இலங்கை அரசாங்கம் அரசுசாரா அமைப்புகள் (NGO) தொடர்பான புதிய சட்டமூலத்தை இம்மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்தச் சட்டமூலம் தொடர்பில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக ஆளுமை குறித்து தீவிர கவலைகள் எழுந்துள்ளதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்பணி லூக்ஜோன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் ஆயுத மோதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி, உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் இழப்பீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் மத அடிப்படையிலான சமூக சேவை அமைப்புகளின் பணிகளில் இந்தச் சட்டமூலம் தேவையற்ற கட்டுப்பாடுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட மற்றும் உளவியல் ஆதரவு வழங்குதல், உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயற்படுதல் போன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படுமா என்பது குறித்து விரிவான பொதுக் கலந்துரையாடல் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஜனநாயக சமூகத்தில் சங்கம் அமைக்கும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடும் உரிமை ஆகியவை அடிப்படை மனித உரிமைகளாகும். எனவே, புதிய சட்டமூலம் அவ்வுரிமைகளுக்கு தேவையற்ற அல்லது அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த சட்டமூலத்தை முழுமையாக ஆய்வு செய்து, அது மனித உரிமைகள், ஜனநாயகப் பெறுமதிகள் மற்றும் சிவில் சமூகத்தின் சுயாதீன செயற்பாட்டை பாதிக்கும் வகையில் இருப்பதாக கருதினால், அதற்கு எதிராக வாக்களிக்குமாறு பணிவுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் நிலையான நல்லிணக்கம், நீதியுடனான சமாதானம் மற்றும் சட்டத்தின் ஆட்சி வலுப்பெற வேண்டுமெனில், பாதிக்கப்பட்ட மக்களின் குரலைக் கேட்கும் சுதந்திரமான சிவில் சமூக அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றை பலவீனப்படுத்தாமல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் சமநிலையான சட்ட அணுகுமுறையே நாட்டின் ஜனநாயக வளர்ச்சிக்கு உதவும் என்றும் அருட்பணி லூக்ஜோன் வலியுறுத்தியுள்ளார்.
– அருட்பணி லூக்ஜோன்
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்
கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியம்

0 comments :
Post a Comment