2025 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (19.06.2026) மாலை வெளியிடப்பட்ட நிலையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகள் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளதாக ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் A.M.M. தாஹிர் தெரிவித்தார்.
அவரின் தகவலின்படி, ஓட்டமாவடி கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் மொத்தமாக 28 மாணவர்கள் சகல பாடங்களிலும் 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இவர்களில், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா பெண்கள் பாடசாலையில் 13 மாணவிகள் அனைத்துப் பாடங்களிலும் A சித்தி பெற்று கோட்டத்தில் அதிகளவான 9A பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளனர். மேலும், 10 மாணவிகள் 8A சித்திகளையும், 6 மாணவிகள் 7A சித்திகளையும் பெற்று பாடசாலையின் கல்விச் சாதனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.
அதேவேளை, பரீட்சைக்கு தோற்றிய மாணவிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் M.L.M. பைசல் தெரிவித்தார். இது பாடசாலை வரலாற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்படுகின்றது.
கோட்டக் கல்விப் பணிப்பாளர் A.M.M. தாஹிர் வழங்கிய தகவலின்படி, ஓட்டமாவடி கோட்டத்தில் 9A சித்தி பெற்ற மாணவர்களின் பாடசாலை வாரியான விபரம் வருமாறு:ஓட்டமாவடி பாத்திமா பாலிகா பெண்கள் பாடசாலை – 13 மாணவிகள்
வாழைச்சேனை அன்-நூர் தேசிய பாடசாலை – 5 மாணவர்கள்
மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் – 4 மாணவர்கள்
வாழைச்சேனை ஆயிஷா பெண்கள் பாடசாலை – 2 மாணவிகள்
ஓட்டமாவடி மத்திய கல்லூரி – 2 மாணவர்கள்
தியாவட்டவான் அறபா வித்தியாலயம் – 1 மாணவர்
செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயம் – 1 மாணவர்
இந்தப் பெறுபேறுகள் ஓட்டமாவடி கோட்டத்தின் கல்வி முன்னேற்றத்தையும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாகவும், பிரதேச மக்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளதாகவும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் A.M.M. தாஹிர் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment