நூருல் ஹுதா உமர்-
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக சுகாதார உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட பெண் உத்தியோகத்தர்கள், உரிய சீருடையில் வருகை தரவில்லை என்ற காரணத்தைக் கூறி கடமையேற்கத் தடுக்கப்பட்டதுடன், வரவு புத்தகத்தில் கையொப்பமிடவும் அனுமதிக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் சுகாதார உதவியாளர்கள் சார்பில் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ருடானி சாஹீர் ஆகியோரின் பிரசன்னத்துடன், திங்கட்கிழமை (10) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம், கடந்த ஆகஸ்ட் 6ஆம் திகதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்ற சுகாதார உதவியாளர்கள், தங்களுக்குரிய சீருடையில் வருகை தரவில்லை என்ற காரணத்தை முன்வைத்து கடமையேற்க அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை அதிகாரிகள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களால் குறித்த உத்தியோகத்தர்கள் கடமைகளைப் பொறுப்பேற்பதிலிருந்தும், வரவு புத்தகத்தில் கையொப்பமிடுவதிலிருந்தும் தடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், ஆகஸ்ட் 9 மற்றும் 10ஆம் திகதிகளிலும் குறித்த பெண் உத்தியோகத்தர்கள் கடமைகளை மேற்கொள்வதற்காக வைத்தியசாலை வளாகத்துக்குச் சென்றபோதும், தனியான அறையில் வைக்கப்பட்டதுடன், வரவு புத்தகத்தில் கையொப்பமிடுவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்த நிலைமை தொடர்பில் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் தங்களை அணுகி சட்ட உதவியை கோரியதைத் தொடர்ந்து, தானும் சிரேஷ்ட சட்டத்தரணி ருடானி சாஹீரும் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஸ்ரீசங்கர், வைத்திய அதிகாரி டாக்டர் ரஜீந்தர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து நிலைமை தொடர்பில் கலந்துரையாடியதாக முஅஸ்ஸம் தெரிவித்தார்.
வைத்தியசாலை மட்டத்திலேயே உள்ளகப் பொறிமுறையின் ஊடாக பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும், எனினும் அவ்வாறு தீர்வு காண்பதற்கான போதுமான பொறிமுறை இல்லை என்பது தமக்குத் தெளிவானதாகவும் அவர் கூறினார்.
சுற்றுநிருபம் மீறப்பட்டதா?
சுகாதார உதவியாளர்களுக்கான ஆடை தொடர்பில் குறிப்பிட்ட சுற்றுநிருபம் இருப்பதாகவும், அதனை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் எனவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்ததாக சட்டத்தரணி கூறினார்.
எனினும், 2019 ஜூன் 26ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றுநிருபம் 13/2019 தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.
குறித்த சுற்றுநிருபத்தின் உப பிரிவு 4இன் படி, மத ரீதியான ஆடை ஒழுங்குகளைப் பின்பற்றும் அரச உத்தியோகத்தர்கள், தங்களது மத அடையாளத்தைப் பேணுவதற்காக மேலதிக ஆடையொன்றைப் பயன்படுத்த முடியும் எனவும், அதேவேளை முகம் முழுமையாகத் தென்படும் வகையில் அவர்களைத் தெளிவாக அடையாளம் காணக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, குறித்த பெண் உத்தியோகத்தர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சுகாதார உதவியாளர்களுக்கான சீருடையில் மாற்றம் செய்யாமல், அதற்கு மேலதிகமாக தங்களது மத அடையாளத்தைப் பேணுவதற்கான ஆடை ஒழுங்கை மேற்கொள்ள முடியும் எனவும் சட்டத்தரணி விளக்கினார்.
அரசாங்கத்தின் குறித்த சுற்றுநிருபம் நடைமுறையில் இருக்கும் நிலையில், அதனை மீறி உத்தியோகத்தர்களை கடமையேற்க விடாமல் தடுத்திருந்தால் அது தொடர்பில் தீவிரமான சட்ட மற்றும் மனித உரிமை கேள்விகள் எழும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் வைத்தியசாலையின் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர், ஒழுக்காற்றுப் பொறுப்புடைய வைத்திய அதிகாரி டாக்டர் ரஜீந்தர் மற்றும் சுகாதார உதவியாளர்களுக்கான மேற்பார்வை அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகத்தினர் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 5 முறைப்பாடுகள்
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் உத்தியோகத்தர்கள் சார்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் 5 தனித்தனி முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்தல்கள் அனுப்பப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
நாட்டின் சட்டம், நீதி, ஒழுங்கு மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நிறுவனங்கள் மீது தங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாக தெரிவித்த அவர்கள், பாதிக்கப்பட்ட பெண் உத்தியோகத்தர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டனர்.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த விடயத்தில் வீரியத்துடனும் வினைத்திறனுடனும் செயற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது” என அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்வதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை நிர்வாகத்தின் பதில் என்ன?
இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தின் பதில் அல்லது விளக்கத்தைப் பெற ஊடகவியலாளர்கள் முயற்சித்தபோதும், அதற்கான வாய்ப்பை வைத்தியசாலை நிர்வாகம் வழங்க முன்வரவில்லை.
எனவே, இந்த விவகாரம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு வெளியாகும் பட்சத்தில் அதுவும் செய்தியில் உரிய முறையில் பதிவு செய்யப்படும்.

0 comments :
Post a Comment