மருதமுனை மக்களின் பல வருடங்களாக நிலவி வரும் தனியான நகர சபை கோரிக்கையை விரைவுபடுத்தும் நோக்கில், மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் இன்று (16) இரவு மருதமுனையில் உள்ள தனியார் விடுதியில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது.
இச்சந்திப்பில் அமையத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களான எம்.ஐ.எம். முஹர்ரப், பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸீல் மற்றும் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டனர்.
நகர சபைக்கான அனைத்து தகுதிகளும் மருதமுனைக்கு உண்டு
மருதமுனை பிரதேசம் மக்கள் தொகை, நிலப்பரப்பு, வர்த்தக வளர்ச்சி, பொது நிறுவனங்கள் மற்றும் நிர்வாக வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தகுதிகளையும் கொண்டிருப்பதாக அவர்கள் வலியுறுத்தினர்.
1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, கல்முனை கரைவாகு மேற்கு மற்றும் பட்டின சபை என நான்கு தனித்தனி நிர்வாக அலகுகளாக இயங்கி வந்த பகுதி பின்னர் ஒன்றிணைக்கப்பட்டு கல்முனை பிரதேச சபையாகவும், அதன் பின் கல்முனை மாநகர சபையாகவும் மாற்றப்பட்டதாக நினைவூட்டப்பட்டது.
நீண்டகால மக்கள் விருப்பம்
முன்னர் கல்முனை கரைவாகு வடக்கு கிராம சபையின் கீழ் இருந்த மருதமுனை, தற்போது தனித்துவமான நிர்வாக அலகு ஒன்றைப் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கான கோரிக்கையை மக்கள் பல ஆண்டுகளாக முன்வைத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அமைச்சருக்கும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கும் கடிதம்
அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் அண்மையில் கூடி, தனியான நகர சபை கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதுடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக கடிதங்கள் அனுப்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதாவுல்லாவுடன் ஆலோசனை
இம்முயற்சியின் ஆரம்ப கட்டமாக முன்னாள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவை சந்தித்து அனுபவங்களும் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் ஆதரவைப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அபிவிருத்திக்கு புதிய வாயில் திறக்கும் நகர சபை
தற்போது கல்முனை மாநகர சபையின் கீழ் கிடைக்கும் சேவைகள் போதுமானதாக இல்லாத நிலையில், தனியான நகர சபை உருவாக்கப்பட்டால் வீதி அபிவிருத்தி, வர்த்தக கட்டமைப்புகள், சுகாதார வசதிகள் மற்றும் உள்ளூர் அபிவிருத்தித் திட்டங்களை வேகமாகவும் திறம்படவும் முன்னெடுக்க முடியும் என அமையம் நம்பிக்கை வெளியிட்டது.
21 பள்ளிவாசல்கள் ஒன்றுபட்ட குரல்
மருதமுனையில் இயங்கி வரும் 21 பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அனைத்து பள்ளிவாசல்கள் அமையம், இந்த முயற்சியை அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பொதுநல நோக்கத்துடன் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தது.
கல்வியாளர்கள், சட்டத்தரணிகள், நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
“மருதமுனையின் எதிர்காலத்திற்கான தீர்மானமான தருணம்”
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அதிகாரப் பகிர்வு மற்றும் பிராந்திய அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கி வரும் தற்போதைய சூழல், மருதமுனையின் தனியான நகர சபை கோரிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க ஏற்ற காலமாக அமைந்துள்ளதாக அமையத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஊடகவியலாளர் சந்திப்பின் இறுதியில், நகர சபை அமைப்பதற்கான சட்ட வாய்ப்புகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் விரிவான விளக்கமளித்தார்.

0 comments :
Post a Comment