தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அமைதியான அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!



மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்கவும், கல்விசார் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணவும் கோரிக்கை
லங்கை அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் கல்விசார் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) முன்னெடுத்துள்ள தொடர் தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் இன்று (09) அமைதியான அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம் தலைமையிலும் செயலாளர் கலாநிதி எம்.சி. அலிபூட்டோவின் நெறிப்படுத்தலிலும் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் விரிவுரையாளர்கள் பங்கேற்று, பல்கலைக்கழக கல்விக் கட்டமைப்பை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

“மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாப்போம் – கல்விசார் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்போம்” என்ற கோரிக்கையை முன்வைத்து இடம்பெற்ற இந்த அடையாளப் போராட்டத்தில், பல்கலைக்கழக ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் முன்வைத்துள்ள பிரதான கோரிக்கைகளில், அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் கல்விசார் ஊழியர் பற்றாக்குறைக்கு நிலையான தீர்வு காணுதல், அதன் காரணமாக தற்போதுள்ள ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிகப்படியான மேலதிக கல்விசார் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவை முக்கியமானவையாகும்.

மேலும், பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பல்கலைக்கழக விரிவுரையாளர்களை விஷேட தரத்துக்குள் உள்வாங்குதல் மற்றும் பரீட்சை கடமைகளுக்காக விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரித்தல், வருகைதரும் விரிவுரையாளர்களுக்கான கொடுப்பனவுகளை மறுபரிசீலனை செய்தல், வெளிநாடுகளில் ஓய்வுக்கால கல்வி விடுமுறைக்கு (Sabbatical Leave) செல்லும் கல்வியாளர்களுக்கான விமானப் பயணக் கொடுப்பனவை மீள வழங்குதல் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகள் அரச பாடசாலைகளில் தரம் 1 உள்ளிட்ட வகுப்புகளில் சேர்க்கப்படுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பல்கலைக்கழக கல்வியாளர்களுக்கான பொருத்தமான சொத்து/வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துதல் அல்லது மீள நடைமுறைப்படுத்துதல், கல்வியாளர்களுக்கு உரிய வரி நிவாரணங்களை வழங்குதல், தற்போதுள்ள சம்பள முரண்பாடுகளைத் தீர்த்து நியாயமான சம்பளக் கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவையும் கோரிக்கைகளில் இடம்பெற்றுள்ளன.

கல்விசார் ஊழியர் பற்றாக்குறை மற்றும் அதனால் ஏற்படும் மேலதிக பணிச்சுமையை நிவர்த்தி செய்வதற்காக எதிர்வரும் தேசிய வரவு–செலவுத் திட்டத்தின் ஊடாக விசேட திட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் FUTA தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் ஐந்து வருட காலப்பகுதியில் மாணவர்–ஆசிரியர் விகிதத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய மட்டத்திற்கு படிப்படியாகக் கொண்டு வருவதே நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, FUTA-வின் நிர்வாக சபைக் கூட்டம் செப்டம்பர் 7ஆம் திகதி நடைபெற்ற நிலையில், அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கும் தமது நியாயமான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக செப்டம்பர் 9ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அரச பல்கலைக்கழக முறைமை எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, பல்கலைக்கழக ஆசிரியர் சமூகமும் அதன் எதிர்காலமும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என FUTA வலியுறுத்தியுள்ளது. தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஒன்றுபட்டு செயற்படுமாறும், அனைத்து உறுப்பினர்களும் ஒருமைப்பாட்டுடன் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குமாறும் FUTA கோரியுள்ளது.

அதன் அடிப்படையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இன்றைய போராட்டமும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டதுடன், பல்கலைக்கழக கல்வியின் தரத்தையும் மாணவர்களின் கல்வி உரிமையையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்ற செய்தியை உரிய தரப்பினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைந்தது.

“மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாப்போம்; கல்விசார் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்போம்” என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற இந்த அடையாள வேலைநிறுத்தம், அரச பல்கலைக்கழகக் கல்விக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவானதும் நிலையானதுமான தீர்வுகளை எதிர்பார்க்கும் ஆசிரியர் சமூகத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :