சாய்ந்தமருது நகர சபைக்கான நிர்வாகச் செயல்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை



னாதிபதி, ஜனாதிபதி செயலக செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை தாமதமின்றி ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு Voice of Maruthoor அமைப்பு வினயமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்கி வந்த சாய்ந்தமருது மக்கள், தங்களுக்கென ஒரு தனித்துவமான உள்ளூராட்சி மன்றத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நீண்டகாலமாக ஜனநாயக மற்றும் சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்த மக்கள் அபிலாஷையின் விளைவாக, அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதியிட்ட 2162/50 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சாய்ந்தமருது நகர சபை சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்டது.

எனினும், பின்னர் ஏற்பட்ட சில காரணங்களால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 2026 மே 07 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் (SCFR 07/2023), சாய்ந்தமருது நகர சபையை உருவாக்கிய வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக செல்லுபடியாகும் எனவும், அதற்கான தேர்தல் இன்னும் நடத்தப்படாத போதிலும் அது சட்டப்பூர்வமான உள்ளூராட்சி அதிகார சபையாகத் தொடர்கிறது எனவும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், நகர சபைகள் கட்டளையின் 9ஆம் பிரிவின் பிரகாரம், 2022 மார்ச் 20 ஆம் திகதி முதல் சாய்ந்தமருது நகர சபையின் பதவிக்காலம் ஆரம்பமானதாகக் கருதப்பட வேண்டிய நிலை காணப்படுவதால், அதன் நிர்வாகச் செயற்பாடுகளை இனியும் தாமதப்படுத்துவது பொருத்தமற்றதாகும் என அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், நகர சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பூர்வாங்க மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் இருப்பதாகவும், அவற்றை உடனடியாக முன்னெடுக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், பின்வரும் அவசர நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என Voice of Maruthoor அமைப்பு வலியுறுத்தியுள்ளது:

1. செயலாளர் மற்றும் பணியாளர் நியமனம்
நகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்கும் நோக்கில், கிழக்கு மாகாண பொதுச் சேவையில் தகுதி வாய்ந்த அதிகாரி ஒருவரை செயலாளராக நியமிப்பதுடன், தேவையான நிர்வாக மற்றும் உதவிப் பணியாளர்களையும் உள்வாங்குதல்.

2. நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குதல்
நகர சபையின் செயற்பாடுகள் திறம்பட முன்னெடுக்கப்படுவதற்கான நிர்வாக அமைப்பு, பிரிவுகள் மற்றும் பொறுப்புக் கட்டமைப்புகளை உருவாக்குதல்.

3. வட்டார எல்லைகளை உறுதிப்படுத்துதல்
சாய்ந்தமருது நகர சபைக்குட்பட்ட தேர்தல் மற்றும் நிர்வாக வட்டாரங்களின் எல்லைகளை உறுதிப்படுத்தி, அவற்றை சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் நடைமுறைப்படுத்துதல்.

4. வட்டாரங்களுக்கான உத்தியோகபூர்வ பெயரிடல்
நகர சபையின் எல்லைக்குள் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திற்கும் பொருத்தமான மற்றும் உத்தியோகபூர்வமான பெயர்களை வழங்குதல்.

5. நகர சபை அலுவலகத்தை ஸ்தாபித்தல்
சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்காக அதன் எல்லைக்குள்ளேயே தற்காலிக அல்லது நிரந்தர அலுவலகம் ஒன்றை நிறுவி, பொதுமக்களுக்கான சேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்தல்.

6. அடிப்படை நிர்வாக வசதிகளை ஏற்படுத்துதல்
நகர சபைக்கான நிரந்தர கட்டிடத்திற்குப் பொருத்தமான இடத்தை அடையாளம் கண்டு, அலுவலக உபகரணங்கள், தகவல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பொதுமக்கள் சேவைகளுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துதல்.


சாய்ந்தமருது மக்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்தின் விளைவாக சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ள இந்த நகர சபையின் செயற்பாடுகள் இனியும் முடக்கப்பட்ட நிலையில் இருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ள Voice of Maruthoor அமைப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பினையும் மக்கள் எதிர்பார்ப்புகளையும் மதித்து, தேவையான அனைத்து நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :