ஊழியர் சங்கத் தலைவர் எம்.சி.ஏ. முனாஸ் முஹிதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எச்.எம்.எம். நளீர் பிரதம விருந்தினராகவும், உதவிப் பதிவாளர் எம்.எஸ்.எம். இம்தியாஸ் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர். மேலும், ஊழியர் சங்கச் செயலாளர் எம்.என். முஸ்னி, நலன்புரிச் செயலாளர் ஏ.ஆர்.எம். ஸியாம் மற்றும் பீடத்தின் அனைத்து கல்விசாரா ஊழியர்களும் கலந்துகொண்டு ஓய்வுபெறும் உத்தியோகத்தருக்கு தமது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
நிகழ்வின் வரவேற்புரையை நிகழ்த்திய பிரயோக விஞ்ஞான பீடப் பிரதிநிதி ஏ.எம். றம்ஸான், ரயீஸ் அவர்கள் அமைதியான ஆளுமை, நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் நம்பிக்கைக்குரிய பணித்திறன் கொண்டவர் எனக் குறிப்பிட்டார். ஒப்படைக்கப்பட்ட பணிகளை மிகுந்த நுணுக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றி பல்கலைக்கழக சமூகத்தில் மதிப்பிற்குரிய இடத்தைப் பெற்றவர் என்றும், அவரது நேர்மையான உழைப்பின் பலனாக அவரது மூன்று மகள்களும் இன்று மருத்துவர்களாக உயர்ந்திருப்பது அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனையாகும் என்றும் பாராட்டினார்.
நிகழ்வில் எம்.ரி.எம். நஜீப் மற்றும் ஏ.எம். ஜாபிர் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்று நிகழ்வுக்கு மேலும் மெருகூட்டின. தொடர்ந்து தலைமையுரையாற்றிய ஊழியர் சங்கத் தலைவர் எம்.சி.ஏ. முனாஸ் முஹிதீன், ரயீஸ் அவர்களின் 15 ஆண்டுகால சேவை அளப்பரியது என்றும், அவர் சக ஊழியர்களுடன் குடும்ப உறுப்பினர் போன்று அன்புடனும் மனிதநேயத்துடனும் பழகியவர் என்றும் குறிப்பிட்டார். “அவரது ஓய்வு பணியிலிருந்து மட்டுமே; எங்கள் இதயங்களில் இருந்து அல்ல” என்ற அவரது கருத்து நிகழ்வில் கலந்துகொண்டவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நிகழ்வின் சிறப்பம்சமாக, ஊழியர் சங்கச் செயலாளரால் பிரியாவிடை வாழ்த்துமடல் வாசிக்கப்பட்டு வழங்கப்பட்டதுடன், எம்.ஏ.எம். ரயீஸ் அவர்களுக்கு நினைவுப் பரிசு, ஞாபகச் சின்னம் மற்றும் பரிசுப் பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. உதவிப் பதிவாளர் எம்.எஸ்.எம். இம்தியாஸ் தனது உரையில், ரயீஸ் அவர்களின் அமைதியான ஆளுமை, நேரம் பார்க்காது உழைக்கும் பணிப்பற்று மற்றும் பொறுப்புணர்வு ஏனைய ஊழியர்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
பிரதம விருந்தினராக உரையாற்றிய பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எச்.எம்.எம். நளீர், பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு முன்னரே ரயீஸ் அவர்களைத் தனக்குத் தெரியும் என்றும், கல்விப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் வளர்ந்த அவர் எளிமை, பணிவு மற்றும் திறமையால் அனைவரின் மரியாதையையும் பெற்றவர் என்றும் பாராட்டினார். தனது ஏற்புரையில் எம்.ஏ.எம். ரயீஸ் அவர்கள், “எனது கடமையை எப்போதும் பொறுப்புடனும் தார்மீக உணர்வுடனும் நேசித்துச் செய்தேன். கடமையை நேசித்து உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். இன்று நீங்கள் அளித்துள்ள இந்த அன்பும் கௌரவிப்பும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவாக இருக்கும்” என உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார்.
இறுதியாக வேலைக் கண்காணிப்பாளர் அஸ்லம் நன்றியுரை நிகழ்த்தியதுடன், கலந்துகொண்ட அனைவருக்கும் பகல் போசனம் வழங்கப்பட்டு, அன்பும் நன்றியுணர்வும் நிறைந்த இப்பிரியாவிடை நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

















0 comments :
Post a Comment