அரச பல்கலைக்கழகங்களின் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் – தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்



மாணவர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப விரிவுரை மண்டபங்கள், ஆய்வகங்கள் மற்றும் ஆசிரியர் வளங்களை வழங்குமாறு கோரிக்கை

அரச பல்கலைக்கழகங்களில் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடு, ஆய்வக வசதிகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனத்தின் உப தலைவருமானஎம்.ஏ.எம். சமீம் தெரிவித்தார்.

அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக, நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் மாநாடுகளின் ஒரு பகுதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் 2026.09.30 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரச பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக நிலவி வரும் குறைபாடுகள் மற்றும் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதில் அரசாங்கத்தினால் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும், இதற்கு விரைவான தீர்வு வழங்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக அண்மைக்காலமாக அடையாள வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து அனுப்பப்படும் நிலையில், அதற்கேற்ப தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனித வளங்கள் வழங்கப்படாத நிலை காணப்படுவதாக சமீம் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக விரிவுரை மண்டபங்கள், ஆய்வகங்கள், நடைமுறைப் பயிற்சி வசதிகள் மற்றும் மருத்துவ அல்லது clinical training போன்ற சிறப்புப் பயிற்சிகளுக்குத் தேவையான வசதிகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதேவேளை, அவர்களுக்குத் தேவையான வசதிகளை அதிகரிக்காமல் இருப்பது பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை நேரடியாகப் பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களில் காணப்படும் மற்றுமொரு முக்கிய பிரச்சினையாக மாணவர்–ஆசிரியர் விகிதம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

விஞ்ஞானம் சார்ந்த துறைகளில் குறிப்பிட்ட மாணவர் எண்ணிக்கைக்கு ஒரு விரிவுரையாளர் என்ற அடிப்படையில் தேவையான விரிவுரையாளர் வளம் இருக்க வேண்டிய நிலையில், தற்போதைய மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான விரிவுரையாளர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதன் காரணமாக ஏற்கனவே பணியாற்றும் விரிவுரையாளர்களின் பணிச்சுமை அதிகரிப்பதுடன், கற்பித்தல், ஆய்வு, மாணவர் வழிகாட்டல் உள்ளிட்ட பல்வேறு கல்விசார் நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

விரிவுரையாளர்களை புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதிலும் காலதாமதங்கள் காணப்படுவதாகவும், இதனால் பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகள் மேலும் சிரமத்துக்குள்ளாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு சாதாரண பட்டப்படிப்பு மூன்று வருடங்களையும், சிறப்புப் பட்டப்படிப்பு நான்கு வருடங்களையும் கொண்டதாக இருக்கும்போது, அதற்கேற்ப பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர் தொகுதிகளை நிர்வகிக்க முடியும் எனவும் எம்.ஏ.எம் சமீம் தெரிவித்தார்.

ஆனால் தற்போது சில சந்தர்ப்பங்களில் நான்கு Batch-களுக்கு பதிலாக ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட Batch-களை நிர்வகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஏற்கனவே குறைவாக உள்ள விரிவுரை மண்டபங்கள், ஆய்வகங்கள் மற்றும் ஏனைய வசதிகளின் மீது மேலதிக அழுத்தம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான சூழ்நிலையில் மேலும் புதிய மாணவர் Batch-களை உள்வாங்குமாறு அறிவுறுத்தப்படும் போது, தேவையான வசதிகளை ஏற்படுத்தாமல் அதனை நடைமுறைப்படுத்துவது பல்கலைக்கழகங்களுக்கு பெரும் சவாலாக அமையும் என அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் இரண்டு, மூன்று சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டதைத் தொடர்ந்து அவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சமீம் தெரிவித்தார்.

எனினும், இதுவரை அந்த முன்மொழிவுகளுக்கு எதிர்பார்த்த வகையிலான சாதகமான முடிவு கிடைக்கவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார்.

அதேபோன்று, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் உயர்கல்வி அமைச்சருடனும் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், அந்தக் கலந்துரையாடலிலும் எதிர்பார்த்தளவிலான சாதகமான தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

UGC, பல்கலைக்கழக உபவேந்தர்களை உள்ளடக்கிய Committee of Vice-Chancellors and Directors (CVCD) மற்றும் அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் ஆகிய தரப்புகளின் பங்களிப்புடன் அரசாங்கத்திடம் பல்வேறு முன்மொழிவுகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது மட்டுமன்றி, அனுபவம் வாய்ந்த Senior Lecturers, Professors மற்றும் PhD தகுதியுடைய கல்வியாளர்களை ஈர்த்து தக்கவைத்துக்கொள்வதிலும் கடுமையான சவால்கள் காணப்படுவதாக சமீம் தெரிவித்தார்.

குறிப்பாக வரிவிதிப்பு தொடர்பான பிரச்சினைகள் விரிவுரையாளர்கள் அரச பல்கலைக்கழகங்களில் இணைவதற்கும் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கும் தடையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் அனுபவமிக்க விரிவுரையாளர்களை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களுக்கு அழைத்து வருவதில் taxation தொடர்பான பிரச்சினைகள் முக்கிய தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், விரிவுரையாளர்களுக்கான தொழில்முறை மேம்பாட்டு வாய்ப்புகள், ஆய்வு நிதி மற்றும் பயிற்சிகளுக்கான நிதி உள்ளிட்ட வசதிகள் போதுமானதாக இல்லாத நிலையும் காணப்படுவதாக அவர் கூறினார்.

இதனால் அனுபவமிக்க கல்வியாளர்களை ஈர்ப்பதில் சிரமம் ஏற்படுவதுடன், சில சந்தர்ப்பங்களில் பல்கலைக்கழகங்களில் இருந்து விரிவுரையாளர்கள் வெளியேறுவதற்கும் இது காரணமாக அமைவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் விரிவுரையாளர்களின் நலனுக்காக மட்டுமே முன்னெடுக்கப்படுபவை அல்ல எனவும் சமீம் வலியுறுத்தினார்.

அரச பல்கலைக்கழகங்களில் கல்வித் தரத்தை உயர்த்துவதும், மாணவர்களுக்கு தரமான உயர்கல்வியை உறுதி செய்வதுமே இதன் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என அவர் தெரிவித்தார்.

தனியார் பல்கலைக்கழகங்கள் அதிகளவான வளங்களுடன் இயங்கும் சூழ்நிலையில், அரச பல்கலைக்கழகங்களிலும் போதுமான வளங்கள் மற்றும் வசதிகளை ஏற்படுத்தி கல்வித் தரத்தை மேம்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டும் போதுமானதல்ல; அதற்கேற்ப ஆசிரியர்கள், விரிவுரை மண்டபங்கள், ஆய்வகங்கள், ஆய்வு வசதிகள் மற்றும் ஏனைய அடிப்படை வளங்களும் வழங்கப்பட வேண்டும்” என்பதே ஆசிரியர் சம்மேளனத்தின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் கலாநிதி அலி பூட்டோ கருத்துத் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதற்கேற்ப தேவையான வளங்கள் போதுமானதாக இல்லாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக practical-oriented பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்கு போதுமான ஆய்வகங்கள் மற்றும் நடைமுறைப் பயிற்சி வசதிகள் இல்லாததால் கடுமையான சிரமங்கள் ஏற்படுவதாக அவர் கூறினார்.

ஒரு குறிப்பிட்ட வசதியில் 100 மாணவர்களை மட்டுமே உள்வாங்கக்கூடிய நிலையில் 150 மாணவர்கள் அனுப்பப்பட்டால், அவர்களை முறையாக உள்வாங்கி கற்பிப்பது பெரும் சவாலாக மாறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களை பல குழுக்களாகப் பிரித்து கற்பிக்க வேண்டிய நிலை ஏற்படுவதால், விரிவுரையாளர்களின் பணிச்சுமை அதிகரிப்பதுடன், நேர அட்டவணை தயாரிப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாகவும் டாக்டர் அலி பூட்டோ குறிப்பிட்டார்.

சில சந்தர்ப்பங்களில் விரிவுரை மண்டபங்கள் மற்றும் ஆய்வக வசதிகள் போதாமையால் சில மாணவர் குழுக்களுக்கு இணையவழி மூலம் பாடங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் டாக்டர் அலி பூட்டோ தெரிவித்தார்.

இணையவழி மூலம் கோட்பாட்டு பாடங்களை கற்பிக்க முடிந்தாலும், practical பாடங்களை அதே முறையில் முழுமையாக நடத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் கோட்பாட்டு கற்றல் நிறைவடைந்த பின்னர் மாணவர்களை நடைமுறைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லும்போது மேலதிக சிக்கல்கள் உருவாகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களுக்கு அதிகமான மாணவர்களை அனுப்பும் அரசாங்கம், அதற்கேற்ப ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சில துறைகளுக்கு அண்மையில் புதிய விரிவுரையாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருந்தாலும், அனுபவம் வாய்ந்த Senior Lecturers மற்றும் Professors-ஐ ஈர்ப்பதில் தொடர்ந்தும் சிரமம் காணப்படுவதாக டாக்டர் அலி பூட்டோ தெரிவித்தார்.

கல்வியாளர்கள் எதிர்கொள்ளும் வரிச்சுமை காரணமாக, வேறு இடங்களில் கிடைக்கும் வாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில் அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றுவதற்கான ஆர்வம் குறைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக அனுபவமிக்க கல்வியாளர்களுக்கு பதிலாக இளநிலை கல்வியாளர்களை அதிகளவில் ஆட்சேர்ப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இது பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆய்வுத் துறைகளுக்கு நீண்டகால சவாலாக அமையக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, பல்கலைக்கழக கல்வியாளர்கள் எதிர்கொள்ளும் வரிவிதிப்பு பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய மறுபரிசீலனையை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

அரசாங்கம் நாட்டில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு ஆசிரியர் சம்மேளனம் எதிரானது அல்ல எனவும், மாறாக அதிகமான மாணவர்களுக்கு அரச பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு எனவும் பத்திரிகையாளர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இணையாக போதுமான கல்வியாளர்கள், விரிவுரை மண்டபங்கள், ஆய்வகங்கள், பயிற்சி வசதிகள், ஆய்வு நிதி மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான வசதிகள் இல்லாமல் மாணவர் எண்ணிக்கையை மட்டும் அதிகரிப்பது அரச பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தைப் பாதிக்கும் என்பதால், தற்போதைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாகவும் நடைமுறை ரீதியாகவும் தீர்வு காண வேண்டும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் மற்றும் அதன் சகோதர தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளின் நோக்கம், ஆசிரியர்களின் நலன்களை மட்டுமன்றி, அரச பல்கலைக்கழகங்களில் கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் இலங்கையின் அரச உயர்கல்வி முறைமையின் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதே எனவும் பத்திரிகையாளர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்வில் கலாநிதி ஐ.எம். காலித், கலாநிதி ஏ.எச்.றிபாஸ் உள்ளிட்ட உயர்மட்ட அங்கத்தவர்களுடன் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களும் பங்கு கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :