“ஆய்வை தேசியத் தேவைகளுடன் இணைக்க வேண்டும்” – சிரேஷ்ட பேராசிரியர் றவூப்



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வுக் கருத்தரங்கு 2026

எம்.வை. அமீர்-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வுக் கருத்தரங்கு 2026இல் பிரதான உரையாற்றிய சிரேஷ்ட பேராசிரியர் ஏ.எல்.ஏ. றவூப், இலங்கையின் தேசியத் தேவைகளுடன் ஆய்வுகளை இணைத்து, அவற்றை சமூக மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கான நடைமுறைப் பங்களிப்பாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

“இளைய ஆய்வாளர்கள் தற்போதைய சூழலில் இலங்கையின் தேசியத் தேவைகளுக்கான அர்ப்பணிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், ஆய்வு என்பது பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான கல்வித் தேவையோ, நல்ல புள்ளிகளைப் பெறுவதற்கான முயற்சியோ மாத்திரமல்ல என்றும், சமூகத்தைப் புரிந்துகொண்டு, பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான தீர்வுகளைத் தேடுவதற்கான பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.

இளைய ஆய்வாளர்கள் அறிவின் நுகர்வோராக இருப்பதிலிருந்து அறிவை உருவாக்குபவர்களாக மாறுவதாகக் குறிப்பிட்ட அவர், தமது ஆய்வுகளை கல்வித் தேவையாக மாத்திரம் கருதாமல், சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பாக அணுக வேண்டும் என்றார். இலங்கை எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களுக்கு புதிய சிந்தனை, நம்பகமான ஆதாரங்கள், புத்தாக்கம் மற்றும் பொறுப்பான தலைமைத்துவம் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

நல்ல ஆய்வு சுவாரஸ்யமான தலைப்பொன்றைத் தெரிவு செய்வதிலிருந்து அல்ல, அர்த்தமுள்ள பிரச்சினையொன்றை அடையாளம் காண்பதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என சிரேஷ்ட பேராசிரியர் றவூப் வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் போன்ற பரந்த துறைகளை ஆய்வு செய்யும்போது, அவற்றுக்குள் எந்தக் குறிப்பிட்ட பிரச்சினையைப் புரிந்துகொள்ள அல்லது தீர்க்க முயற்சிக்கிறோம் என்பதை ஆய்வாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார். மேலும், “இது இலங்கைக்கு ஏன் முக்கியமானது?” என்ற கேள்வியை ஒவ்வொரு ஆய்வாளரும் எழுப்பிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆய்வுகள் தரவுகளைச் சேகரிப்பதுடன் முடிவடையாமல், ஆதார அடிப்படையிலான முடிவெடுப்பிற்கு வழிவகுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஆய்வின் பெறுமதி வினாத்தாள்களின் எண்ணிக்கையிலோ புள்ளிவிபரப் பரிசோதனைகளின் எண்ணிக்கையிலோ அல்ல; ஆதாரங்களின் தரத்திலும் அவற்றிலிருந்து பெறப்படும் முடிவுகளின் பயன்தன்மையிலும் தங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆய்வு நேர்மை ஆய்வாளரின் தொழில்சார் அடையாளமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட சிரேஷ்ட பேராசிரியர் றவூப், தரவுகளைப் போலியாக உருவாக்குதல், கண்டுபிடிப்புகளைத் திரித்தல், பிறரது ஆய்வுகளைப் பிரதியெடுத்தல் மற்றும் கருத்துத் திருட்டு போன்ற செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காவிட்டாலும், தரவுகள் வெளிப்படுத்தும் உண்மையை நேர்மையாக முன்வைப்பதே ஆய்வாளரின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார். ஆய்வு நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்படுவதால், தவறான தரவுகள் தவறான முடிவுகளுக்கும், அவற்றின் அடிப்படையிலான பாதிப்பான முடிவெடுப்புகளுக்கும் வழிவகுக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஆய்வறிக்கை அல்லது ஆய்வு முன்வைப்புடன் ஆய்வு நிறைவடையக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், ஆய்வு முடிவுகளை நடைமுறைத் தாக்கமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

“எனது ஆய்வுக் கண்டுபிடிப்புகளால் என்ன நிகழ முடியும்?” என்ற கேள்வியை ஆய்வாளர்கள் எழுப்பிக்கொள்ள வேண்டும் எனக் கூறிய அவர், பிரச்சினையை அடையாளம் காணுதல், ஆதாரங்களைச் சேகரித்தல், முடிவுகளை உருவாக்குதல், பரிந்துரைகளை முன்வைத்தல் மற்றும் நடவடிக்கைகளின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துதல் என்ற தொடர்ச்சியான செயல்முறையாக ஆய்வு அமைய வேண்டும் என்றார்.

சமூகத்தில் போதிய கவனம் பெறாத பிரச்சினைகளுக்கும் ஆய்வுகள் குரல் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சிறு தொழில்முனைவோர், இளம் பட்டதாரிகள், விவசாயிகள், கிராமப்புற தொழில்முனைவோர், நுகர்வோர் மற்றும் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆய்வுகளின் கவனத்திற்கு வர வேண்டும் என்றார். “ஒவ்வொரு எண்ணுக்குப் பின்னாலும் ஒரு மனிதர், குடும்பம், நிறுவனம் அல்லது சமூகமொன்று உள்ளது” என்பதை ஆய்வாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இளைய ஆய்வாளர்கள் ஆர்வம், ஆதாரம், ஆய்வு நேர்மை, பொருத்தப்பாடு மற்றும் தாக்கம் ஆகிய ஐந்து விடயங்களுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

இலங்கைக்கு தேவைப்படுவது பிரச்சினைகளை வெறுமனே ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் அல்ல; அவற்றைத் தீர்ப்பதற்குப் பங்களிக்கும் ஆய்வாளர்களே என வலியுறுத்திய சிரேஷ்ட பேராசிரியர் றவூப், ஆய்வு என்பது பரீட்சைக்கான தயாரிப்பு அல்ல, எதிர்கால தலைமைத்துவத்திற்கான தயாரிப்பு என்றும் குறிப்பிட்டார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கு, “Transforming Business for a Sustainable and Digital Future: Innovation, Intelligence and Impact” என்ற தொனிப்பொருளில் 2026 செப்டெம்பர் 28ஆம் திகதி நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களின் ஆய்வுகள் தொழில்நுட்ப அமர்வுகளில் முன்வைக்கப்பட்டு, கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்துக்கள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :