வைத்தியர் ஷாபிக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மையமாகக் கொண்ட சிங்களத் திரைப்படம்



கல்முனையில் விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு; உள்ளூர் மக்களும் பங்கேற்பு

பாறுக் ஷிஹான்-
ர்ச்சைக்குரிய முறையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிகளையும், அவர் எதிர்கொண்ட நெருக்கடியான காலகட்டத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் புதிய சிங்களத் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கல்முனையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இத்திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் கடந்த புதன்கிழமை (12) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் வளாகத்தில் படமாக்கப்பட்டன. இதன்போது, வைத்தியர் ஷாபி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டன.

வைத்தியர் ஷாபி பல்வேறு சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்ட காலப்பகுதியில், பாதுகாப்பான சூழலைத் தேடி கல்முனைப் பகுதியில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் பின்னணியும் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது.

அவரது வாழ்க்கைப் பயணத்தில் கல்முனை ஒரு முக்கியமான அடைக்கலப் பகுதியாக விளங்கியதாகக் கூறப்படும் நிலையில், அந்தக் காலகட்டத்துடன் தொடர்புடைய முக்கியமான காட்சிகளை தத்ரூபமாக பதிவு செய்வதற்காக படக்குழுவினர் கல்முனையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

குறிப்பாக, நெருக்கடியான காலத்தில் வைத்தியர் ஷாபிக்கு கல்முனைப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து ஆறுதல், நம்பிக்கை மற்றும் மனபலத்தை வழங்குவது போன்ற காட்சிகளும் உள்ளூர் மக்களின் பங்கேற்புடன் படமாக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் அக்காலகட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களையும், அதனால் ஏற்பட்ட மனிதாபிமான மற்றும் சமூக தாக்கங்களையும் உணர்வுபூர்வமான முறையில் வெளிப்படுத்த படக்குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.

உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்டு வரும் இத்திரைப்படம், வைத்தியர் ஷாபி எதிர்கொண்டதாகக் கூறப்படும் அநீதிகள் மற்றும் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களை இலங்கை மக்களுக்கும் சர்வதேச பார்வையாளர்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

கல்முனையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் உள்ளூர் மக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று வருவதுடன், திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் தொடர்ந்து ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :