2026 உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இலங்கை ஒளிபரப்பு உரிமை சிரச ஊடக வலையமைப்புக்கு




அஷ்ரப் ஏ. சமத்-
2026 உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் அதிகாரப்பூர்வ இலங்கை ஒளிபரப்பு உரிமை கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் சிரச ஊடக வலையமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஊடகச் சந்திப்பு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் (08) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல், MTV நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யசரத் கமல்சிறி, பியோ டிவி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ருசிர வீரகோன், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமார், MBC நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி புத்தி விக்கிரமநாயக்க, MBC விற்பனைப் பிரிவு முகாமையாளர் ரொஷான் வட்டவல உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமார், 2026 உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் ஜூன் 12 முதல் ஜூலை 20 வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

48 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் மொத்தமாக 104 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அமெரிக்காவின் 16 நகரங்கள் உள்ளிட்ட பல்வேறு மைதானங்களில் நடைபெறும் இந்தப் போட்டிகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை ஒருங்கிணைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் உள்ள ரசிகர்களுக்காக சிரச, சக்தி மற்றும் TV1 ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் ஊடாக பகல், இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களிலும் போட்டிகள் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்படவுள்ளன. இதற்கான ஒலி-ஒளி ஒளிபரப்பு உரிமை கெப்பிட்டல் மகாராஜா ஊடக வலையமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஒளிபரப்புகள் மூலம் இலங்கையில் கால்பந்தாட்ட விளையாட்டிற்கான ஆர்வம் மேலும் அதிகரிப்பதோடு, புதிய வீரர்களை உருவாக்கவும், ரசிகர் வட்டாரத்தை விரிவுபடுத்தவும் வாய்ப்புகள் உருவாகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில், தற்போது உலக தரவரிசையில் 192ஆவது இடத்தில் உள்ள இலங்கையும் எதிர்காலத்தில் தகுதி பெற்று பங்கேற்கும் இலக்குடன் செயல்பட்டு வருவதாக ஜஸ்வர் உமார் தெரிவித்தார்.

2026 உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :