அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, அவரைத் துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவப் பின்னணி
கடந்த காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் பதவி வகித்த காலப்பகுதியில், அங்கு கடமையாற்றிய அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, தன்னைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குறித்த பெண் அண்மையில் முகநூல் நேரலையொன்றின் மூலம் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் குறித்த பெண் முறைப்பாடு செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாட்டைத் தொடர்ந்து, அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காக அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதன்போது, அப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே தலைமையிலான பொலிஸ் குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக, அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, சட்ட நடவடிக்கைகளுக்காக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரை ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
(முகப்புப்படம் Ai மூலம் உருவாக்கப்பட்டது)

0 comments :
Post a Comment