பகிடிவதைக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை: "ஒரு மாணவனின் கனவைக் கலைக்காதீர்கள்" – தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் வலியுறுத்தல்



"ஒரு மாணவனின் அல்லது மாணவியின் கனவு என்னால் கலைக்கப்படாது" என்ற உறுதியை ஒவ்வொரு மாணவரும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், பகிடிவதைக்கு (Ragging) எதிராக தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை (Zero Tolerance Policy) கொள்கையை உறுதியாகப் பின்பற்றுவதாகவும், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) எஸ். எம். ஜுனைடீன் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் 2024/2025 புதிய மாணவர் அணிக்கான ஆரம்ப மற்றும் வழிகாட்டல் (Inauguration & Orientation) நிகழ்வு திங்கட்கிழமை (03.08.2026) பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய உபவேந்தர், ஒருவரை பயமுறுத்துவது வீரமல்ல; ஒருவரை அவமானப்படுத்துவது வலிமையுமல்ல; மற்றவரின் கண்ணியத்தை மதிப்பதே உண்மையான மனிதநேயம் எனக் குறிப்பிட்டார். ஒரு வருடம் முன்னதாக பல்கலைக்கழகத்தில் இணைந்திருப்பதற்காக யாருக்கும் புதிய மாணவர்களின் கண்ணியத்தைப் பறிக்கும் உரிமை இல்லை என்றும், அதேபோல் எதிர்காலத்தில் மூத்த மாணவர்களாக மாறும் இன்றைய புதிய மாணவர்களும் யாருடைய கண்ணியத்தையும் பறிக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

"இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு புதிய மாணவரும் பயத்துடன் அல்ல, நம்பிக்கையுடன் தனது கல்விப் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அன்பு, மரியாதை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு நிறைந்த வளாகமே எமது இலக்கு" எனத் தெரிவித்த அவர், பகிடிவதை என்பது ஒழுங்கு மீறல் மட்டுமல்ல, மனிதநேயத்திற்கு எதிரான செயலாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், பல்கலைக்கழகம் பட்டம் வழங்கும் இடமாக மட்டுமல்லாமல், நல்ல மனிதர்கள், சமூகப் பொறுப்புள்ள குடிமக்கள் மற்றும் தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்கும் இடமாகவும் திகழ வேண்டும் என்றார். கல்வித் திறமையுடன் ஆளுமைத்திறன், ஆராய்ச்சி மனப்பாங்கு, ஒழுக்கம், அன்பு மற்றும் மனிதநேயம் ஆகிய பண்புகளையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

பல்கலைக்கழக வாழ்க்கை மாணவர்களுக்கு சுதந்திரத்தை வழங்குகின்றது. ஆனால் அந்தச் சுதந்திரத்துடன் பொறுப்பும் இணைந்துள்ளது. வகுப்பறை, கற்றல், ஆராய்ச்சி, சமூகச் செயற்பாடுகள் என ஒவ்வொரு நாளும் எடுக்கப்படும் சிறிய முடிவுகளே அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்கள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து, தவறான வழிநடத்தல்களிலிருந்து விலகி, "நேற்றைவிட இன்று நான் சிறந்த மனிதனா?" என்ற கேள்வியை தினமும் தங்களுக்குள் எழுப்பிக் கொள்ள வேண்டும் என்றும், பாடப்புத்தகங்களை மட்டுமல்லாது மனிதர்களையும், சமூகத்தையும், தங்களது ஆளுமையையும் அறிந்து வளர வேண்டும் என்றும் உபவேந்தர் அறிவுறுத்தினார்.

இங்கு உரையாற்றிய இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம். ஐ. எம். ஜெஸீல், புதிய மாணவர்களை வரவேற்று உரையாற்றுகையில், பல்கலைக்கழகத்தில் இணைவது ஒரு சாதாரண கல்விப் பயணத்தின் தொடக்கம் அல்ல; மாறாக, ஒரு மாணவரின் வாழ்வில் திருப்புமுனையாக அமையும் ஆளுமை உருவாக்கப் பயணத்தின் ஆரம்பம் எனக் குறிப்பிட்டார். அறிவு, ஒழுக்கம், சமூகப் பொறுப்பு மற்றும் தலைமைத்துவப் பண்புகளை ஒருங்கிணைத்து உலகிற்கு வழிகாட்டும் பட்டதாரிகளை உருவாக்குவதே பீடத்தின் இலக்காகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இஸ்லாமியக் கற்கைகளும் அரபு மொழிக் கல்வியும் வெறுமனே பட்டம் அல்லது சான்றிதழைப் பெறுவதற்கான கல்வி அல்ல என்றும், மனிதகுலத்திற்கு பயனளிக்கும் அறிவு ஆளுமைகளை உருவாக்கும் உயரிய பொறுப்பை சுமக்கும் கல்வியாகும் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, அரபு மொழியில் குவிந்து கிடக்கும் இஸ்லாமிய அறிவுப் பொக்கிஷங்களை ஆழமாகக் கற்று, அவற்றை சமகால உலகிற்கு பொருத்தமான வகையில் எடுத்துச் செல்லக்கூடிய திறனையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

பல்கலைக்கழகக் கல்வி என்பது பாடக்குறிப்புகளை மனப்பாடம் செய்து பரீட்சைகளில் தேர்ச்சி பெறும் நடைமுறையைத் தாண்டி, ஆய்வு, விமர்சன சிந்தனை, அறிவு ஒருங்கிணைப்பு மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இஸ்லாமிய அறிவியலையும் நவீன அறிவியலையும் ஒருங்கிணைக்கும் அறிவு ஆளுமைகளே எதிர்கால உலகின் தேவையாக உள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெற்றோர்களை நோக்கியும் கருத்து வெளியிட்ட பீடாதிபதி, மாணவர்கள் கல்வியில் முழுமையாக ஈடுபட்டு தங்களது இலக்குகளை அடைய குடும்பத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் அவசியம் எனக் கூறினார். உலகளாவிய கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் பீடம் பல்வேறு சர்வதேச ஒத்துழைப்புகளை முன்னெடுத்து வருவதாகவும், அதன் மூலம் மாணவர்களுக்கு விரிவான கல்வி மற்றும் ஆய்வு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பீடத்தின் உதவிப் பதிவாளர் ஆர். பாத்திமா றஜி வரவேற்புரையாற்றினார். பின்னர் இஸ்லாமியக் கற்கைகள் துறைத் தலைவர் பேராசிரியர் (கலாநிதி) எஸ். எம். எம். நஹ்பீஸ், அரபு மொழித் துறைத் தலைவர் கலாநிதி ஏ. எம். றசிக், ஆகியோர் புதிய மாணவர்களை வரவேற்று பல்கலைக்கழகக் கல்வி, ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் எதிர்காலக் கல்விப் பயணத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் வழிகாட்டல் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஏ. எம். எம். ஆகில் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம். எம். பாஸில், முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ. எம். எம். முஸ்தபா, பல்கலைக்கழக நூலகர் எம். எம். றிபாவுத்தீன், கல்வியாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் 2024/2025 கல்வியாண்டில் இணைந்த புதிய மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.












































 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :