கல்முனை நிர்வாக மற்றும் மக்களின் நீண்ட கால பிரச்சினைகள், கடலரிப்பு உக்கிர சேதங்கள், எல்லை நிர்ணய விடயம், வட்டாரப் பிரிப்பு விடயங்கள் தொடர்பில் பேச நேற்று மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மிகவும் முக்கியத்துவமிக்க ஒன்றாக அமைந்திருந்தது. இக்கூட்டத்தில் கல்முனை மக்களின் எதிர்பார்ப்புகள், நிர்வாக சிக்கல்கள் மற்றும் அபிவிருத்தி தேவைகள், திண்மக்கழிவு முகாமைத்துவ பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர் என அஸ்ரப் ஞாபகார்த்த நலன்புரி மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், இந்நிலையில், கல்முனை விவகாரங்களில் குரல் கொடுக்க வேண்டியவராக கருதப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத மை பலரிடையிலும் ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கல்முனை தொடர்பான முக்கியமான அரசியல், நிர்வாக மற்றும் சமூக விவகாரங்கள் பேசப்பட்ட நேரத்தில், அந்தப் பகுதியில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தக்கூடிய பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்றிருக்க வேண்டியது அவசியமானதாக இருந்தது. குறிப்பாக, ஜனாதிபதி நேரடியாக கலந்து கொண்ட கூட்டம் என்பதால், மக்களின் பிரச்சினைகளை நேரடியாக முன்வைக்கும் அரிய வாய்ப்பாக இது அமைந்திருந்தது. அதனை தவறவிட்ட சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
கல்முனை மக்களின் உரிமைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் அரசியல் மற்றும் சமூக தலைவர்கள் வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இப்படியான முக்கிய வாய்ப்புகளை தவறவிட்டு விட்டு பின்னாளில் ஒப்பாரி விடும் சமூகமாக நாம் இனியும் இருக்க முடியாது என்பதை வலியுறுத்துகின்றோம்.
மேலும், எதிர்காலத்தில் கல்முனை மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெறும் அனைத்து முக்கிய கலந்துரையாடல்களிலும் சம்பந்தப்பட்ட தரப்புகள் பொறுப்புணர்வுடன் பங்கேற்று மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு உரிய பதிலை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.- என்று தெரிவித்துள்ளனர்.

0 comments :
Post a Comment