தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புவித் தகவல் தொழில்நுட்ப குறுகியகால கற்கைநெறி ஆரம்பம்: பன்முகக் கல்வியும் நவீன தொழில்நுட்பமும் காலத்தின் தேவை – பீடாதிபதி பேராசிரியர் எம். எம். பாஸில்



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் புவியியல் துறையினால் முன்னெடுக்கப்படும் புவித் தகவல் தொழில்நுட்பம் (Geo-Informatics) தொடர்பான குறுகியகால கற்கைநெறியின் மூன்றாவது அணியினருக்கான பயிற்சி, 2026.08.01 ஆம் திகதி கலை மற்றும் கலாசார பீடத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கணினி ஆய்வுகூடத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம். எம். பாஸில் அவர்கள் கலந்து கொண்டு கற்கைநெறியை ஆரம்பித்து வைத்து சிறப்புரையாற்றினார்.

கற்கைநெறியின் இணைப்பாளரும் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ. எல். ஐயூப் அவர்களின் நெறிப்படுத்தலில் நிகழ்ச்சி நடைபெற்றதுடன், புவியியல் துறையின் தலைவரான கலாநிதி ஐ. எல். முகம்மது ஸாஹிர் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

புவித் தகவலியல் துறையில் மாணவர்களின் அறிவையும் நடைமுறைத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்குறுகியகால கற்கைநெறியில் 22 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக ArcGIS மென்பொருள் நிறுவப்பட்டு, தகவல் தொழில்நுட்பத் துறையின் நவீன கணினி ஆய்வுகூட வசதிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இக்கற்கைநெறி ஆகஸ்ட் 1, 2, 7, 8, 9, 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், கோட்பாட்டு அறிவுடன் இணைந்த செய்முறைப் பயிற்சிகளையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம். எம். பாஸில் அவர்கள், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் கற்பித்தல் மற்றும் ஆய்வுகளை மட்டுமன்றி, சமூகத்தின் தேவைகளுக்கு நேரடியாகப் பங்களிக்கும் தொழில்முறை குறுகியகால கற்கைநெறிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றது எனக் குறிப்பிட்டார். பல்கலைக்கழகத்தின் அறிவு சமூக அபிவிருத்தியுடன் இணைக்கப்பட வேண்டியது காலத்தின் அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இன்றைய உலகில் Artificial Intelligence (AI), Data Science, Machine Learning, Spatial Data Analysis போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் புவித் தகவலியல் இணைந்து வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாகவும், இயற்கை விஞ்ஞானம் மற்றும் சமூக விஞ்ஞானம் ஆகிய இரு துறைகளையும் இணைக்கும் முக்கியமான பன்முகக் கல்வித் துறையாக GIS உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இயற்கை அனர்த்த முகாமைத்துவம், நகர திட்டமிடல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்வள முகாமைத்துவம், மக்கள் இடம்பெயர்வு ஆய்வு, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் GIS இன்றியமையாத கருவியாக விளங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர்கள் தங்களது பட்டப்படிப்புடன் மட்டுப்படாமல், தொழில்முறை திறன்களை வளர்க்கும் இவ்வாறான குறுகியகால கற்கைநெறிகள் மற்றும் டிப்ளோமா பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும், இக்கற்கைநெறி எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள புவித் தகவலியல் டிப்ளோமா கற்கைநெறிக்கான முன்னோடி தகுதியாக அமையக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். தனது மாணவப் பருவத்தில் பல்வேறு டிப்ளோமா மற்றும் தொழில்முறைப் பயிற்சிகளைப் பெற்ற அனுபவமே தனது தொழில்வாழ்வில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமைந்தது என்பதையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

இக்கற்கைநெறியை வெற்றிகரமாக முன்னெடுத்த புவியியல் துறையின் தலைவர், இணைப்பாளர் மற்றும் துறை ஆசிரியர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பீடாதிபதி, மாணவர்கள் இவ்வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி நவீன தொழில்நுட்ப அறிவையும் நடைமுறை அனுபவத்தையும் பெற்று தங்களது எதிர்கால கல்வி மற்றும் தொழில்வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தார்.

நிகழ்வில் வரவேற்புரையாற்றிய புவியியல் துறையின் தலைவரான கலாநிதி ஐ. எல். முகம்மது ஸாஹிர் அவர்கள், இக்குறுகியகால புவித் தகவலியல் கற்கைநெறி கோட்பாட்டு அறிவை மட்டுமல்லாது, நிஜ வாழ்க்கைச் சிக்கல்களுக்கு புவித் தகவலியல் தொழில்நுட்பத்தை எவ்வாறு நடைமுறையில் பயன்படுத்துவது என்பதை மையமாகக் கொண்ட செய்முறைப் பயிற்சித் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஏழு நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் மாணவர்கள் முழுமையான ஈடுபாட்டுடன் பங்கேற்று, செய்முறைப் பயிற்சிகளை திறம்படக் கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், கற்கைநெறியின் இறுதியில் செய்முறை அடிப்படையிலான மதிப்பீடு (Practical Evaluation) இடம்பெறவுள்ளதால், மாணவர்களின் தொடர்ச்சியான பங்கேற்பும் செயற்பாடும் மிகவும் அவசியமானவை என்றும் தெரிவித்தார். நேரம் தவறாமை இக்கற்கைநெறியின் வெற்றிக்கான முக்கிய அம்சமாகும் என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், ஒரு செய்முறைப் பயிற்சியைத் தவறவிட்டாலும் பின்னர் அதனை முழுமையாகப் புரிந்துகொள்வது சிரமமாக அமையும் என்பதால், அனைத்து பயிற்சி அமர்வுகளிலும் மாணவர்கள் உரிய நேரத்தில் கலந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

இறுதியாக, புவியியல் துறையின் சார்பிலும் கலை மற்றும் கலாசார பீடத்தின் சார்பிலும் கற்கைநெறியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் அன்புடன் வரவேற்று, பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து புவித் தகவலியல் துறையில் தங்களது அறிவையும் தொழில்முறைத் திறன்களையும் மேம்படுத்திக் கொள்ளுமாறு வாழ்த்துத் தெரிவித்தார்.





















 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :