வி.ரி. சகாதேவராஜா-
சீருடை என்பது அனைவருக்கும் பொதுவான ஓர் உடையாகும். அதனை ஒவ்வொரு மதத்திற்கும் ஏற்றவாறு மாற்ற முடியாது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சீருடை விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பொதுவாக ஒரு சீருடையை அறிமுகப்படுத்தினால், அதனைப் பின்பற்றி ஏற்றுக்கொள்வது அனைவரினதும் கடமையாகும்.
ஒவ்வொரு மதத்தவரும் தமது விருப்பத்திற்கேற்ப ஆடைகளை அணியலாம் என்ற நிலை ஏற்பட்டால், சீருடை என்ற ஒன்றின் அவசியமே இல்லாமல் போய்விடும்.
புதிய சுகாதார உதவியாளர்களுக்கு கொழும்பில் மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டபோது, சீருடை தொடர்பில் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த விடயத்தைத் தேவையற்ற வகையில் பெரிதுபடுத்தி, கல்முனை ஆதார வைத்தியசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஒரு குழுவினர் திட்டமிட்டு சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.
சட்டமும் நீதியும் தமது கடமையைச் செய்யும். எனவே, யாரும் அஞ்சத் தேவையில்லை. இறுதியில் உண்மை வெல்லும்” என அவர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment