நிதி மோசடிகளைத் தடுப்பதற்காக மத்திய வங்கி – பொலிஸார் இணைந்து அம்பாறையில் விசேட விழிப்புணர்வு



பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பாரிய நிதி மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கை மத்திய வங்கியும் பொலிஸ் பொதுப் பாதுகாப்புக் குழுக்களும் இணைந்து ஏற்பாடு செய்த விசேட நிதியறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (22) காலை பெரிய நீலாவணை மாநகர கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பொலிஸ் மா அதிபர் மற்றும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், திருகோணமலையில் நடைபெற்ற பூர்வாங்கக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்கவின் நேரடி மேற்பார்வையில் இந்த விழிப்புணர்வுத் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்ல பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். தனது உரையில், அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடிகள் மற்றும் போலி முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த நிதி மோசடி வலையில் அம்பாறை நகர மக்களோடு மட்டுமல்லாமல் பல கிராமப்புற மக்களும் சிக்கியுள்ளனர். மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், படித்த அரசாங்க அதிகாரிகளும் பாதுகாப்புத் துறைப் பணியாளர்களும் கூட இவ்வாறான மோசடிக்காரர்களிடம் பெருந்தொகை பணத்தை இழந்து ஏமாந்துள்ளனர். இந்த அபாயகரமான நிலையை கட்டுப்படுத்தி, எமது கிராம மக்களை மோசடிக்காரர்களிடமிருந்து பாதுகாப்பதே எமது பிரதான நோக்கமாகும்" என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் கே. பிரபாகரன் மற்றும் பிராந்திய முகாமையாளர் ரி. சஞ்ஜீவன் ஆகியோர், சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டங்கள், இணையவழி நிதி மோசடிகள் மற்றும் அவற்றிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பாக விரிவான விளக்கங்களை வழங்கினர்.

நிகழ்வில் மத்திய வங்கி அதிகாரிகள், பல்வேறு திணைக்கள அதிகாரிகள், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார், கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி, பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, சவளக்கடை, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பிராந்திய கிராம அலுவலர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிதி மோசடிகளின் தீவிரத்தன்மை குறித்து மத்திய வங்கி அதிகாரிகள் ஆக்கபூர்வமான சொற்பொழிவுகள் மற்றும் நடைமுறை ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக, போலி முதலீட்டு நிறுவனங்கள், அதிக இலாபம் தருவதாகக் கூறும் திட்டங்கள் மற்றும் இணையவழி மோசடிகளை அடையாளம் காணும் வழிமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் பதிவாகி வரும் நிதி மோசடிப் புகார்களை சாதாரணமாகக் கருத முடியாது என பொலிஸ் உயர் அதிகாரிகள் வலியுறுத்தினர். பொதுமக்கள் தங்களது கடின உழைப்பால் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடிக்காரர்களிடம் இழந்துள்ளதையும், இத்தகைய மோசடிகள் தொடர்பான விசாரணைகளும் இழந்த பணத்தை மீட்டெடுப்பதும் மிகவும் சிக்கலான செயல்முறையாக இருப்பதையும் சுட்டிக்காட்டினர்.

எனவே, சந்தேகத்திற்கிடமான முதலீட்டுத் திட்டங்களில் ஈடுபடாமல், உரிய அனுமதி பெற்ற நிதி நிறுவனங்களுடனேயே பரிவர்த்தனைகளை மேற்கொள்வதுடன், எந்தவொரு முதலீட்டையும் செய்வதற்கு முன் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :