முஸ்லிம் அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரையில், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான காலப்பகுதி அவர்களுக்கு மிகப் பெரிய அரசியல் சவால்களால் நிறைந்த ஒன்றாக அமைந்தது.
உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தாக்குதல் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதச் செயலாகும். இதில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் காயமடைந்து வாழ்நாள் முழுவதும் பாதிப்புகளுக்கு உள்ளாகினர். “நாம் ஏன் கொல்லப்பட்டோம்? எதற்காக வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றோம்?” என்ற பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களும் நீதியும் கிடைக்க வேண்டும் என்பது இன்று வரை நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாகவே உள்ளது.
இத்தகைய பின்னணியில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தரப்பில் அமர்ந்திருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நிலைப்பாடுகள், அவர்களின் பாராளுமன்றப் பங்களிப்புகள் மற்றும் இந்த விவகாரத்தில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் ஆகியவற்றை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகமும், முழு நாட்டும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
2026 ஜூன் 10 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விவாதத்தில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் விசாரணைகளின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அதன் சமூக விளைவுகள் குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எதிர்கொண்ட சமூக மற்றும் உளவியல் நெருக்கடிகள் குறித்தும், குறிப்பாக நோன்புக் காலங்களில் அவர்கள் சந்தித்த சிரமங்கள் குறித்தும் கவனம் செலுத்தினார்.
அதேவேளை, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை மற்றும் அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களை பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
மறுபுறம், இந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தரப்பைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரின் உரை குறித்தும் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. விவாதப் பொருளுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் அவரது உரையில் மேலோங்கியிருந்ததாக ஆளும் தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதும், தற்போதைய விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இன்னும் விரிவாகப் பேசியிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் அவதானிகளால் வெளியிடப்பட்டது.
முஸ்லிம் அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரையில், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான காலப்பகுதி மிகவும் சிக்கலான அரசியல் சூழ்நிலையை உருவாக்கியது. அக்காலத்தில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர், தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். எனினும், அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் முன்வைக்கப்படாத காரணத்தால், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் அவர் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார்.
மேலும், தாக்குதலுக்குப் பின்னர் உருவான கடுமையான அரசியல் மற்றும் இனரீதியான பதற்றங்களின் விளைவாக, அன்றைய அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பயங்கரவாதத்திற்கும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவாகவும் உறுதியாகவும் நிலைநிறுத்த வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு தற்போதைய அரசியல் தலைமைகளுக்கு உண்டு. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தில் அவர்கள் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வும், அவர்களின் எதிர்கால அரசியல் நம்பகத்தன்மையைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக அமையக்கூடும்.
தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகள் எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி, வெளிப்படைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் இறுதி இலக்கை நோக்கி நகர்வதற்கு, அனைத்து பாராளுமன்ற பிரதிநிதிகளும் தங்களது தெளிவான மற்றும் பகிரங்கமான ஒத்துழைப்பை வழங்குவது அவசியமாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை அடையாளம் காணும் முயற்சி இன்னும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தொடர்கிறது. இந்நிலையில், சிறுபான்மை அரசியல் தலைமைகள் வெளிப்படுத்தும் மௌனமோ அல்லது தளர்வான அணுகுமுறையோ பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களையும் ஐயப்பாடுகளையும் தோற்றுவிக்கக் கூடும்.
எனவே, காலத்தின் தேவையை உணர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதோடு, தங்கள் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள அவதூறுகளையும் தவறான புரிதல்களையும் நிரந்தரமாக நீக்குவதற்காக, முஸ்லிம் அரசியல் தலைமைகள் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் தங்களது பொறுப்புமிக்க பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இதுவாகும்.

0 comments :
Post a Comment