நூருல் ஹுதா உமர்-
2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் சுற்றாடல் சார் செயற்பாடுகள் தொடர்பான திறன்களை மேம்படுத்தும் நோக்கில், சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் விசேட செயற்பாட்டு முகாம் கடந்த ஜூலை 20 ஆம் திகதி பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம். அன்ஸார் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இம்முகாம், தரம் 5 வகுப்பாசிரியர்களான எஸ்.எல். நவாஹிர் மற்றும் எம்.பி.எம். சிறாஜுதீன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில், ஏனைய ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எச். றியாஸா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு முகாமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். பின்னர் மாணவர்கள் மேற்கொண்ட சுற்றாடல் சார் செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டு, அவர்களின் திறன்களை மதிப்பீடு செய்ததுடன், மாணவர்களின் ஆற்றலையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதிக் கல்விப் பணிப்பாளர், சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயம் அண்மைக்காலமாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும், இணைப்பாடவிதானப் போட்டிகளிலும் தொடர்ச்சியாகப் பெற்று வரும் சிறப்பான பெறுபேறுகள் பாடசாலையின் கல்வித் தரத்தை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். இவ்வெற்றிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு கல்முனை கல்வி வலயத்தின் சார்பில் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா அப்துல் மலீக், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம். அன்ஸார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments :
Post a Comment