SESDO SRI LANKA 19ஆவது ஆண்டு நிறைவு விழா: இமாம்கள், முஅத்தின்மார்களுக்கு சான்றிதழ் வழங்கி, நீண்டகால சேவையாளர்கள் கௌரவிப்பு



ருதமுனையைத் தளமாகக் கொண்டு சமூக, மார்க்க, கல்வி மற்றும் இளைஞர் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வரும் SESDO SRI LANKA தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் 19ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மருதமுனைப் பிரதேச பள்ளிவாசல்களில் கடமையாற்றும் பேஷ் இமாம்கள் மற்றும் முஅத்தின்மார்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்வும், நீண்டகாலமாக சமூகத்துக்கும் இறை இல்லங்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருபவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

மருதமுனை மழ்ஹருள் மக்பூலியா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு SESDO SRI LANKA நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் நாபி எம். முஸ்னீ தலைமை தாங்கினார்.

நிகழ்வில் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் அஷ்ஷெய்க் F.M.A. அன்சார் மௌலானா (நளீமி, MA) சிறப்புரையாற்றினார். North London Lecturer and Chaplain பதியுதீன் அப்துஸ் ஸமத் விசேட உரையாற்றியதுடன், ஓமான் சுல்தான் காபூஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி H.M. நஸிர் கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
21 பள்ளிவாசல்களின் இமாம்கள், முஅத்தின்மார்களுக்கு கௌரவம்

மருதமுனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள 21 பள்ளிவாசல்களில் கடமையாற்றும் பேஷ் இமாம்கள் மற்றும் முஅத்தின்மார்களின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சமூகத்தின் ஆன்மிக வழிகாட்டிகளாகவும், பள்ளிவாசல்களின் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கும் முக்கிய சேவையாளர்களாகவும் விளங்கும் இமாம்கள் மற்றும் முஅத்தின்மார்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு சான்றிதழ்களும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.

மேலும், SESDO SRI LANKA ஏற்பாடு செய்திருந்த பயிற்சிக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பல தசாப்த சேவையாளர்களுக்கு கௌரவம்

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, பல தசாப்தங்களாக கல்வி, இளைஞர், சமூக மற்றும் மார்க்கப் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அந்த வகையில்,
அஷ்ஷெய்க் F.M.A. அன்சார் மௌலானா (நளீமி, MA) – 33 வருட கல்விச் சேவை
ஜனாப் நழீம் எம். வதுறுதீன் – 33 வருட அரச முகாமைத்துவ சேவை
ஜனாப் M.T.M. ஹாருன் – 29 வருட இளைஞர் மற்றும் சமூக சேவை

ஆகியோரின் நீண்டகால அர்ப்பணிப்பான சேவைகள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டன.

அதேபோன்று, இறை இல்லங்களின் பணியில் பல வருடங்களாக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் நீண்டகால சேவையாளர்களும் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுச் சின்னங்கள் வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டனர்.

அவர்களில்,
அல்-ஹாபிழ் அஷ்ஷெய்க் அப்துர் றஸ்ஸாக் முஹம்மத் ஜரீர் (பஹ்மி) – 23 வருட இமாமத் சேவை
அல்-ஹாபிழ் அஷ்ஷெய்க் A.R. பைசால் கியாஸ் (பலாஹி, BA) – 20 வருட இமாமத் சேவை
M.L. செய்யது அகமது மௌலானா – 37 வருட முஅத்தின் சேவை
ஜனாப் A. பதுறுத்தீன் – 33 வருட முஅத்தின் சேவை

ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
மஸ்ஜித் மைய சமூகத்தை உருவாக்கும் நோக்கம்

SESDO SRI LANKA நிறுவனத்தின் 19ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு வெறுமனே ஒரு நினைவு நிகழ்வாக அமைந்துவிடாமல், பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு சமூக முன்னேற்றத்தை வலுப்படுத்தும் எதிர்காலப் பார்வையையும் வெளிப்படுத்தியது.

“2030–2040இல் மருதமுனை மஸ்ஜித் மைய மக்கள் – மக்கள் நேய மஸ்ஜித்” என்ற மகுட வாசகத்துடன், “Masjith Centred People – People Friendly Masjith” என்ற கருத்தாக்கத்தை மக்களின் வெளிச்சமாக SESDO SRI LANKA முன்மொழிந்தது.

மஸ்ஜித்கள் வெறுமனே தொழுகைக்கான இடங்களாக மாத்திரமன்றி, சமூக ஒற்றுமை, கல்வி, இளைஞர் வளர்ச்சி, சமூக நலன் மற்றும் மனிதநேயப் பணிகளுக்கான மையங்களாகவும் விளங்க வேண்டும் என்ற நோக்கத்தை இக்கருத்தாக்கம் வலியுறுத்துவதாக அமைந்தது.
சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட ஏற்பாடுகள்

நிகழ்வின் ஒழுங்கமைப்பு மற்றும் நெறிப்படுத்தும் பணிகளை SESDO SRI LANKA நிறுவனத்தின் பிரதித் தலைவர் எம்.ஐ. பௌமி மற்றும் SESDO சமய கலாசார பேரவையின் இணைப்பாளர் அஷ்ஷெய்க் றிழா கமால்தீன் ஆகியோர் சிறப்பாக முன்னெடுத்தனர்.

நன்றியுரையை நிறுவனத்தின் உயர்பீட உறுப்பினர் ஜே.எம். ஹபீழ் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் மருதமுனைப் பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள், நிர்வாகிகள், சமூக நலன்விரும்பிகள், ஊர்ப் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் SESDO SRI LANKA நிறுவனத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

19 ஆண்டுகால சமூகப் பணிப் பயணத்தில் தன்னலமற்ற சேவையாளர்களின் பங்களிப்பை அடையாளப்படுத்தி, அவர்களைப் பாராட்டி கௌரவித்த இந்நிகழ்வு, எதிர்கால தலைமுறையினரையும் சமூக, கல்வி மற்றும் மார்க்கப் பணிகளில் ஈடுபடத் தூண்டும் வகையில் அமைந்ததுடன், மருதமுனையின் மஸ்ஜித் மைய சமூக வளர்ச்சிக்கான புதிய பார்வையையும் வெளிப்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வாகப் பதிவானது.

அல்லாஹுத்தஆலா அனைத்து சேவையாளர்களினதும் நற்செயல்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்கி, எதிர்காலத்திலும் சமூகத்திற்கும் மார்க்கத்திற்கும் சிறப்பாக சேவையாற்றும் வாய்ப்பை வழங்குவானாக! ஆமீன்.

ஊடகப் பிரிவு
SESDO SRI LANK.























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :