ஆர்.கே. அகமட் றிபாய் காரியப்பர், பதிவாளர் எம்.ஐ. நௌபர், திணைக்களத் தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள், அனுசரணையாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பொருளாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.ஆர்.எப். தபானி உள்ளிட்ட விரிவுரையாளர் குழுவினர் நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர். நிகழ்வின் நிறைவில் ஆராய்ச்சிக் கருத்தரங்கு 2026இன் செயலாளர் எம்.ஏ.சி.என். சபானா நன்றியுரையாற்றினார்.
நிகழ்வின்போது அண்மையில் அகாலமரணத்தை தழுவிக்க மாணவி பி.எம். வஸிமாவுக்காக ஒரு நிமிட மௌனபிராத்தனை இடம்பெற்றதுடன் அண்மையில் போட்டி ஒன்றில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment