கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு பர்தா தடை? — ‘வுமென்ஸ் கோர்ப்ஸ்’ கடும் கண்டனம்



னைத்துச் சமூகத்தினரும் தத்தமது கலாச்சார உடைகளுடன் பணியாற்ற அனுமதிக்கப்படும் நிலையில், முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் தடை விதிப்பது அப்பட்டமான பாகுபாடு என குற்றச்சாட்டு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து பணிக்குச் சென்ற முஸ்லிம் பெண் ஊழியர்கள் கடமையேற்க அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டமை அடிப்படை உரிமை மீறலாகும் என ‘வுமென்ஸ் கோர்ப்ஸ்’ (Women’s Corps) பெண்கள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள அவ்வமைப்பு, உடனடியாக தலையிட்டு தீர்வு காணுமாறு கோரி பிரதமர், மகளிர் விவகார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அவசரக் கடிதங்களை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக ‘வுமென்ஸ் கோர்ப்ஸ்’ அமைப்பின் தலைவி ஏ. எப். நிகாஸா ஷர்பீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சுகாதார அமைச்சின் ஊடாக அண்மையில் நிரந்தர நியமனம் பெற்ற ஒன்பது முஸ்லிம் பெண் ஊழியர்கள், கடந்த திங்கட்கிழமை (10) தமது சேவையை ஆரம்பிப்பதற்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர். எனினும், வைத்தியசாலையின் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு கடமையைப் பொறுப்பேற்க அவர்களுக்கு நிர்வாகத்தினால் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பர்தா ஆடையை அகற்றினால் மட்டுமே பணியில் இணைய முடியும் என்றும், அவ்வாறு செய்ய முடியாவிட்டால் வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இது தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் கவலைக்குரியவை எனத் தெரிவித்துள்ள நிகாஸா ஷர்பீன், முஸ்லிம் பெண் ஊழியர்களின் உரிமைகளை பாதிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை தமது அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டம், தாபன விதிக்கோவை மற்றும் அரச சுற்றறிக்கைகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளை ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் தன்னிச்சையாக மறுக்க முடியாது எனச் சுட்டிக்காட்டிய அவர், அனைத்துச் சமூகத்தினரும் தத்தமது கலாச்சார உடைகளுடன் பணியாற்ற அனுமதிக்கப்படும் நிலையில், முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் ஆடை தொடர்பில் கட்டுப்பாடு விதிக்கப்படுவது அப்பட்டமான பாகுபாடாகும் எனக் குற்றஞ்சாட்டினார்.

இப்பிராந்திய முஸ்லிம் மக்கள் பெருமளவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் மருத்துவ சேவைகளைப் பெற்று வருகின்றனர். இவ்வாறான முக்கியமான சுகாதார சேவை நிலையத்தில் சிலரின் செயற்பாடுகள் காரணமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படும் இந்த நிலைமை, பொதுமக்கள் மத்தியில் கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் தேவையற்ற முரண்பாடுகளையும் கசப்புணர்வுகளையும் ஏற்படுத்தக்கூடிய இத்தகைய செயற்பாடுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பதுடன், சம்பவம் தொடர்பில் அரசு உரிய விசாரணை நடத்தி நியாயமான தீர்வை வழங்க வேண்டும் எனவும் ‘வுமென்ஸ் கோர்ப்ஸ்’ வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் தங்களது ஆதரவை வழங்கி வரும் சிவில் அமைப்புகள், சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் ‘வுமென்ஸ் கோர்ப்ஸ்’ பெண்கள் அமைப்பு தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :